ஷஃபான் மாதம் வந்து விட்டால் பல விதமான தவறான செயல்களையும் அமல்களாக அள்ளி வீசுவார்கள். மார்க்கம் படித்த மவ்லவிமார்கள் மிம்பர்களிலும், ஏனைய பயான் நிகழ்ச்சிகளிலும், மார்க்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை பேசுவதை அவதானிக்கலாம்.
ஷஃபான் மாதம் பிரை 15-ம் நாள் நோன்பு பிடிப்பது, நின்று வணங்குவது. போன்ற விடயங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள் இது ஒரு புரம் இருக்க, அன்றைய இரவில் மஃரிப் தொழுகைக்குப் பின் மூன்று யாசீன் ஓதுவார்கள். ஒன்று உணவு விஸ்திரணத்திற்கு, இரண்டாவது ஆயுள் நீடிப்புக்கு, மூன்றாவது கப்ரில் வேதனை நீங்கவாம்? மூன்று யாசீனுக்கு இடை, இடையே துஆ ஓதிக்கொள்வார்கள். மூன்று யாசீனையும் ஓதியப் பின் ரொட்டி சுட்டு, மூன்று வாழை பழத்துடன் பங்குவைப்பார்கள். இதற்காக இரண்டு விஷேசமான கதையைக் கட்டி வைத்துள்ளார்கள்.
“யார் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப் பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும், வருமாம்?
இரண்டாவது கட்டுக் கதை அதாவது,
யார் அன்றிரவு ரொட்டியும், வாழைப் பழமும், கொடுக்கிறாரோ அவைகள் கப்ரில் மலக்குமார்கள் இரும்பால் அடிக்கும் போது கொடுத்த ரொட்டி கேடயமாக வருமாம்? புராணங்கள் தோற்றுப் போகும் அளவுக்கு நம்மவர்களிடம் கதைகளும், கப்ஸாக்களும் கொடிக் கட்டி பறக்கிறது. இப்படி மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்துவதை விட பிச்சை எடுத்து சாப்பிடுவது மேலாகும். ஏன் எனறால் யாசகத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.
பொதுமக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் உலக தர வரிசையில் மத குருமார்கள் தான் முன்னணியில் உள்ளார்கள்? இந்த ஏமாற்றுபவர்களை நம்பி சுட்ட ரொட்டியையும், வாழைப் பழத்தையும், வீடு, வீடாகவும், பள்ளிவாசல்தோறும் பங்கு வைப்பதையும் காணலாம். கூடுதலாக பள்ளிக்கு அனுப்புவார்கள். எவ்வளவுதான் பள்ளி இமாமும், முஅத்தினும் சாப்பிடுவார்கள். காலையில் பார்த்தால் குப்பையிலும், காண்களிலும் வீசப்பட்டு கிடக்கும். அல்லாஹ்வுடைய ரிஸ்க் சீரழிவதை காணலாம். அதிலும் நெட்டி உடையாத வாழைப் பழம் அனுப்ப வேண்டுமாம்? அப்ப தான் இரண்டு, மூன்று நாளைக்கு வைத்து சாப்பிடலாம்? மேலும் இந்த பராத் இரவை உறுதிப் படுத்த ஒருகுர்ஆன் வசனத்தையும் ஆதாரமாக காட்டுவார்கள்.
அதாவது “ஹா மீம் இது தெளிவான வேதநூல், இதை நாம் பரகத் பொருந்திய இரவிலே இறக்கினோம். நாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம். நுட்பமான எல்லா காரியங்களும் பிரித்தறிவிக்கப்படுகிறது…” (44 : 1, 2)
“இந்த வசனம் பராஅத் இரவுப் பற்றி பேசுகிறது. ஏன் என்றால் பராத் இரவில் தான் மனிதர்களுடைய சகல காரியங்களும் மீண்டும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வசனமும் இந்த பரக்கத் பொருந்திய இரவில் தான் காரியங்கள் பிரித்தறிவிக்கப்படுகிறது என்று கூறுகிறது” என்று கண்மூடித்தனமாக விளக்கம் சொல்வதை காணலாம். உண்மையில் இவர்கள் சொல்லும் இந்த விளக்கம் சரிதானா என்று பார்த்தால், இது தெளிவான பிழையான விளக்கமாகும். ஏன் என்றால் மீண்டும் அந்த வசனத்தை சற்று அவதானியுங்கள். ஹா மீம் இது தெளிவான வேதநூலாகும். அதை பரகத் பொருந்திய இரவிலே இறக்கினோம். என்று அல்லாஹ் கூறி விட்டு, அந்த பரகத் பொருந்திய இரவிலே காரியங்கள் பிரித்தறிவிக்கப் படுகிறது என்று கூறுகிறான். அப்படியானால் அந்த பரகத் பொருந்திய இரவை கண்டு பிடித்து விட்டால், இந்த வசனத்திற்கும், பராத் இரவுக்கும் தொடர்புள்ளதா? இல்லையா? என்று விளங்கி விடலாம்.
