“நமது ஊர் ஏர்வாடி”
ரினோசா பின்த் பீர் முஹம்மத் D/o அலிமாலிக் பீர் முகம்மத்
(பைத்துஸ்ஸலாம் பேஸ்புக் குழுமத்தின் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)
கும்மிருட்டு ....... அனைவரும் தூக்கம் , நானும் என் மச்சிகளும் மட்டும் கொட்ட , கொட்ட விழித்து கொண்டிருந்தோம் .,
“வந்தாச்சி , வந்தாச்சி ., நான் தான் முதலில் பார்த்தேன் , நான்தான் உன்கிட்டயே பார்த்து சொன்னேன்...........”
யார் இது ???? யாருக்காக இந்த விழிப்பு ???? யார் வருகைக்காக இந்த உற்சாகம் / சந்தோசம் என்ற உங்கள் கேள்விக்கான பதில்
பேருந்து ஹெட் லைட் வெளிச்சத்தில் தெரியும் “ ஏர்வாடி உங்களை அன்போடு வரவேற்கிறது என்ற பலகையை பார்த்து தான் இத்தனையும் ” . ஆம் ! நாங்கள் சென்னை வாசிகள் ....
யார் கூப்பிட வந்து இருக்கிறார்கள் என்பதை கூட பார்க்க தோணாது , நேராக தெருவிற்கு ஓடி செல்ல தான் மனம் தோன்றும் . மண் தெருக்கள் அழகு .........
வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து அதில் இருந்து வரும் மண் வாசனையை முகர்ந்து நடக்கும் தருணம் ..... அழகோ அழகு
கண்ணை சுருக்கி யார் என்று விசாரிக்கும் அப்பா , கண்ணாக்கள் அழகு ,
தன் வீட்டுக்கு வந்தவர்கள் போலவே நம்மை வரவேற்பது அழகு .....
நடக்கும்போதே காதும் , நாவும் ஏங்கும் , பத்மா இட்லியின் “இட்லி , இட்லி” குரலுக்கும் , குளோரி, செல்வியின் “ பச்சை , பச்சையேய் ” குரலுக்கும் .......
என்னதான் மசாலாவும் , மாசியும் ஊரில் இருந்து தூக்கி வெளியூர் வந்தாலும் ,நம் ஊர் ருசி வராது .
ரசம் வைத்தாலும் ஊர் தண்ணிக்கு அதன் சுவையே தனிதான் , எழுதும் போதே நா ஊறுகிறது ..
என்ன ஒரு சுகாதாரம் , இறைச்சி வாங்க எடுத்து செல்லும் மஞ்சள் பையே , விருந்தினரை காட்டி குடுக்கும் ....
நம் சிறு வயது கதைகளை வீட்டை விட திண்ணைகளே அதிகம் சொல்லும் .........
இப்படி என் அனுபவங்களை, என் மகளுக்கு, கதையாக சொல்லும்போது... "நீ தெருவையும் , வீட்டையும் விட்டே நகர மாட்டுற மா , நா அப்பா , கண்ணா விடம் கேட்க போறேன் என்று ஓடிய மகள் பின் நானும் ஓடினேன் ,கதை ஆரம்பிக்கும் முன் இடம் பிடிக்க ...
.
ஓவர் டு அப்பா , கண்ணா........... ஓவர் டு பிளாஷ்பேக்
இக்கரையில் இறங்கி அக்கறை ஏறும் வரை ஆற்று நீரில் கால்கள் நனைய ,நனைய தேங்கொட்டை மாவு போல இருக்கும் பொத்தமணலில் கால்கள் புதைய புதைய , மூங்கில் மர ஓசையிலே ஆல மர நிழலிலே களைப்பாறி , ஆடு , மாடு மேய்க்கும் சிறுவர் , சிறுமிகளோடு விளையாடி உறவாடி ஊற்றிலே நீர் பருகி அந்தி சாயும் வேளையிலே வீடு திரும்பும்போது ஏற்படும் மன மகிழ்வு இனி வருமா ?.,
I.T யில் வேலை பார்த்து ஆடியில் (AUDI) வந்து இறங்கி காலால் விளையாடும் கால் பந்தை கையால் கணினியில் விளையாடும் நம் இளவல்களுக்கு கிடைக்குமா இந்த வசந்த கால நினைவு . முதுமையில் எந்த வசந்த கால நினைவுகளை வைத்து அசை போடுவார்கள்?.
