Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
உளுந்து சாகுபடிக்காரனின் சாபம் – ம.செந்தமிழன்
Posted By:Hajas On 6/14/2014 3:35:51 PM

இன்று உழவனின் நிலையை அழகா எடுத்துசொல்லி, நாளைய மற்றவர் நிலையையும் தீர்க்கமாக சொல்லி உள்ளார் இந்த நண்பர். உழவனின் நிலை இதுபோல தொடர்ந்தால் இவர் சொன்னது நடை பெரும் காலம் வெகுதுரம் இல்லை.
உளுந்து சாகுபடிக்காரனின் சாபம் – ம.செந்தமிழன்
---------------------------------------------------------------------

என் பெயர் விவசாயி. வீட்டில் வைத்த பெயரைப் பற்றி நீங்கள் எந்த ஆய்வுக்கும் போகத் தேவையில்லை. ஏனெனில், எல்லாருக்கும் போலவே வீட்டில் எனக்கு வைத்த பெயர் மகிழ்வூட்டக்கூடியது. எல்லாரையும் போலவே அப் பெயருக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. என் கிராமத்தில் என்னை ஏமாளி என்றும், நகர எல்லைக்குள் கோமாளி என்றும் அழைப்பது வழக்கம். மாநகர எல்லைக்குள் எனக்குப் பெயரிடும் அக்கறையைக்கூட யாரும் காட்டுவதில்லை. உங்களிடம் பேச நிறைய சேதிகள் என்னிடம் உண்டு. இப்போது நான் என் உளுந்து சாகுபடி குறித்துப் பேச விரும்புகிறேன்.

நீங்கள் இன்று காலையில் உண்ட இட்லியிலோ தோசையிலோ வடையிலோ என் தோட்டத்து உளுந்து இருந்திருக்கலாம். இது ஒன்றே உங்களுக்கும் எனக்குமான உறவு. இந்த உறவின் உரிமையில்தான் உங்களுடன் பேசும் துணிவு எனக்கு ஏற்பட்டது. அந்த உணவில் என்னுடைய மற்றும் என்னுடன் தோட்டத்தில் வேலை செய்தவர்களுடைய வியர்வை, கண்ணீர் வாடை இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், உங்களுக்குக் கிடைப்பவை அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டவை. நீங்களும் அவற்றையே விரும்புகிறீர்கள். சுத்திகரிப்புச் செய்யப்படும் ஆலைகளில் தேடிப் பார்த்தாலும் அவற்றை உணரக்கூட முடியாது. ஏனெனில் அவை மாந்திரிக மாற்றத்திற்குட்பட்டுக் கரன்சிகளாக மாறி ஆலை உரிமையாளர்களின் மற்றும் வணிகர்களின் கல்லாக்களில் உறைகின்றன. காந்தியின் சிரிப்பில் கண்ணீரையோ வியர்வையையோ தேடும் வல்லமை யாருக்கு உண்டு?

கடந்த மார்கழிப் பட்டத்தில் ஒன்றரை ஏக்கரில் நான் உளுந்து விதைத்தேன். மாசி மாதத்தில் அறுவடை செய்தேன். மன்னிக்கவும், என்னால் டிசம்பர் மார்ச் என்று எழுத இயலவில்லை. மார்கழி என்றால் பனி. மாசி என்றால் முன்பனியும் வெயிலும். இதுதான் என் போன்றோரின் கணக்கு. மார்கழி என்றால் இசைக்கச்சேரி என்பது உங்களில் சிலருக்கான கணக்காக இருக்கலாம். மார்ச் என்றால் பட்ஜெட் சிலருக்கான கணக்காக இருக்கலாம். மார்கழியில் பனியில் உழுவதும் களை பறிப்பதும். மாசியில் வெயிலில் நின்று நீர் பாய்ச்சுவதும் அறுவடை செய்வதுமே எங்கள் புத்திக்கு எட்டியவை.

