உண்மையில் நாம் காணும் காட்சிகள் நம்ப முடியாமல் திகைக்க வைக்கின்றன.
’ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அமெரிக்கர்கள் கையேந்தி சாலையில் நிற்பார்கள்’ என்று சில மாதங்களுக்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா? ஆனால், இன்றைய நிஜம் இதுதான்.
அமெரிக்காவில்… கொரோனா வைரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். இவர்களுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இலவச உணவு விநியோகம் செய்கின்றன. இவற்றை வாங்குவதற்காக மக்கள் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நிற்கிறார்கள்.
பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, நியூயார்க், கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா என பெரும்பான்மையான மாகாணங்களில்.. இலவச உணவுக்காக மக்கள் மணிக்கணக்காக காத்துக்கிடக்கின்றனர். இந்திய நிலைமைக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இங்கே நம் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு கூட்டமாக நிற்கிறார்கள். அங்கு கார்களில் நிற்கிறார்கள். நியூயார்க் போன்ற நகரங்களில் இத்தகைய கார்களையும் காண முடியவில்லை. Food bank line-களில் பெரும் மனிதர் கூட்டம் வரிசையில் நிற்கிறது. வாங்கிய வேகத்தில் பசி பொறுக்க முடியமால் அங்கேயே சாப்பிடுகின்றனர்.
A double line of cars, stretching over a mile at times, move through a queue to receive two boxes of food loaded by volunteers outside the Greater Pittsburgh Community Food Bank in Duquesne, Pennsylvania, April 6, 2020. Gene J. Puskar/AP Photo
அமெரிக்கா பற்றி நமக்கு இருக்கும் மனச் சித்திரம் வேறு. ஆனால், ஒரு சின்னஞ்சிறு வைரஸ் அமெரிக்காவை பிய்த்து சிதைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கொரோனாவின் உச்சத்தை இன்னும் அமெரிக்கா தொடவில்லை. இப்போதே இந்த நிலைமை என்றால், உச்சத்துக்குப் போகும்போது என்னவாகும்? இத்தகைய இக்கட்டான நிலைமைகளில் மக்களின் உணவை கூட உத்தரவாதப்படுத்த இயலாத நிலையில்தான் இருக்கிறது அமெரிக்க வல்லரசு.
குறைந்தபட்சம் ஒவ்வொரு மாகாணத்திலும் 10 ஆயிரம் பேர் இத்தகைய Food bank line-களில் நிற்பதாக செய்திகள் சொல்கின்றன. ’’நாங்கள் வாரம் 60 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறோம். ஆனால், எங்களின் சேவை பகுதியில் மட்டும் 12 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது.’’ என்கிறார், The San Antonio Food Bank என்ற தன்னார்வ நிறுவனத்தின் சி.இ.ஓ., எரிக் கூப்பர்.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio என்ற இடத்தில் இலவச உணவு பொருட்களை பெறுவதற்காக சுமார் 6,000 கார்கள் ஏழு கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசையில் நின்றன. சில குடும்பங்கள் 12 மணி நேரம் முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருந்தனர். ஏப்ரல் 10-ம் தேதி கலிஃபோர்னியாவில் உணவுப் பொருட்களை பெறுவதற்கு 5,000 கார்கள் வரிசையில் நின்றன.
இவ்வாறு உணவு வாங்க வரிசையில் நிற்கும் இவர்கள் அனைவரும் ஏழைகள் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மையானோர் பணிபுரியும் பிரிவை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு நிலை தங்களுக்கு ஏற்படும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திராதவர்கள். ’’ வரிசையில் நிற்பவர்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் முதல் ஊபர் ஓட்டுனர் வரை பலரும் இருக்கின்றனர். பெரும்பாலும் வேலையிழந்தவர்கள்” என்கிறார் எரிக் கூப்பர்.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தன்னார்வ குழு உணவு விநியோகம் செய்கிறது. பெரும்பாலும் வாரம் ஒருமுறைதான் உணவு விநியோகம். அந்த தகவலை அறிந்துகொண்டு அங்கு மக்கள் கூட்டம் குவிகிறது. ஆனால், உணவு போதவில்லை. பல மணி நேரம் வரிசையில் நின்றவர்கள் உணவு கிடைக்காமல் ஏமாந்து திரும்புகின்றனர்.
000000
1930-களில் கிரேட் டிப்ரஷன் என்று சொல்லப்படும் உலகப் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்கர்கள் ரொட்டித் துண்டுகளுக்காக வீதிகளில் வரிசையில் நின்றார்கள். அவை, breadlines என்று அழைக்கப்பட்டு பின்னர் கிரேட் டிப்ரஷ்னனின் குறியீடாகவும் அச்சொல் மாறியது. அந்த breadlines இப்போது neo-breadlines ஆக, food lines- என்ற பெயரில் உருவம் எடுத்துள்ளது.
உண்மையில் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பட்டினிக் காட்சிகள் நம்மை திகைக்க வைக்கின்றன. இத்தனை நாள் நாம் கண்ட செல்வ செழிப்பான அமெரிக்கா எங்கே போனது? எல்லோரிடமும் கார் இருக்கிறது. அடுத்த வேலை உணவுக்கு காசு இல்லை; இருப்பது கை நிறைய கடன் அட்டைகள் மட்டுமே.