டென்ஷன் குறைக்க பல வழிகள் வந்தாலும் , ஸ்ட்ரெசை குறைக்க பல தீர்வுகள் வந்தாலும் , எந்த நாட்டில் நம் மக்கள் இருந்தாலும் ஏர்வாடியின் வசந்த கால நினைவு ஒரு நொடியில் தீர்வை தரும்.
ஏர்வாடி வளங்களை சொன்னதும் .... இத்தனை வளங்களும் ஏங்கே போய்விட்டது , எதுமா ஆற்றை இப்படி சூனியம்மாக்கியது?????????????????? என்று அவர்கள் கேட்டதும் ..
கண்ணீர் தான் வடிகிறது அனுபவித்த நமக்கல்லவா தெரியும் ஏர்வாடியின் வளமையும் , செழுமையும் .... இப்போது வெறுமையே விஞ்சி இருக்கிறது
தோப்புக்கு வண்டி கட்டி மாட்டு கொம்புகளிலே சலங்கை கட்டி “ ஜல் , ஜல் “ லென்ற சலங்கை ஒழி ஓசையிலே ஓட்டும் மாட்டு வண்டி பந்தயம் அதில் உண்டாகும் உற்சாகம் , தற்கால F1 பந்தயத்தில் “ விர் , விர்” என்ற கார் சத்தத்தில் கிடைக்குமா ??....
இயற்கை மரம் , செடி , கொடிகளுக்கு நடுவே ஓடும் வவ்வா பாலம் , நெல்லியாறு , கலிங்கி , , கல்லடிமா, இரட்டைக்கால் ஆறுகளில் குளித்தால் கிடைக்கும் புத்துணர்ச்சி , தற்காலத்தில் நான்கு சுவர்களுக்குள் ஸ்டீம் பாத் , SAUNA பாத் என்ற பெயரில் பணம் கொடுத்து குளித்தாலும் கிடைக்காது.
நினைத்து பார்க்க முடியாத இயற்கை வளங்களை நம் ஊருக்கு அள்ளி தந்த இறைவனுக்கே எல்லா புகழும் ......
தமிழில்குர்ஆன்.காம் மோ , சத்யமார்க்கம்.காம் மோ , ரஹ்மத் பதிப்பகமோ , I.F.T பதிப்பகமோ , ஏன் ? எந்த இயக்கங்களுமே , இல்லாத காலத்திலும் வாசல் நடை தாண்டாமல், கதவு இடைவெளியில் தெருவை வேடிக்கை பார்க்கும் கன்னிப் பெண்களும் , எப்போது கருக்கல் ஆகும் உற்றார் , உறவினரை பார்க்க போகணும் என்று காத்திருக்கும் உம்மா , சாச்சி , மாமிமார்களுமே நமக்கு இஸ்லாமிய பண்பாட்டை கற்று கொடுத்த முன் மாதிரி முஸ்லிம் பெண்மணிகள் தான் .....
"" நபித்தோழர் அபூ அஸ்ஸெய்து (ரலி) அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது ஆண்களும், பெண்களும் தெருவில் நடந்து செல்வதைக் கண்டார்கள். பின்பு பெண்களை அழைத்துச் சொன்னார்கள், 'நீங்கள் ஆண்களுக்கு முன்னால் நடக்காதீர்கள். காத்திருங்கள். நீங்கள் தெருவின் மத்தியிலும் நடந்து செல்லாதீர்கள்' என்றார்கள். இந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் மேலும் தெரிவிக்கிறார், ' அதன் பிறகு பெண்கள் தெருவின் ஓரமாகவே நடந்து செல்வார்கள். எந்த அளவுக்கு எனில், அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடை அடிக்கடி சுவரில் உராயக்கூடிய அளவுக்கு' என்றார் ""
நபி சொன்னது போலவே தெரு ஓரமாக யார் என்றே அடையாளம் காண முடியாத அளவுக்கு போவதும் நம் ஏர்வாடியின் பண்பாட்டுக்கு ஒரு உதாரணம்...... தற்காலத்தில் ? ? ? ????
அறிவு கண்ணை திறக்க ஆத்திச்சூடிக்கு சூசை மரைக்கார் பள்ளியும் ஜாதி மத பேதமின்றி மாற்றுமத சகோதரர்களோடு ஒழுக்கம் ஒற்றுமை பேணி ஆரம்ப கல்வி பயில பாரம்பரியமிக்க இரண்டு மேல் நிலை பள்ளிகளும் (ஆண்கள் மேல்நிலை பள்ளி / பெண்கள் மேல் நிலை பள்ளி ) .
