lexapro side effects timeline lexapro side effects தாத்தா ஊர் திருக்குறுங்குடியில் இன்று வரை திரையறங்கேதும் கிடையாது. திரைப்படம் பார்க்க வள்ளியூருக்கோ, ஏர்வாடிக்கோ, களக்காட்டுக்கோ தான் செல்ல வேண்டும், வள்ளியூருக்கும், ஏர்வாடிக்கும் செல்வதற்கு காலையிலும், மாலையிலும் திருநெல்வேலி வரை போகும் கணபதி பஸ் ஒரு முறை வரும் அதில் போகலாம், இல்லையேல் அடிக்கொருதரம் வேன் சர்வீஸ் இருக்கும். ஆனாலும் கூட்டிப்போக யாராவது வேண்டுமென்பதால் நான் அங்கு போய் எப்போதாவதுதான் படம் பார்த்திருக்கிறேன். ஒரு முறை அம்மாவோடு வள்ளியூர் அருணா தியேட்டரில் "இது தாண்டா போலீஸ்" படம் பார்த்தது மட்டுமே நினைவில் உள்ளது. மற்றபடி ஏர்வாடியிலும் ஒன்றிரண்டு படம் பார்த்திருக்கிறேன் படங்களின் பெயர் நினைவிலில்லை.
அப்பொழுதெல்லாம் திருக்குறுங்குடிக்கு சினிமா வருடத்துக்கொருமுறை நம்பி கோயில் திருவிழாவின் போது மட்டுமே வரும். திருவிழா 10 நாட்கள் நடக்கும், அஞ்சாந்திருழா [5வது நாள் திருவிழா] அன்று மட்டும் ஒரு படம் போடுவார்கள். முதலில் ஏதாவது சாமி படம் மட்டுமே போட்டுகொண்டிருந்தார்கள், சில வருடங்கள் கழித்து அதைத்தொடர்ந்து "பாட்டு ஃபைட் சூப்பர்" வகையறா படமும் சேர்த்து இரண்டு படம் போடத்துவங்கினார்கள். ஒன்றிரண்டு சாமிப்படங்களையே பல வருடங்களாக மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டாவது படம் மட்டுமே வருடாவருடம் மாறும்.
முதல் படத்துக்கு ஆரவாரம் அதிகமில்லாமல் சற்று தொய்வாகவேயிருக்கும், அவ்வப்போது ஜெய்சங்கரோ, ஏ.வி.எம்.ராஜனோ கடவுளை உதவிக்கு கூப்பிடும்போது கூட்டத்திலிருந்து யாராவது "ஏ சாமி ஏன் இன்னும் வரமாட்டக்கு, போன வருசம் சீக்கிரம் வந்தமாறி இருந்துதே...:" என்று அவர்களுக்காக வருத்தப்படுவார்கள். அதுபோக சாமி திரையில் சீரியல் பல்ப் சகிதம் அவதரிக்கையிலெல்லாம் "ஏ மூதி இப்படிக்கெடந்து தூங்குத அங்க பாரு சாமி வந்திருக்கு" என்று தன்னருகில் தூங்கிக்கொண்டிருக்கும் தன் பிள்ளைகளை அடித்து எழுப்பி புண்ணியம் தேடிக்கொள்வார்கள், பிள்ளைகளும் தூக்கக்கலக்கத்தில் கண்களை கசக்கிகொண்டு "சாமீக் காப்பாத்து" என்று தூங்கிவிட்டதால் நேர்ந்த பாவத்தைக் கழுவிக்கொள்வார்கள். இது தவிர்த்து வேறு அரவம் அதிகமிருக்காது, இரண்டாவது படத்தின் போது மட்டும் பேப்பரை கிழித்துப் பறக்கவிட்டு, ஒன்ஸ்மோரெல்லாம் கேட்டு ஆரவாரம் தூள் பறக்கும். பல நாட்கள் ஆபரேட்டருக்கு பதில் எங்கத்தெரு அண்ணன்கள் யாராவது புரொஜெக்டர் முன் உட்கார்ந்து கொண்டு "ஏல போதுமா இன்னொருக்கா போடவா" என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருப்பார்கள்.
