மின் வெட்டு தமிழகம் முழுதும் பல வருடங்களாக தீராத ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
தற்போது வரலாறு காணாத அளவு மின்வெட்டு படு மோசமாய் உள்ளது. சென்னையில் செவ்வாய் கிழமை அனைத்து நிறுவனங்களுக்கும் "மின் விடுமுறை" மார்ச் மாதம் முதல் அமுல் படுத்தியதால், பல நிறுவனங்கள் செவ்வாய் அன்று அலுவலகம் விடுமுறை விட்டு ஞாயிறு வேலை நாள் ஆக்கியுள்ளனர். வாரம் இரு நாள் விடுமுறை விடும் நிறுவனங்கள் செவ்வாய் (மின் தடைக்காக) மற்றும் ஞாயிறு விடுமுறை அறிவித்துள்ளன.
வீட்டில் கரண்ட் இன்றி எப்படி சமாளிப்பது? இங்கு தான் வருகிறது இன்வர்டர் !
இன்வர்டரில் முக்கியமானவை இரண்டு: ஒன்று இன்வர்டர் என்கிற மெஷின். அடுத்தது அதன் பேட்டரி. இவை இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட இருபதாயிரம் ரூபாய் போல் ஆகும். இது மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட் எட்டு மணி நேரம் ஓட உதவும் என்கிறார்கள். ஒரு டியூப் மற்றும் ஒரு மின் விசிறி வரை மட்டும் என்றால் விலை இன்னும் குறைவாக 10,000 to 15,000 ருபாய் ஆகும் என நினைக்கிறேன்.
"மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட்" என்று சொன்னாலும், வீட்டில் உள்ள அனைத்து மின் விசிறி மற்றும் டியூப் லைட்கள் எரிகிற மாதிரி நாங்கள் செய்து விட்டோம். அதாவது அவர்கள் அனைத்து இடங்களுக்கும் கனக்ஷன் தந்து விடுவார்கள். நாம் எங்கு தேவையோ அதை மட்டும் உபயோகித்து கொள்ளலாம். இதனால் கரண்ட் இல்லா விட்டாலும் எந்த ரூமுக்கு வேண்டுமானாலும் வழக்கம் போல் போய் வரலாம். கரண்ட் இல்லாமல், இன்வர்டர் ஓடுகிறது என்றால் ஒரு மின்விசிறி மற்றும் ஒரு டியூப் லைட் மட்டும் ஓடுகிற மாதிரி தான் நாங்கள் பார்த்து கொள்வோம். தேவையின்றி இன்வர்டரை அதிகம் உபயோகிப்பதில்லை.
இன்வர்டர் டிவிக்கும் கூட கனக்ஷன் தந்து விடலாம். லோக்கல் கேபிள் டிவி எனில் அங்கு கரண்ட் இல்லை எனில் உங்கள் வீட்டில் இன்வர்டர் இருந்தாலும் நிகழ்ச்சி வராது. ஆனால் டிஷ் அல்லது சண் டைரக்ட் இருந்தால் கரண்ட் இல்லா விட்டாலும் டிவி பார்க்க முடியும். சீரியல் பார்ப்போருக்கு டென்ஷன் இல்லை பாருங்க :)))
இந்த இருபதாயிரம் ருபாய் ரேஞ்சில் உள்ள இன்வர்டரில் மிக்சி, ஹீட்டர், ஏசி போன்றவை ஓட்ட முடியாது. அதற்கு அநேகமாய் இன்னும் அதிக சக்தி உள்ள இன்வர்டர் தேவை அல்லது ஜெனரேட்டர் இருந்தால் தான் முடியும். இந்த இன்வர்டரில் பேன், டியூப் லைட், கணினி, டிவி இவை மட்டும் தான் இயங்கும். எந்தெந்த இடங்களில் ஏ.சி அல்லது ஹீட்டர் இருக்கோ அந்த லைன் முழுதுக்கும் இன்வர்டர் கனக்ஷன் தர மாட்டார்கள். உதாரணமாய் பாத் ரூமில் ஹீட்டர் உள்ளதால், அந்த ரூம் முழுதும் இன்வர்டர் கனக்ஷன் இருக்காது. இதனால் ஹீட்டர் மட்டுமின்றி, பாத் ரூம் விளக்குகளும் எப்போதும் இன்வர்டர் மூலம் எரியாது !