உளுந்து குறித்த வரவு செலவுக் கணக்கை உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
உழவு (டிராக்டர்) – ரூ 1750
விதை (ஏடிடீ5)- ரூ 1650
விதைப்பு உழவு (ஏர்) ரூ 500
களை பறிப்பு ரூ 3265
பாத்தி பிடிக்க ரூ 900
அறுவடை ரூ 1200
தூற்றுதல், சுத்தம் செய்தல் ரூ 950
உளுந்து மூட்டைகளைச் சந்தைக்குக் கொண்டு செல்ல வண்டி (டாடா ஏசி) வாடகை ரூ 850
மூட்டை தூக்குபவர் கூலி ரூ 60
மொத்தம் ரூ 11065/-

இதில் நானும் என் தோட்டத்தில் பணிபுரிபவரும் பார்த்த வேலைகளுக்கான கூலி எதுவும் சேர்க்கப்படவில்லை.ரசாயன உரம், பூச்சி விக்ஷம் ஆகியவை பயன்படுத்தவில்லை. இவற்றைப் பயன்படுத்துவது பாவம் செய்வதாகும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதனால்தான் கிராமத்தில் எனக்கு நான் சொன்ன பேர் வைக்கப்பட்டுள்ளது என்பதை தயை செய்து குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும், இந்த சாகுபடி நடந்த காலத்தில் நான் வருமானம் தரக்கூடிய வேறெந்த வேலையும் செய்யவில்லை. விவசாயமும் ஒரு வருவாய் ஆதாரம் என்பதும், வேறெந்த வேலையைக் காட்டிலும் இதில் புண்ணியம் சேரும் என்பதும் என் நம்பிக்கை. இதனால்தான் நகரத்தில் எனக்கு நான் சொன்ன பேர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் தயை செய்து குறித்துக்கொள்ளுங்கள்.

மொத்த விளைச்சல் 300 கிலோ.
ஒரு கிலோ உளுந்து வாங்கப்படும் விலை ரூ 42/-
நான் வாங்கிய விதையின் விலை 110 ரூபாய் என்பதைத் தங்கள் மேலான கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.இதுபோக, நீங்கள் கடைகளில் வாங்கும் உளுந்தின் விலை ஒரு கிலோ ரூ 80 என்பதை உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லைதானே?என் போன்றோரின் உளுந்து வாங்கப்பட்டு தோல் நீக்கப்பட்டு உங்களிடம் வந்து சேர்கிறது. வாங்கி விற்பவர்கள் தாங்கள் செய்யும் இந்தச் சிறிய வேலைக்கு எடுத்துக்கொள்ளும் ஆதாயம் கிலோவுக்கு 38 ரூபாய். கிலோ ஒன்றுக்கு 42 ரூபாய் என 300 கிலோவை விற்றால் 12600ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் மார்கழி முதல் மாசி வரை நானும் என் பணியாளரும் பார்த்த வேலைக்குக் கிடைத்த தொகை ரூ.1535/

இந்த சொற்பத் தொகையில் எந்த மனிதனும் வாழ முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி வாழ்ந்தாலும் அவன் நாகரிகம் எனப்படும் சொல்லுக்கான எந்தத் தகுதியையும் அடைய முடியாது என்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்தானே! மாநகர எல்லைக்குள் என்னை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளாததன் காரணம் இதுவே என்பதை தயை செய்து குறித்துக்கொள்ளுங்கள்.

நீங்களும் பாவம்தான். உங்களிடமும் போதிய பணமில்லை. ஆனாலும் உங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்கக் காரணம் என்ன என்பதை அருள் கூர்ந்து யோசித்துப் பாருங்கள். அதேபோல, ஒரு மளிகைக் கடைக்காரர் உங்களையோ உங்கள் மனைவி மக்களையோ பார்த்து ’சார்...மேடம்’ என்று அழைத்து மரியாதை செலுத்துபவர், உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார் என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

நீங்கள் மாதம் 20 ஆயிரம் சம்பாதித்தால் உங்கள் குடியிருப்பு கடைக்காரருக்கு மாதம் 4ஆயிரம் செலுத்துவீர்கள். 50 ஆயிரம் சம்பாதித்தால் 8 ஆயிரம் செலுத்துவீர்கள். உள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல், குடியிருப்பின் சம்பளத்தனைய மளிகைக் கடைக்காரர் உயர்வு!