நம்பி கோவில் வாசலலிருந்து நம்பியாறு வரை நீளும் தெருவில் இருபுறமும் வீடுகளுக்கு மத்தியில் சன்னெய்தெரு [சன்னதி தெரு] ஸ்கூலிமிருக்கும். என் பெரியம்மா தொடங்கி, என் அம்மா, மாமா, இரண்டு மூன்று சித்திகள் கடைசியில் நான் வரை இரண்டு தலைமுறையாய் எல்லோருமே சன்னெய்தெரு ஸ்கூலுக்கு மாணவர்களாய் பாலபாடம் கற்கச்சென்று வந்திருக்கிறோம். அதன் வாசலில் திரை கட்டி, புரொஜக்டர் வைத்து இரவு 9, 10 மணி வாக்கில் துவங்கும் படம். சன்னெய்தெரு வாசலில் இருந்தே துவங்கி, புரொஜக்டர் தாண்டி தெப்பக்குளம் ஆர்ச் வரை நீண்டிருக்கும் கூட்டம். அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து பாய், தலகாணி, போர்வை சகிதம் வந்துவிடுவார்கள். திருவிழாவில் கடை போட வந்த பொம்மை விற்பவன், பஞ்சுமிட்டாய், சோன்பப்புடி, கூலிங்கிளாஸ் விற்பவன், வளையல் விற்பவன், ராட்டினம் சுத்துபவன் என்று எல்லோரும் அவரவர் கடையைக் கட்டி அதையே மெத்தையாக்கி அதன் மேல் படுத்திருப்பார்கள். திருவிழா எங்களுக்குத் தான் வருடத்துக்கொருமுறை வருகிறது, அவர்களுக்கோ வருடமெல்லாம் வருகிறது இந்த திருவிழா முடிந்தால் அடுத்து வேறு ஊர் திருவிழா பார்க்க போய்விடுவார்களென்று எனக்கு அவர்கள் மேல் சற்று பொறாமையே உண்டு அப்பொழுதெல்லாம், அதுவும் பொம்மைக் கடைக்காரனைப் பார்க்கையிலெல்லாம் இந்த உலகத்திலேயே அவனைப்போல கொடுத்தவைத்தவன் யாருமில்லை என்றே தோன்றும், ஒரு மஞ்சள் மோட்டார்பைக் பொம்மையை கேட்டு என் அம்மாவிடம் இவ்வளவுதானென்று சொல்லமுடியாத அளவு அடிவாங்கியிருக்கிறேன், அந்த தெருவில் கீழே விழுந்து உருண்டு பிரண்டு என்று எவ்வளவோ சித்து விளையாட்டுகள் செய்தும் அந்த் மஞ்ச மோட்டார்பைக் என் கனவாகவே நிலைத்துவிட்டது, ஆனால் அது போல பல பொம்மைகளை வைத்திருக்கும் இவனைப்போன்ற வாழ்க்கை நமக்குக் கிடைக்காமல் போய்விட்டதேயென்று அவனைப்பார்க்கையிலெல்லாம் பொறாமை சற்று தூக்கலாகவேயிருக்கும்.
படம் போட்டதும் அந்த சத்தம் தாத்தா வீட்டு சமயற்கட்டுவரைக்கேட்கும். அம்மாவுக்கு நான் தெருவில் போய் படம் பார்ப்பது சுத்தமாய்ப்பிடிக்காது, அதை ஏதோ பெருத்த அவமானமாகவே நினைப்பாள். அது எனக்கும் தெரியும், என்னை விட ஆச்சிக்கு இன்னும் நன்றாய்த் தெரியும். படம் போடும் வரை நான் சமயற்கட்டில் தட்டில் எதையாவது வைத்துக்கொண்டு சாப்பிடுவது போல பாவலா பண்ணிக்கொண்டிருப்பேன், "இன்னிக்கு நீ எப்படி போறன்னு நானும் பாக்கனே" என்றபடி எனக்கு எதிரிலேயே அமர்ந்திருப்பாள் அம்மா, "சாப்பிடுதவன் முன்னால சும்மா எதுக்கு குத்தவச்சுகிட்ருக்க" என்று அம்மாவை நகர்த்த முயன்றுகொண்டிருப்பாள் ஆச்சி. நேரம் நகருமே ஒழிய என் தட்டில் எல்லாம் அப்படியே இருக்கும், அம்மா பொருமையிழந்து ஏதாவது திட்டிகொண்டிருப்பாள், ஆனால் ஆச்சியிருக்குமட்டும் அடி விழாது என்று எனக்கு நன்கு தெரியும். அந்த இரவில் நாங்கள் மூவருமே ஒரே சத்தத்துக்காக எங்கள் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு விழித்திருப்போம், வெவ்வேறு நோக்கங்களுடன்.
