நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!
( தொடர்- 2 )
கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
( தொடர்- 1 )
நபிகளாரின் அளப்பரிய அன்பை பெற்ற மதீனத்து மக்களை நாமும் பார்த்து விடவேண்டும் என்ற ஆவலுடன் அடுத்த வாரமே தம்மாமிலிருந்து மதீனாவை நோக்கிய எனது பயணம் தொடர்ந்தது.
1300 கிலோமீட்டர் கடந்து மதீனாவின் எல்லையை அடைந்தேன் எனது வாகனம் மதீனாவின் பிலால்மஸ்ஜித் அருகில் நின்றபோது மாஷாஅல்லாஹ்....நான் கண்ட காட்சிகள் என்னையே மெய்சிலிர்க்க வைத்தது.
நான் மதீனாவை அடைந்த போது நேரம் சரியாக அதிகாலை 3.30 மணி.
பிலால்மஸ்ஜித் அருகில் எனது வாகனம் நின்றபோது அந்நேரத்திலும் கூட்டம்,கூட்டமாக மக்கள் மெயின்ரோட்டை கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.இந்நேரத்தில் இவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? என எனது குடும்பத்தாரிடம் வினவிய போது பெருமானாரின் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்,
அங்கே போய் தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றுவார்கள் என்ற பதிலை செவிமடுத்த போது என்னையே அறியாமல் நான் மெய்சிலிர்த்துப்போனேன்.
ஜும்மா தொழுகைக்காக பாங்கு சொன்னதும் எப்படி கூட்டம்,கூட்டமாக,பள்ளியை நோக்கி மக்கள் விரைவார்களோ?அதுபோலவே தஹஜ்ஜத் தொழுகையின் நேரத்தில் மதீனாவில் நான் கண்ட காட்சிகள் இருந்தன.
இதை நான் சிலாகித்து சொல்வதற்கு காரணம்,அந்நேரத்திலும் கூடிய கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் மதீனத்து மக்களே!
பெருமானார்(ஸல்)தமது ஜீவிய காலத்தில் எடுத்துரைத்த நற்போதனைகளை பெருமானாரின் மறைவுக்குப்பிறகும் கூட அம்மக்கள் இடைவெளியின்றி பின்பற்றுவது போற்றுதலுக்குரியதாகும்.
இந்த காட்சிகளையெல்லாம் கண்டு விட்டு தங்குவதற்கு இடம் தேடினோம்,
அப்போது ஒரு மனிதரை கண்டு நாங்கள் குடும்பத்துடன் வந்துள்ளோம்,எங்களுடன் பெண்களெல்லாம் இருப்பதால் தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான வீடு வேண்டும்.எங்கே கிடைக்கும் என வினவிய போது,
உங்களைப்போன்ற வெளியூர் மக்களுக்கு எங்களது மதீனாவைப்போல ஒரு பாதுகாப்பான ஊர் உலகில் எங்குமே இருக்கமுடியாது.அதனால் இங்கே எவ்வளவோ விடுதிகள் உள்ளன நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் என சொன்னவர்
ஒரு குறிப்பிட்ட விடுதியின் பெயரையும் சொல்லி அங்கே போய் தங்குங்கள் உங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் கிடைக்கும் என்ற அவரின் இதமான பதிலை வைத்தே தெரிந்து கொண்டேன்,கண்டிப்பாக இவர் மதீனாவாசியாகத்தான் இருக்கும் என்று!
அம்மனிதர் சொன்ன விடுதியிலேயே நாங்கள் தங்கினோம்.சகல வசதிகளுடன் மிகக்குறைந்த வாடகையில் வீடு கொடுத்தார்கள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நான் கன நேரமும் தாமதிக்காமல் உடனே குளித்து ஒழு செய்து புத்தாடை அணிந்து வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு அதிகாலை 4.20 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியேறி உலக மக்களின் அருட்கொடையாம் அண்ணலெம்பெருமானாரை நேரில் பார்க்கப்போகிறோம் என்ற குதூகலத்துடன் மதீனாவின் வீதியில் நடக்க ஆரம்பித்தேன்.
மெயின் ரோட்டை கடந்ததும் மஸ்ஜிதுந் நபவியின் மினாரா தெரிய ஆரம்பித்தது,
பெருமானாரின் வீட்டை நெருங்க,நெருங்க எனது இதயத்துடிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தன,ஒரு வழியா பெருமானாரின் வீட்டை(மஸ்ஜிதுந்நபவியை)அடைந்ததும்,
(ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே சென்று அஸ்ஸலாமு அலைக்கும் யாரசூலுல்லாஹ்......என்ற முகமனுடன் சுபுஹுத்தொழுகையை முடித்து விட்டு நீண்ட நேரம் பெருமானாரின் ஜியாரத்தில் இருந்தேன்.
கபுரு ஜியாரத்தை (ஸிர்க்)இணைவைத்தல் என சொல்லிக்கொண்டிருக்கும் சிலர் அதற்கான பெரிய ஆதாரமாக மதீனாவில் (ஸல்)அவர்களின் ஜியாரத்தின் போது கைகளை உயர்த்தினால் முத்தவா என்ற மார்க்க அறிஞர்கள் பிரம்பால் கையில் அடிப்பார்கள்.என்ற விஷயத்தை கூறி தங்களது வாதத்திற்கு வலிமை சேர்க்க முயற்சிக்கிறார்கள்.
இது போன்ற குறுகிய மனமுடையவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் மதீனா வர வேண்டும் என விரும்புகிறேன்.காரணம்,(ஸல்)அவர்களை நான் ஜியாரத் செய்து கொண்டிருந்தபோது,
எனக்கு அருகில் ஒருவர் தேம்பி,தேம்பி அழுது கொண்டிருந்தார்.
நான் ஜியாரத்தை முடித்து விட்டு அழுதுகொண்டிருந்த நபரை பார்த்தேன்,அதிர்ச்சி அடைந்தேன்.அவர் வேறு யாருமல்ல,எங்களுக்கு தங்கும் விடுதியை அடையாளம் காட்டித்தந்த மதீனாவாசி தான்.
மனிதருள் மாணிக்கம் எம்பெருமானார் மீது மதீனத்து மக்கள் வைத்திருக்கும் நேசத்திற்கு இதை விட ஒரு சான்று தேவைப்படுமோ?
(ஸல்)அவர்களின் ஜியாரத்தை முடித்துவிட்டு தாமதிக்காமல் மஸ்ஜிதுந்நபவிக்கு எதிரில் உள்ள (ஜன்னத்துல் பகீஃ)சுவன வாசிகளின் அடக்கஸ்தலத்திற்கு சென்றேன்.முகமன் கூறி உள்ளே நுழைந்த நான்,அங்கே கண்ட காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.......
(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)
இன்ஷா அல்லாஹ்...
தொடரும்.....
( தொடர்- 1 )



|