சாகுபடி செய்யும் எங்களைவிட மொத்த வியாபாரிகள் மிக நன்றாக வாழ்வதை நாங்கள் பார்க்கிறோம். உங்களுக்கு ஏதோ வேலை இருக்கிறது. சம்பாத்தியம் வருகிறது. ஆகவே, இவை குறித்த கவலை தேவையில்லை என நீங்கள் எண்ணலாம். உங்கள் தாய் தந்தையர் இதே போல நினைத்தார்கள். அதனால்தான், 10 ரூபாய் உளுந்து அவர்கள் காலத்தில் 40 ரூபாய் ஆனது.
நீங்களும் இதையே நினைத்தால் உங்கள் மக்கள் 250 ரூபாய் கொடுப்பார்கள். அதுவரை நீ இருப்பாயா? என உங்களில் சிலர் என்னைப் பார்த்துக் கோபப்படுவதை என்னால் உணர முடிகிறது.

நான் இருப்பேன். என் வீட்டு இட்லி தோசை வடைக்கு மட்டும் உளுந்து விதைத்துக்கொண்டும் பணம் சம்பாதிக்கும் வேலை பார்த்துக் கொண்டும் ஓய்வு நேரத்தில் மட்டும் என் தோட்டத்துக்குப் போய்க்கொண்டும்...பிடித்த காய்கறிகளைப் பயிரிட்டுக் கொண்டும் நான் இருப்பேன்.

நண்பர்களே... பணம் பொதுவானது. அதை நாங்களும் சம்பாதிக்க முடியும். நிலம் எங்களுக்கானது. அது உங்களில் பலருக்கு இல்லை என்பதை நானறிவேன். சாகுபடி அறிவு எங்களுக்கு மட்டுமேயானது. அது உங்களில் எவருக்கும் இருக்காது என்பதையும் நானறிவேன்.

இந்தக் கடிதத்தை எழுதத் தோன்றிய காரணத்தையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.உளுந்து விலை உயர்வுக்காக நீங்கள் வருந்தியும் கோபமுற்றும் வருகிறீர்கள். உங்களுக்காக முதல்வரும் பிரதமரும் பதிலளிக்கிறார்கள். காய்கறி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை குறித்தும் உங்களுக்குக் கோபம் உண்டு.ஹமாம் சோப்பு விலை வருடம் தோறும் உயர்வது குறித்து நீங்கள் யாரும் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிக்கு எதிராகப் போராடியதாக நான் கேள்விப்படவில்லை. பாட்டா செருப்பு விலை உயர்வு குறித்து உங்களில் ஒருவரும் பாட்டா கடை முன் உரக்கப் பேசுவது கூட இல்லை. தேநீர் ஒன்று 5 ரூபாய்க்கும் 4 ரூபாய்க்கும் விற்கப்படுவதை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை.தண்ணீர் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்கப்படுவதையும் அதை நீங்கள் வாங்குவதையும் பார்க்கும் எங்கள் வயிறு எரிகிறதுதான். பெப்சி கோக் இன்ன பிற இத்யாதிகளைக் கடைக்காரர் சொல்லும் விலை கொடுத்து நீங்கள் வாங்குவதையும் அந்தப் பொருட்களின் விலை குறித்து நீங்கள் அலட்டிக்கொள்ளாமலே இருப்பதையும் பார்த்த பிறகுதான் இந்தக் கடிதம் அவசியமானது எனக்கு.