இறுதியாய் கைத்தட்டலும், விசிலுமாய் படம் துவங்கிய சத்தம் கேட்டதுமே எனக்கு நிலை கொள்ளாது, அம்மா அசையாமல் அமர்ந்திருப்பாள், மெல்ல ஆச்சி "கார்த்தி நீ வா அந்த சினிமாவ பாத்திட்டு வருவோம்" என்று ஆரம்பிப்பாள். அம்மா பதிலேதும் சொல்லாமல் என்னையே முறைத்துக்கொண்டிருப்பாள், மனமெல்லாம் பரவசத்துடன் நான் அம்மாவைப் பார்பேன், "போய்த் தொல, சொல் புத்தியுமில்ல, சுய புத்தியுமில்ல, எக்கேடோ கெட்டு ஒழி" கோபமும், இயலாமையும் தெறிக்கும் அம்மாவின் வார்த்தைகளில். அம்மா பேசி முடிக்குமுன்னரே நானும் ஆச்சியும் சாய்பு கடை தாண்டி தேரடியை நெருங்விடுவோம். நாங்கள் போய்ச் சேர்வதற்குள்ளாகவே எங்கள் பக்கத்துவீட்டு காவகனத்தா ஆச்சி எங்களுக்காக விரித்து வைத்து இடம் பிடித்திருப்பாள், அமர்ந்த சற்று நேரத்துக்கெல்லாம் ஆச்சி தூங்கிவிடுவாள், பின்பு படமெல்லாம் முடிந்ததும் நான் ஆச்சியை எழுப்பிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்புவேன், வரும் வழியெல்லாம் ஆச்சியிடம் அன்றைய சினிமாவின் கதையைச் சொல்லிக்கொண்டே வருவேன் "யாச்சீ இன்னிக்கும் படத்துல அய்யப்ப சாமி அவனுவோ கண்ணல்லாம் குத்திபுட்டாருல்லா..." என்று நான் சொல்லச் சொல்ல கிருட் கிருட் என்று கத்திக்கொண்டே கதைகேட்கும் தவளைகளுக்கும், எங்களோடே பறந்து வந்துகொண்டிருக்கும் மின்மினிப்பூச்சிகளுக்கும் கேட்காதவாரு "அப்படியா...பிறவு..." என்று தூக்கக்கலக்கத்தில் சன்னமாய்க் கேட்பாள் ஆச்சி. படத்தைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் நானும், என் புன்னகையை நினைத்து மகிழ்ந்தபடி ஆச்சியும் மெல்ல வீடு நோக்கி நடந்துகொண்டிருப்போம். வீடு நெருங்க நெருங்க "சத்தம் போடாம வா, உங்க அம்மா எந்திச்சுட்டான்னா தங்குதங்குன்னு நிப்பா" என்று என்னை அமைதிப்படுத்திக்கொண்டே வருவாள் ஆச்சி. ஊர் உறங்கிவிட்ட அந்தப் பின்னிரவில் எங்ளுக்கு வீடு வரைத் துணையாய் எங்களோடு சேர்ந்து சிரித்துக்கொண்டும் கதை கேட்டுக்கொண்டும் மெல்ல எங்களோடே ஊர்ந்துகொண்டிருக்கும் இரவும்...
கட்டுரை: கார்த்திக் முத்துவாழி - திருக்குறுங்குடி.
(From facebook, courtesy: Mohammed Meera Sahib Sahib
|