நடு இரவில் கரண்ட் போய் விட்டால், கரண்ட் போனதே நமக்கு தெரியவே தெரியாது. எப்போது கரண்ட் போனது, எப்போது திரும்ப வந்தது என தெரியாமல் நிம்மதியாக தூங்கலாம். இது தான் இன்வர்டரின் மூலம் கிடைக்கும் பெரிய பயன் என்பேன். அடுத்து பரீட்சைக்கு தயார் செய்யும் குழந்தைகள், கரண்ட் இல்லா விடில் சிரமமின்றி படிக்க முடியும். ( நாம் எல்லாம் பள்ளியில் படித்த போது மெழுகு வர்த்தி அல்லது சிம்னி விளக்கில் படிப்போம்.....)
ஒரு முறை இன்வர்டர் வாங்கினால் அடுத்தடுத்து வரும் செலவு குறித்து பார்ப்போம்:
இன்வர்டரில் உள்ள பேட்டரிக்கு ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். நீங்கள் இன்வர்டர் வாங்கும் நிறுவனத்துக்கு சொன்னாலே வந்து ஊற்றி விடுவார்கள். வரும் பையனுக்கு அவன் வந்து போக பெட்ரோல் செலவுக்கென மட்டும் ஐமபது ருபாய் தர வேண்டும். உங்களுக்கு ரெண்டு மாதத்துக்கு ஒரு முறை ஐம்பது ரூபாய் செலவு. இது மட்டும் தான் தொடர்ந்து வரும் recurring expenditutre.
இதில் உள்ள பேட்டரி ரெண்டு அல்லது மூன்று வருடம் தான் வரும். பின் அதனை மாற்ற வேண்டும். இது தற்போதைய விலையில் எட்டாயிரம் வருகிறது. மேலும் நாம் வாங்கும் இன்வர்டர் instrument ஐந்து அல்லது ஆறு வருடம் தான் உழைக்கும். பின் மாற்ற வேண்டும். இது பத்தாயிரம் ரூபாய் ஆகும்.
ஆக ரெண்டு அல்லது மூன்று வருடத்துக்கு ஒரு முறை எட்டாயிரம் (பேட்டரி ); ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பத்தாயிரம் ரூபாய் (புது இன்வர்டர்) ஆகிய செலவுகளுக்கு நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். புதுசாய் இன்வர்டர் விற்பனை செய்வோர் இதனை உங்களிடம் சொல்ல மாட்டார்கள். நாம் சில வருடங்கள் இன்வர்டருக்கு பழகி விட்டால், பின், மூக்கால் சற்று அழுதவாறே இந்த செலவு செய்ய தயார் ஆகி விடுவோம்.
மைக்ரோடெக் (Microtech ) பிராண்ட், இதன் செயல்பாடு ஓகே. பெரிய அளவு பிரச்சனை இல்லை. மற்ற நிறுவன இன்வர்டர்கள் எப்படி வேலை செய்கிறது என தெரியவில்லை. பேட்டரி வாங்குவதானால் Exide போன்ற நல்ல பேட்டரியாக வாங்க வேண்டும்.
இன்வர்டர் வாங்கும் போது மறக்காமல் கவனிக்க வேண்டியவை:
1 . டியூபுலர் பேட்டரி வாங்குவது நலம். சற்று விலை அதிகம் எனினும் அதிக வருடங்கள் வரும். இதற்கு Replacement வாரண்டி ஐந்து வருடம் போல் தருகிறார்கள் !
2 . இன்வர்டர் & பேட்டரி விலை மற்றும் வாரண்டி நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். மூன்று நான்கு இடங்களில் விசாரித்து விட்டு பெஸ்ட் டீல் எதுவோ அதை பார்த்து வாங்குங்கள்
3 . கணினி உள்ளிட்ட இடங்களுக்கு கனக்ஷன் தந்து விட்டதா என பாருங்கள். எங்களுக்கு கணினிக்கு கனக்ஷன் முதலில் தரலை. சில ஆண்டுகளுக்கு பின் அதை தனி வேலையாக செய்ய வேண்டியதாயிற்று !
4 . வாங்கிய பின் ஓரிரு மாதத்துக்கு ஒரு முறை பேட்டரிக்கு "ஆசிட் " மறக்காமல் ஊற்றவும். இல்லா விடில் லைப் அதிகம் வராது.
5. இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி இரண்டும் ஒரே இடத்தில வாங்குவதே நல்லது. வெவ்வேறு இடம் என்றால், ரிப்பேர் வரும்போது ஒவ்வொருவரும் மற்றவர் மேல் குறை சொல்வார்கள். ரிப்பேர் சரியாகாது. |