இலவச மின்சாரம், மானியம் ஆகிய சலுகைகள் எங்களுக்கு இருப்பதாக உங்களில் பலர் பொறாமையோடு பேசுவதைக் கேட்டிருக்கிறேன். உங்கள் வீட்டுக்கு மின்சாரம் இலவசம், உங்கள் வாகன பெட்ரோலுக்கு மானியமும் தரப்படும். ஆனால், உங்கள் சம்பளத்தை மட்டும் கொத்தவால்சாவடி மொத்த வியாபாரியிடம், அவர் என்ன தர நினைக்கிறாரோ அந்த அளவுக்கு வாங்கிக்கொள்ளலாம் என ஒரு சட்டம் வந்தால் மட்டும்தான் அந்த சலுகைகளின் வலி உங்களுக்குப் புரியும்.

வணிகர்களுக்கு எதிராகப் போராடி ஓய்ந்து போனவர்களின் பிள்ளைகள் நாங்கள். இனி, அப்படி ஒரு போராட்டம் தேவையில்லை என்பது எங்கள் முடிவு. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவை என்றால் ஏதாவது செய்யுங்கள்.இல்லையென்றால், இன்னும் சிறிது காலம் கழித்து, உங்களுக்கு உத்தியோகம் இருக்கும், வீடு வாசல் இருக்கும், டாடா நேனோ அல்லது வேறு ஏதேனும் தீப்பெட்டி கார் கூட இருக்கும், புதிய மாடல் 3 ஜி மொபைல் இருக்கும், இன்னும் பலவும் இருக்கும், உணவு மட்டும் இருக்காது. அது எங்களிடம் இருக்கும்.

இப்போது நாங்கள் அனுபவிக்கும் பசியை, அது தரும் அவமானத்தை நீங்கள் சந்திக்க நேரும். ஆனால், அரசாங்கம் உங்களைக் கைவிடாது. ’கரன்சியைத் தின்று உயிர் வாழும் கலை’ கற்றுத் தரும் கல்லூரிகள் அரசு அனுமதியுடன் (நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும்தான்) துவக்கப்படும். அவற்றில் படிக்க, நீங்கள் உங்கள் பணிக் காலத்தின்(சர்வீஸ் என்றால் புரியும்தானே) 20 ஆண்டு வருவாயைக் கடனாகப் பெற நேரிடும். இது ஒன்றும் உங்களுக்குப் புதிதல்ல. ஏற்ர்கனவே, இதே போன்ற வாழ்க்கை அடமானத்தின்படி, அட்டைப் பெட்டி வீடுகள் கட்டி அவற்றுக்கு ராயல் வில்லா, ஹேப்பி ஹோம் என்றெல்லாம் வேடிக்கையாகப் பெயரிட்டு வாழ்ந்து பழகியவர்கள் நீங்கள்.

விளை நிலத்தைப் பொறியியல் கல்லூரிகளுக்கு விற்றுவிட்டு, கல்லூரிகளில் விவசாயம் செய்வது எப்படி எனப் படித்த மேதைகள் அல்லவா நீங்கள்! கரன்சி படிப்புக்கும் விற்பதற்கென ஏதேனும் இல்லாமலா போகும்! நாங்கள் உணவு உண்டு, பெண்டு பிள்ளைகளுடன் கூடிக் குலாவி இருக்கும் நேரம், நீங்கள் கரன்சி உண்டு உயிர் நீட்டிப்பு செய்வீர்கள்.

நாங்கள் மனிதர்களாகவும் நீங்கள் வேறு ஏதோவாகவும் இருக்கப்போகும் காலம் அதுவாக இருக்கும்.இப்படி நடக்கக் கூடாதெனில்,ஒன்று, உங்களில் பலர் ஊர் திரும்பி வயலில் இறங்க வேண்டும். அல்லது, ஒவ்வொரு வடையிலும் இட்லியிலும் பிரியாணியிலும் இருக்கும் எங்கள் வியர்வை வாடையை உணர வேண்டும். காற்றில் கலந்து வரும் எமது பெருமூச்சின் சூட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உளுந்தின் நிறம் கருப்பு! உங்கள் வீட்டில் இருக்கும் உளுந்து தோல் உரிக்கப்பட்டது!

-
சுட்டி : http://kaattchi.blogspot.in/2010/05/blog-post_08.html




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..