காணாமற்போகும் கதைச் சொல்லிகள்...
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் அந்த ராஜாவுக்கு...எனத்தொடங்கி கேட்பவர் மனதுக்குள் கற்பனைக் குதிரைகளை கட்டவிழ்த்துவிடும் கதைச் சொல்லிகளின் நிலை இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. கதை என்று சொல்லும்போதே உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, துள்ளலை அதை அனுபவித்தோர் மட்டுமே உணர முடியும். அதிலும் கிராமத்துக்கதைகள் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. குழந்தைகளுக்குச் கதை சொல்லித்த...ருவது சிறப்பு வடிவம். சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஓரளவுக்கு பாதிப்பில்லாமல் நிகழ்ந்து வந்த கதை சொல்லும் பழக்கம் மெல்லமெல்ல நலிந்து, இப்போது அதன் தடம் மறைந்துவருகிறது.
புதிய சிந்தனைக்கான கருவாகக் கருதப்படும் கதைகள் நீதி போதனைகளை உணர்த்தவும், வெற்றிக்கான கனவு, தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, திறமைகளை மேம்படுத்தவும் வகைசெய்யும் வலிமையுடையது. அந்தவகையில், நல்ல கருத்துகளை விதைக்கும் கதைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கசொல்வது அரிதாகி வருகிறது. மாறாக. கல்வி பெறுவதில் ஆங்கில மோகமும் எப்படியாவது கூடுதல் மதிப்பெண்களை எடுக்கவேண்டும் என்ற வேகமும் மேலோங்கி வருகிறதே தவிர, பிற திறன் வெளிப்பாட்டுக்கான முயற்சிகள் குறைவே.. சுருங்கச்சொன்னால், மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகின்றனர். இதனால் மன அழுத்தம் உளைச்சலுக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதோடு, சில நேரங்களில் தவறிழைக்கவும் நேரிடுகிறது.
வகுப்பு ஆசிரியரையே கொன்ற மாணவன், வகுப்புத்தோழியைபலாத்காரம் செய்த மாணவர்கள் என, அவர்களைத் தொடர்புபடுத்தி ஒழுக்கநெறி மீறல் செய்திகள் தொடர்வது கவலையளிக்கிறது.. இதுபோன்ற சம்பவங்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நூல்களைப் படிப்பது, விளையாடுவது, பயிற்சிபெறுவது என பல நிகழ்வுகளோடு, நீதி போதனைகளை உணர்த்தும் கதைகளைச் சொல்லித்தருவதில் காட்டும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் விளைவும் பெரிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
பல ஆண்டுகளுக்கு முன்வரை பள்ளிகளில் நீதி போதனைக்கென நேரம் ஒதுக்கப்பட்டு தனி வகுப்புகள் நடத்தப்பட்டன. அங்கு சொல்லப்பட்ட மரம் வெட்டியின் கதை, வடை சுட்ட பாட்டி, அப்பம் பிரித்த குரங்கு, ஆமையும் முயலும் என பல கதைகள். நேர்மை, பேராசை, தியாகம், ஒற்றுமை, உழைப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை என பல வாழ்வியியல் போதனைகளை உணர்த்துவதாக இருந்தது.. இன்றைக்கோஇ பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்றால் என்ன என கேட்கும் நிலை உள்ளது.. பள்ளிகளில்தான் இந்நிலை என்றால் பெரும்பாலான வீடுகளிலும் கதைகளுக்குத் தட்டுப்பாடாகத்தான் உள்ளது.
இந்த நிலைக்கு கூட்டுக் குடும்ப வாழ்க் கைமுறையில் ஏற்பட்ட சீரழிவும் முக்கிய காரணம். இன்றைக்கு கதை என்ற பெயரில் டி.வி. மாயாஜாலங்களைக் காண்பதின் விளைவு தெரியாமல் மாணவர்கள், இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்... பொதுவாக சமூகத்தில் நேரிடும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் சினிமா, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சில காரணிகளைக்கூறி தப்பித்துவிடுகிறோம்..
கடமையை மறந்துவிடுகிறோம்.. சமுதாயத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் மாணவர்களுக்கு கதைகளைக் கூறி, நீதி போதனைகளைக் கற்பிப்பது அவசியம்.. கல்விக்காக பல திட்டங்களை உருவாக்கும் அரசுகள், நீதி போதனைகளைக் கற்பிக்க தனி வகுப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.. குழந்தைகளுக்கு கதை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்..அதை அவர்களுக்குச் சொல்லித்தரும் பழக்கம் நம்மிடையே இப்போது குறைந்து போகலாம்.. ஆனால், எதிர்காலத்தில் அவர்கள் தங்களது வாரிசுகளுக்குச் சொல்வதற்கு ஒரு கதை இப்போதே தயாராகி வருகிறது.. அதை இப்படித் தொடங்குவார்கள்.. 'ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு இரண்டொரு கதை சொல்லிகள் இருப்பார்களாம்.. அவர்கள் நிறைய கதைகளைச் சொல்லித் தருவார்களாம்..அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் இல்லையாம்.. நமது தாத்தா, பாட்டிகளாம்.. ஏதோ காரணங்களால் அவர்கள் படிப்படியாக முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களாம்.. என்று அந்தக்கதை தொடரும். அல்லது மேற்கொண்டு சொல்ல கற்பனை வளம் இல்லாமல் முடியும்...
நன்றி : தன்னம்பிக்கை |