கல்வி கற்று தரும் ஆசிரிய பெருமக்களும் சிறுவயதிலேயே பெண்குழந்தைகளின் கண்ணியம் போற்றும் முறையில் அமையும் முழு பாவாடை தாவணி சீருடையும் காலை வணக்கமாக ஐந்து கலிமாவும் , அல்ஹம்து சூராஹ்வோடும் ஆரம்பமாகும் பள்ளி பணிகளும் எர்வாடியின் தனிப்பட்ட சிறப்பு , அதனால் தான் என்னவோ அன்று பயின்றவர்களின் வாழ்விலே வசந்தமும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் தன்னடக்கமும் இன்றும் காண முடிகிறது .
பெரியவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் மருந்துப்பெட்டியோடு சைக்கிளில் கோவில் வாசலில் இருந்து வீட்டுக்கு வரும் தங்கையா டாக்டரும் ., நடந்தே வரும் ஷாபி டாக்டரும்.
இயற்கை மூலிகை மருந்து தரும் வெள்ளை வைத்தினாரும் , கறுத்த வைத்தினாரும் ஏர்வாடியின் மருத்துவ வசதிகளை எடுத்துக்காட்டும் சிறப்பு.
அவசர செய்திக்கு அஞ்சல் அலுவலகமும் பழங்கால ஏர்வாடியின் முன்னேற்றத்தை காட்டும் சிறப்பு .
இரண்டு பக்கத்தில் ஏர்வாடியின் வளங்களை முடிக்க முடியுமா ?
முடியும் என்றால் நீங்கள் 1980 க்கு பின் (பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)....... (2000 க்கு பின் பிறந்தவர்களும் எந்த வளங்களும் இல்லாமலும் ஏர்வாடியை விரும்பதான் செய்கிறார்கள் , ஊரின் தனி சிறப்பு இது).
இப்படியே சென்றால் பக்கங்கள் “ DICTIONARY “ அளவுக்கு ஆகிவிடும் போல .....
ஏர்வாடியின் சிறு குறிப்போடு முடிக்கிறேன் .........
ஏர்வாடியின் அனைத்தையும் சொல்லும்போது “வணக்கம் அய்யா , சந்தானத்தையும் ” மறக்க முடியாது......
2 ஆசான்கள் – ஏர்வாடி பிள்ளைகள் அனைவரது உலக அறிவுக்கு - சூசைமரகார் வாத்தியார் / மார்க்க அறிவுக்கு – வாவ்வபுள்ள அப்பா ........( மற்றும் பல ).,
ஏர்வாடியின் குட்டி Dictionary இதோ
தோப்பு – தோட்டத்தில் மக்கள் கூடி , விறகு பொருக்கி கல் கூட்டி சமையலும் , உலக்கை ஊஞ்சலும் ,பட்டமும் , வில் வண்டி பந்தயமுமாக கழியும் ஒரு நாள் .
ரேடியோ மைதானம் – தினதந்தி முதல் தினகரன் வரை அனைத்தும் அனைவருக்கும் ஆடியோ வடிவில் கிடைக்கும் ஒரே இடம்.
வண்டிப்பேட்டை – குரளி வித்தையும் , ஏழு நாள் சைக்கிள் ஒடுப்பவரும் , பண மாலை பரிசும் .
பொத்த மணல் – ஆற்றின் சல சல சத்தம் , இயற்கையான காட்சிகள் , மண்ணை லேசாக தோண்டினாலே தெளிந்த தண்ணீர் தரும் இடம்.
பிராமனாள் கடை – ட்ரில் மாஸ்டருக்கு காப்பி வாங்கும் கடை.( கோவில் வாசல்ல இருந்து பள்ளிகூடம் வருவதற்குள் காப்பி ஐஸ் காப்பி ஆகி இருக்குமே , அந்த நாளின் காப்பி டே ( COFFEE DAY ) போல ).
கை காட்டி - பச்சை பசேலென்று வேட்டா வெளியில் அமைந்து இருக்கும் பஸ் ஸ்டாப்.
குளியல் – இரட்டை வாய்க்கால் / வவ்வா பாலம் / கலிங்கி / கசம் / நெல்லி ஆறு / டிவிஎஸ் கிணறு ..
மாஷா அல்லாஹ் ... எத்தனை வளங்கள் தந்தான் நம் இறைவன் , நம் ஊருக்கு , அத்தனைக்கும் நன்றி சொல்வோம் நம் ரப்புக்கு......
அல்ஹம்துலில்லாஹ் .....
...............................................................................ரினோசா பின்த் பீர் முஹம்மத் . |