இனி என்ன செய்வது? இந்த நிலைமை எப்போது சரியாகும்? சரியாகும் வரையிலும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? குடும்பத்தை எப்படி ஓட்டுவது? தவணைகளை எப்படி கட்டுவது? பைத்தியம் பிடித்தது போல் திரிகின்றனர். பி.பி.சி. வெளியிட்டுள்ள பல வீடியோக்களில் வேலையிழந்தோர், சில வார்த்தை பேசுவதற்குள் உடைந்து அழுகிறார்கள்.
கடந்த மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவில் 1 கோடியே 70 லட்சம் பேர் வேலையில்லாதோருக்கான உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இதுவரை அரசின் உதவிகள் சென்று சேர்ந்துள்ளன. மீதியுள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்குப் பதிலாக வேலைக்குச் செல்வதற்கு மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறார்கள்.
வேலைக்குச் சென்றால் நோய் தாக்குமே? அதைப்பற்றி அரசுக்கு என்ன கவலை? உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது, அவ்வளவுதான்.
’’தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக நாம் ஊதியம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்று ட்ரம்ப் ‘கணத்த’ மனதுடன் கூறியதை இணைத்து இதைப் புரிந்துகொள்ள முடியும். அதிகாரிகள் மட்டத்தில் இதை வெளிப்படையாக கூறவும் செய்கின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக வேலைக்குச் செல்லாதோருக்கான வேலையின்மை உதவித் தொகையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. செத்தாலும் பரவாயில்லை; வேலைக்குப் போ..’ என்கிறார்கள்.
இந்த நிலைமை தொடரும்போது, மிக விரைவில் சமூக அமைதியின்மை உருவாகும். உலகிலேயே குடிமக்கள் அதிகம் பேர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. இப்போதுவரை துப்பாக்கி கடைகள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. அங்கு வாங்கிக் குவிக்கப்படும் லட்சக்கணக்கான துப்பாக்கிகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
இந்த துப்பாக்கிகளைக் காட்டிலும், பெரும்பகுதி மக்களை சூழ்ந்திருக்கும் வறுமை, வேலையின்மை, நிச்சயமற்ற நிலை… போன்றவை உருவாக்கும் சமூகக் கொந்தளிப்புதான் தீவிரமான பங்காற்றப் போகிறது.
’’இத்தகைய நிலை தொடர்ந்தால் ஒரு சமூக புரட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலை அரசுகளுக்கு ஏற்படும்” என்று ’எச்சரிக்கிறார்’ புகழ்பெற்ற பொருளாதார ஊடகமான Bloomberg-ன் ஆசிரியர் குழுவில் இருக்கும் Andreas Kluth.
‘’இந்த கொந்தளிப்பானது, அமெரிக்காவை விட மக்கள் அடர்த்தி மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக ஏற்படும்’’ என்று சொல்லும் Kluth, ‘’இந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததும் உலகம் முன்பு போலவே இயங்கும் என எண்ணுவது அப்பாவித்தனமானது. இப்போது உருவாகியுள்ள இந்த கோபமும், கசப்பும் நாம் யூகிக்கவியலாத புதிய வழிமுறைகளில் வெளிப்படும். அவை, பெருந்திரள் மக்கள் இயக்கங்களாக அல்லது கிளர்ச்சி இயக்கங்களாக மாறக்கூடும். பழங்கால ஆட்சி முறைகளை எதிரி என கருதி மக்கள் ஒதுக்கி வைத்ததைப் போன்ற நிலைமை இன்றைய அரசுகளுக்கு உருவாகக்கூடும்” என்கிறார்.
வரப்போகும் நிலைமைகளை Andreas Kluth முன்னறிவிக்கிறார். அதேசமயம் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் தொழிலாளர்களின் கொந்தளிப்பை கையாள்வதற்கு முதலாளிகளுக்கு புதிய வழிமுறைகள் எதுவும் தேவைப்படாது. அதற்கு இவ்வுலகின் ஆகப்பழைய ஆயுதம் ஒன்றே போதுமானது. அதன் பெயர் பட்டினி.
பசியுடன் பரிதவிக்கும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு எடுத்து, விட்டதை பிடிக்க மேலும் வெறியுடன் சுரண்டுவார்கள். மிச்சமிருக்கும் வளங்களை மானியங்களின் பெயரால்; சந்தையை ஸ்திரப்படுத்துவதன் பெயரால் அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும்.
அரசு என்பது பெரும் நிறுவனங்களின் திட்டவட்டமான அடியாளாக மாறும். கொரோனாவால் பிழைத்தவர்கள் யாரும் இவர்களிடம் தப்பிக்க முடியாது. அதற்கு மாஸ்க் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக இருக்கும் ’மாஸ்க்’ கழட்டப்பட வேண்டும். இது மக்களுக்கான அரசு என்ற மாஸ்க்கையும், அப்படியான நம் நம்பிக்கைகளையும் கழற்றினால், அதன் பின்னே தென்படும் உண்மை நம் கண்களுக்கு புலப்படலாம்.
- பாரதி தம்பி
Newyork Times: https://www.nytimes.com/2020/04/12/us/coronavirus-long-lines-america.html
|