1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் நாள். தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்த நாள். நம்ம ஊருக்கு பக்கத்து ஊரான நம்பித்தலைவன் பட்டயத்தில் பொங்கல் நாள் அன்று பிரத்யேக விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். குறிப்பாக இளைஞர்களுக்காக சைக்கிள் ரேஸ். ஏர்வாடி பெரியபாலம் தெற்குப் பகுதியில் இருந்து புறப்பட்டு, கைக்காட்டி, கோவில் வாசல், காதி வஸ்திராலயம், டிவிஎஸ் தாண்டி மதகுவிளை, தளவாய்புரம் வழியாக நம்பித்தலைவன் பட்டயம் வந்தடைய வேண்டும். ஏரத்தாள மூன்று முதல் நான்கு கிலோ மீட்டர் தூரம். விரைவாக கடந்து முதலில் வருபவரே வெற்றி பெற்றவர்.
நாங்கள் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலங்களில் நம்ம ஊரில் இருந்து பல சைக்கிள் ரேஸ் போட்டிகளில்; கலந்து கொண்டு மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றவர் எனது நண்பர் மரக்கடை மீரான். நம்ம ஊர் தற்போதைய பஞ்சாயத்து பிரசிடெண்;ட் ஆசாத் அவர்களின் சகோதரர். சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம ஊருக்கு பக்கத்து ஊரான நம்பித்தலைவன் பட்டயத்தில் பொங்கல் அன்று நடைபெறும் சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ள முதல்நாளே எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டோம். சாதாரண ஹெர்குலிஸ் சைக்கிள்தான். ஆனால் புதிது. சைக்கிளில் வெயிட்டை குறைப்பதற்காக பின் கேரியர், முன் கேரியர், ஸ்டாண்ட், செயின் கவர், டைனமோ என எல்லா எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்களையும் அகற்றிவிட்டு, ஓவர் ஆயிலிங் செய்து போட்டிக்கு தயாரானது ஹெர்குலிஸ் சைக்கிள்.
மறுநாள் காலை 9 மணிக்கு எல்லாம் ஒரு குழு நம்பித்தலைவன் பட்டயம் புறப்பட தயாரானது. எல்லோரிடமும் அப்போது சொந்த சைக்கிள் கிடையாது. யாராவது ஒன்றிரண்டு பேரிடம் மாத்திரம் சொந்த சைக்கிள் இருக்கும். அதில் இரண்டிரண்டு பேராக செல்வது என முடிவு. கடைசியில் மிஞ்சியது நான். என்னிடம் சைக்கிள் இல்லை. மற்றவர்கள் சைக்கிள்கள் ஏற்கெனவே புறப்பட்ட விட்டன. மீரான் கேட்டான் 'நீ எப்படில வரப்பொற..' 'நீங்கல்லாம் கௌம்புங்க. நான் ரோட்ல போய் வாடகை சைக்கிள் எடுத்துட்டு வந்துர்ரேன்' என்பது எனது மறுமொழி. போட்டிக்குத் தயாரான சைக்கிள் உட்பட எல்லோரும் புறப்பட்டு போய் விட்டார்கள்.
ரோட்டுக்குச் சென்ற நான் வாடகை சைக்கிள் தேடினேன். எஸ்எம்கே சைக்களிள்கடை, அந்தோணி சைக்கிள் கடை என எல்லா வாடகை சைக்கிள் கடைகளிலும் சைக்கிள்கள் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நடந்து தெற்குரோடு வந்து பார்த்தால் அங்கும் எந்த சைக்கிள் கடையிலும் சைக்கிள் இல்லை. இதற்கிடையே சைக்கிள் ரேஸ் செல்வதற்கு தயாராக அனைவரும் ஏர்வாடி பெரிய பாலத்தில் கூடத் துவங்கி விட்டனர். சரி பரவாயில்லை. கோவில் வாசலில் தேவி சைக்கிள் கடை தொறந்திருக்கும் என்று கோவில் வாசல் சென்று பார்த்தால் அன்று பொங்கல் என்பதால் தேவி சைக்கிள் கடையும் அடைத்திருந்தது. தேவி சைக்கிள் கடை உரிமையாளர் வெங்கடாச்சலம் புத்தாடை உடுத்தி பொங்கல் கொண்டாடத்தில் இருந்தார். காத்திருந்தேன். யாராவது தெரிந்தவர்கள் வருவார்கள். லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று.
Mohammed Meera Sahib Sahib சிறிது நேரத்தில் சர் சர்ரென்று சைக்கிள் ரேஸில் கலந்து கொண்டவர்களின் சைக்கிள்கள் வேகவேகமாக கோவில் வாசல் திருப்பத்தைக் கடந்து பறந்து சென்றன. முதலில் எனது நண்பர் மீரான். அவர் கடந்து போய் 3 நிமிடம் கழிந்து இரண்டாவது, மூன்றாவது என பல சைக்கிள்கள் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற ஆவலில் சிட்டாய் பறந்தன. கிட்டத்தட்ட 6 அல்ல 7 சைக்கிள்கள் கடந்த சென்றபின் பின்னால் ஒரு சைக்கி;ள். லைலா ரைஸ்மில் ஏற்றத்தில் தட்டுத்தடுமாறி வந்து கொண்டிருக்கிறது. உற்றுப் பார்த்தால் சைக்கிளில் நம்ம ஆள் செய்யது பீர். நான் நின்றிருந்த இடத்தை அடைந்ததும் சற்று வேகம் குறைந்தது. 'ஏய்.. எங்க போற' இது என்னுடைய கேள்வி. 'நான் நம்பித்தலைவன் பட்டயம் போறன்;' செய்யது பீரின் பதில். சரி..சரி.. நானும் அங்கதான் போறன். என்னைய ஏத்திக்கோ..' அவனிடமிருந்து பதில் வருவதற்குள் தாவி ஒரு ஓட்டம். மறு வினாடி நான் செய்யது பீர் சைக்கிளி;ன் பின்புறம் உள்ள கேரியரில். 42 கிலோ எடையுள்ள நான் ஏறியதும் சீட்டில் இருந்து சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவன் சீட்டிலிருந்து எழுந்து நின்று எவ்வி மிதித்தான். சற்றே வேகத்துடன் காதி வஸ்திராலயம் திருப்பத்தைக் கடந்து, தங்கையா டாக்டர் வீடு வந்ததும் என்னைத் திருப்பிப்பார்த்த செய்யது பீர் 'ஏய்.. நீ என்னப்பா என் சைக்கிள்லே ஏறிட்ட.. நான் சைக்கிள் ரேஸ்லலடே போய்ட்டிருக்கேன்..' என்றானே பார்க்கலாம். அதை கோயில்வாசல்லேயே சொல்ல வேண்டியதுதானப்பா.. என்ற நான் சட்டென்று இறங்கிக் கொண்டு, அந்த சைக்கிள் சாம்பியன் சைக்கிள் ரேஸ் போட்டியில் தொடர அனுமதித்தது இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
அன்று நடந்த அந்த சைக்கிள் ரேஸ் போட்டியில் முதலாவதாக வந்து, மாலையில் நடந்த விழாவில் திருக்குறுங்குடி காவல் ஆய்வாளர் பெரிய எவர்சில்வர் குடம் ஒன்றினை பரிசாக வழங்க, அதனை பெற்றுக்கொண்டார் எனது நண்பர் மரக்கடை மீரான். - Mohammed Meera Sahib
|