இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2
இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2 *** இமாம்களையும்/முஅத்தின்களையும் பற்றி கொஞ்சம் சிந்திப்போம் ***
தினமும் கேட்கும் ஐந்து நேர பாங்கொலி. அதன் பின் அழகிய முறையில் தொழுகை சத்தம். அல்ஹம்துலில்லாஹ். அந்த இமாம்களுக்கும் முஅத்தின்களுக்கும் பள்ளியோடு அதிக தொடர்புடைய ஓர் அழகிய வாழ்க்கை. அதே நேரம் அவர்களை நம்பியும் ஓர் குடும்பம்...
நம் வீடுகளில், தன் மகன் Engineer/Accountant/Computer Programmer என்று படித்து முடித்த அடுத்த கணம் பல பெற்றோர்கள் பிள்ளைகளை நல்ல தொழிலுக்கு அனுப்ப நினைக்கின்றனர்.
குறிப்பாக குறைந்த பட்சம் இந்திய ரூபாய்க்கு ஒரு பதினைந்தாயிரமாவது ஆரம்பமாக கிடைத்தால் தான் சந்தோசம். தப்பில்லை. சுமார் நான்கு வருடங்கள் பட்டப் படிப்பிற்கு, அவர்கள் எதிர்பார்ப்பில் எந்த தவறும் இல்லை. பட்டதாரிகளும் INTERVIEW இல் MEDICAL FACILITY உண்டா? PHONE REIMBURSEMENT உண்டா? BONUS/COMMISSION உண்டா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள் சமீபத்தில் இந்திய நகரத்திலுள்ள சில சிறிய மஸ்ஜித்களுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. இவற்றில் அதிகமான பள்ளிகள் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காத அல்லது முஸ்லிம்கள் மிகக் குறைவாக வாழக் கூடிய இடத்திலுள்ள பள்ளிகள்.
இவர்களோடு பேசும்போது, அந்த இமாம்களும், முஅத்தின்களும் சொல்லும் சோகக் கதைகள் ஏராளம். இதோ சில, *பொதுவாக இமாம்களுக்கு அதிக பட்சம் INR 5,000 - 7,000 சம்பளமாக வழங்கப் படுகிறது. * முஅத்தின்கள் பாடு இன்னும் திண்டாட்டம். வெறும் 3,000 வரை தான் சம்பளம். * அதே நேரம் WATER, ELECTRICITY போன்ற நிர்வாக செலவுகள் இதைவிட பல மடங்கு அதிகம். * தற்கால பள்ளி சூழ்நிலைகளால், வேறு வருமானங்களை வெளியில் போய் தேட முடியாது. * இவர்கள் வேலை, தொழுகை நடத்துவது மட்டுமல்ல, பள்ளிகளை * சுத்தம் செய்வது ஏன் கழிவறைகளையும் சுத்தம் செய்பவர்கள் பலர். * வீடு வீடாக 25-50 சந்தா பிரிக்க தினம் போக வேண்டும். * பல இடங்களில் இவர்கள் கண்ணியங்களும் குறைந்து விடுகிறது.
இன்னும் பல..
இவர்கள் இதற்காக செலவழித்த வருடங்கள் 4 அல்ல. அதற்கும் மேல். அதிகமானோர் 8 ஆம் வகுப்போடு, இன்னும் 8 வருடங்கள் ஆலிம், ஹாபிழ் என்று படித்தவர்கள். ஆனால் இன்றைய விலை வாசிகளுக்கு மத்தியில், மேல் சொன்ன சம்பளத்தில் குடும்பம் நடத்த தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். சில சமயங்களில் வெளியில் சொல்லாத கை ஏந்துபவர்கள். இவர்கள் பற்றி பேச்சை எடுத்தால், அதெல்லாம் சும்மா ரீல் விடுவார்கள், அதான் கத்தம் ஓதி காசு பார்கிறார்களே, அவர்கள் படிக்காதது அவர்கள் குறை தானே, எப்படியும் 10,000 ரூபாய் தேடுவார்கள் என்று அவர்களை பார்த்து அடுக்கு மொழி பேசி, அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறோம். அவர்களுக்கு இது போதும் என்று நினைக்கும் நாம், வீட்டில் யப்பா, யப்பா 1,000 ரூபாயும் ஒரே நாளில் பறந்து போய் விடுகிறது என்றும், IT கம்பெனியில் நாம் எடுக்கும் 50,000 கம்மிதான் என்றும் அங்கலாய்க்கிறோம். நம் உள்ளங்களில் அதிகமாக மனனமாக இருப்பது JAVA, AUTOCAD, ACCOUNTING STANDARD, BUSINESS TECHNIQUE தான். அவர்கள் உள்ளத்தில் இருப்பது முழு அருள் மறைக் குர்ஆன். அந்த ஹாபிழ்களுக்கு சொர்கதிலுள்ள நிலை தனி. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கியாமத் நாளில்) குர்ஆனை உடையவரிடம், "நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது" எனக் கூறப்படும். (எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்) - (அபூதாவூது, திர்மிதி: அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ்(ரலி)) அல்ஹம்துலில்லாஹ். அதே நேரம், இங்கு அவர்கள் நிலை பரிதாபம். பலர் மிகவும் வறுமையில். YEARLY INCREMENT, KIDS SCHOOL FEES , PROMOTION என்பதெல்லாம் பலருக்கு பகல் கனவு. சரி இது வேண்டாம் வேறு கம்பெனிக்கு போகிறேன் என்று சொல்ல வேறு வேலைகளும் தெரியவில்லை, வேறு நிறுவனம் என்றால் அதுவும் ஒரு மஸ்ஜித் தான். ஒவ்வொரு ஊரிலும் குறைந்த பள்ளிகளே இருப்பதும் எல்லாவற்றிலும் ஒரு இமாம், முஅத்தினார் இருப்பதாலும் வேறு வழி இல்லை. திருமணம் முடித்தால், குழந்தை பிறந்தால், திடீர் மருத்துவ செலவுகள் ஏற்பட்டால் மிகவும் திண்டாட்டம். எழுதப் படாத விதி, இவர்கள் குழந்தைகள் GOVERNMENT SCHOOL இல் படிக்க வேண்டும். இவர்கள் மருத்துவங்கள் GOVERNMENT HOSPITAL இல் தான். ஒருவர் கூறும்போது. "சந்தா 50 ரூபாய் வீதம் சுமார் 60 வீடுகளில் 3,000 கிடைக்கும். கடைகள்/Trustees மூலம் 7,000 கிடைக்கும். இதில் நானும் முஅத்தினாரும் சம்பளம் எடுப்போம். நோன்பில் சுமார் 30,000 பிரியும். இதில் ஒரு மாத சம்பளம் போனசாக எங்களுக்கு கிடைக்கும். மீதி அடுத்த வருட நிர்வாக செலவுக்கு ஒதுக்கி விடுவோம் என்றார்." "வறுமை குப்ருக்கு இட்டு செல்லும் என்பது நபி மொழி."
வறுமையிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை. மாற்று மதத்திலுள்ள மதப் போதகர்களின் நிலையோடு (அவர்கள் வீடு, வாகனம் etc) ஒப்பிட சொல்லவில்லை. ஆனால் இவர்களின் அடிப்படை தேவைகளாவது நிறைவேரட்டுமே. இஸ்லாமிய வரலாற்றில் தொழுகை நடத்தும் தலைவர்களின் கண்ணியங்களையும் யோசித்து பார்போம். " உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்” [ அறிவிப்பாளர்: அபு தர்தா(ரலி) , நூல்: திர்மிதி, அபுதாவுத்,.....] நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனைத் திறமையாக நன்முறையில் ஓதுபவர் நல்லோர்களான சங்கைமிகு மலக்குகளுடன் சுவர்க்கத்தில் இருப்பார். குர்ஆனை (இயலாமையால்) கஷ்டப்பட்டவராகத் திக்கித் திக்கி ஓதுகிறவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம் : ஆயிஷா (ரலி)) சஹாபாக்கள் கஷ்டப் படவில்லையா, அவர்களும் ஏழைகள் தானே என சொல்லும் நாம், அபூபக்ர் (ரழி) போல அனைத்து சொத்தையும் கொடுத்து விட்டு ஏழையாக வாழ தயார் இல்லை. சரியான நீண்ட கால தீர்வு என்பது, வெளியுலகம் தெரியக் கூடிய ஹாபிழ்களை உருவாக்குவதும், சரியான திட்டமிட்ட பள்ளி நிர்வாகங்களும் ஆகும். அதுவரை இந்த நிமிடம் இவர்களுக்காக என்ன செய்யலாம்? முதலில் இதே நிலைமை உங்களை சுற்றியும் உள்ளதா என்பதை கண்டறியுங்கள். உங்கள் ஊர் மஸ்ஜித்களை விசாரித்தாலே ஓரளவு புரியும்.
அவ்வாறு இருப்பின், ஜமாஅத் மூலமாக எதுவும் செய்யலாம்.
இவர்களுக்கு, விசேட தினங்களில் எல்லா வீட்டிலிருந்தும் மொத்தமாக ஒரே நேரத்தில் பிரியாணி கொடுப்பது, பெருநாளுக்கு லுங்கி கொடுப்பது என்று மட்டும் சிந்திக்காமல், இவர்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை பொறுப்பு எடுக்கலாம். இவர்களது முதிய பெற்றோர்களின் மருத்துவ செலவுகளை பொறுப்பு எடுக்கலாம். குடும்பத்தை பார்க்க ஊர் போகும்போது, பஸ் டிக்கட் வாங்கிக் கொடுக்கலாம். இன்னும் பல. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு தொழுகையிலும் இவர்களுக்காக துஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் இவர்கள் படித் தரங்களை இம்மையிலும் மறுமையிலும் உயர்த்துவானாக.
ஆமீன்.
குறிப்பு:
* உதவிகள் அவர்களை தங்கி வாழும் நிலைக்கோ அல்லது கையேந்தும் நிலைக்கோ ஆக்கக்கூடாது * உமது பள்ளிகளில் இந்த நிலைமை இல்லாவிட்டால் அவற்றை வைத்து நாம் வாதிடாமல், இப்படியும் கஷ்டப்படும் இமாம்களும் முஅத்தின்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்வோம்
எழுத்துக்களில் தவறு இருந்தால் மன்னிக்கவும் .
வஸ்ஸலாம்.
அபூ அம்மாராஹ்
abuammaarah@yahoo.com
|