இந்த வசனம் குர்ஆனோடும், லைலதுல் கத்ர் இரவோடும் சம்பந்தப் படுவதை காணலாம். குர்அன் அருளப்பட்ட மாதத்தைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்.
“ரமலான் மாதத்தில் தான் இந்த குர்ஆன் அருளப்பட்டது…” (02 : 185)
இந்த வசனத்தில் குர்ஆன் அருளப்பட்ட மாதத்தைப் பற்றி பேசுகிறான். எந்த இரவில் இந்த குர்ஆன் அருளப்பட்டது என்று 97 ம் அத்தியாயத்தில் இப்படி கூறுகிறான். லைலதுல் கத்ர் இரவில் இறக்கினோம் என்று 97ம் அத்தியாயமான சூரத்துல் கத்ரில் சுட்டிக் காட்டுகிறான். எனவே நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய 44 ம் அத்தியாயம் பராத் இரவுப் பற்றி பேசவில்லை, மாறாக லைலதுல் கத்ர் இரவைப்பற்றி தான் பேசுகிறது. என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே பராத் என்ற மாதமோ, பராத் என்ற இரவோ, கிடையாது என்பதோடு, தாயுடைய கர்ப அறையிலே மனிதனின் சகல விடயங்களும் எடுத்து எழுதப்பட்டு விடுகிறது. மீண்டும், மீண்டும் ஒவ்வொரு வருடமும் புதுசு, புதுசா எழுதப்படுவது கிடையாது. (அதிகமாக நோன்பு நோற்பதைத் தவிர) ஷஃபான் மாதத்தில் எந்த விசேட அமல்களும் கிடையாது என்பதை விளங்கி, வழமையான அமல்களை நிறைவாக செய்வோமாக
ஷஃபான் மாதம் 15ஆம் இரவு நம்மவர்களால் மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்பட்டு இரவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் காலங்காலமாக நன்மை என்ற பெயரில் சில சடங்குகளையும் நடத்தி வருகின்றனர்.
முன்னோர்கள்களில் சிலர் இதனை உருவாக்கினர் என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை. அதற்காக முயற்சிகளை மேற்கொள்வதுமில்லை. படித்தவர்களின் நிலைமையே இதுவானால் படிக்காதவர்கள் எப்படி உண்மையை உணரமுடியும்?
மூன்று யாசீன்:
இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் மூன்று 'யாசீன்' ஓதி துன்பம் துயரங்கள் நீங்கவும் நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் 'தக்தீர்' எனும் விதியை நிர்ணயிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையிலேயே மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கம் இருந்து வருகின்றது.
ஷஃபான்15ஆம் இரவில் குறிப்பிட்ட சில அமல்களைச் செய்வதற்கு ஆதாரமுண்டா என்றால் திருமறைக் குர்ஆனிலோ, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திலோ, அருமை ஷஹாபாக்களின் செயல்களிலோ, தாபீயீன்கள், நான்கு இமாம்கள் வழிமுறைகளிலோ இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இப்படிச் செய்வது நன்மையானது என்றால், நம்மைவிட நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் இதனைச் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் தோன்றிய சிலர்தான் இதனை உருவாக்கினர்.
நன்மைகள் தானே:
தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவைகளைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என்று, நம்மில் பெரும்பான்மையினர் பலரும் நினைக்கலாம். சற்று நிதானமாக படித்து சிந்தித்து சரியாக விளங்கிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள் "எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அலி (ரழி) அபூதாவூது, நஸயீ)
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) ஜாபிர் (ரழி) புகாரீ, முஸ்லிம், நஸயீ)
ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் இன்றைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். அவ்வாறு அவர்களால் காட்டித்தரப்படாத ஒரு வழிமுறையை முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக்கொண்டு செய்துவருவது அவர்களின் தூதுத்துவம் முழுமைஅடையவில்லை என்று சொன்னது போல் ஆகிவிடும் என்ற அபாயத்தை உணரவேண்டும்.
எனவே இது போன்ற போலி வணக்கங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதரை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.
 |