இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால் ஆரம்பத்தில் அல்லோல கல்லோலப் பட்டாலும் பின்பு திறமை, அனுபவம், தத்தம் குடும்பச் சூழல் ஆகியவற்றைப் அனுசரித்து பலப்பல படித்தரங்களில் கிடைத்த வாய்ப்புக்கள் தம் தகுதிக்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் முதலில் அரைகுறையாகவும் பின்னர் ஒருவழியாக மனமொப்பியும் ஈடுபட்டு விடுகின்றனர்.
ஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள்? என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
மேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் "காஸ்ட் ஆஃப் லிவிங்" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு என்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது!
"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம்! என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது.
அதுநாள் வரை சிறிய அளவில் இருந்த "தேவைகள்", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். "செட்டிலாவது" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம்.
அதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் "நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்!" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன.
"முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது."
"ஆமா! முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...!" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள்.
சமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு "பினிஃஷ்" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும்.
உறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும்.
அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.
ஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை.
அதிலும் குறிப்பாக "உலகம்" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம்.
முன்பு கூறியபடி "சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா?
வளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் "தேயும் உபசரிப்பு", "அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த "இமேஜ்" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் "தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது?" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன.
கையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான "கஃல்ப் ரிட்டர்ன்" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள்.
சரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன?
Read more about கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1) | ஆய்வுக் கட்டுரைகள் Courtesy: www.satyamargam.com |