JUNIOR VIKATAN
“பாவப்பட்ட லாரிக்காரனோட பரிதாபக் கதையைக் கேளுங்க!” - பிரதமர் மோடிக்கு கோவணாண்டி கடிதம்
மாதம் தவறாமல் மனதோடு ராகம்... அதானுங்க ‘மான் கி பாத்’ பேசும் மாண்புமிகு பாரதப் பிரதமர் உயர் திரு மோடி ஐயா அவர்களுக்கு... மீண்டும் கோவணாண்டியின் வணக்கமுங்க. எனக்கு ஒரு சந்தேகம். உங்க ஆட்சி அதிகாரம், படை பரிவாரங்களெல்லாம் மக்களை வாழ வைக்கவா இல்லை சாகடிக்கவா❓
ரத்தம் சீரா ஓடுனாத் தான் உடம்பு ஆரோக்கியமா இருக்கும். அதுபோல பெட்ரோல், டீசல் விலை சீராக இருந்தால் தான் ஒரு நாட்டோட பொருளாதாரம் சிறப்பா இருக்கும். ஆனா, இங்கே நிலைமை அப்படி இல்லையே... இன்னைக்கு மக்களுக்குப் பெரிய தலைவலியா இருக்குறது பெட்ரோல், டீசல் விலைதானுங்க. உலகச் சந்தையில கச்சா எண்ணெய் விலை அதளபாதாளத்துல விழுந்து கிடக்குது. ‘கச்சா எண்ணெய் விலை ஏகத்துக்கும் கீழ போயிடுச்சு’னு எண்ணெய் உற்பத்தி நாட்டுக்காரங்க கதறுறாங்க. ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 45.72 அமெரிக்க டாலர். ஆனா, நம்ம நாட்டுல வரலாறு காணாத விலை ஏறி மக்கள் கதறுறாங்க. இது ஏட்டிக்குப் போட்டியா இருக்கே மோடிஜி!
பெட்ரோல், டீசல் விலை கூடிக்கிட்டே போறதால மக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க சாமி. அதுலயும் வருமானமே இல்லாம வயித்துல ஈரத்துணி போட்டுகிட்டுப் படுக்குற கொரோனா காலத்துல கூட ஈவு இரக்கமே இல்லாம பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை ஏத்துனது நியாயமாங்க❓ சர்வதேசச் சந்தையில ஒரு பைசா கூடினா, இங்கே ஒன்பது ரூபாய் கூடுது. அங்கே ஒன்பது ரூபாய் விலை இறங்கினா இங்கே ஒரு பைசா இறங்குது. இது என்ன பகல் கொள்ளையா இருக்கே சாமி. கேக்குறதுக்கு ஆள் இல்லைங்குறதுக்காக இப்படியா அழிச்சாட்டியம் பண்றது❓
`இன்னைக்கு நிலைமையில பெட்ரோல், டீசல் ஆதார விலை 20 ரூபாய்க்குக் கீழே தான் வரும்’னு வல்லுநர்கள் சொல்றாங்க. கலால் வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி, மாநில அரசு வரினு வரிஞ்சு கட்டி வரி வசூல் பண்றதால லிட்டர் 70, 80 ரூபாய்க்கு விலையேறிக் கிடக்குது. 2014-ம் வருஷம், மே மாசம் காங்கிரஸ் ஆட்சியில ஒரு லிட்டர் டீசல் விலை 66.02 ரூபாய். அன்னைக்கு எண்ணெய் கம்பெனிங்க அரசுக்குக் கொடுத்த விலை 50.5 ரூபாய். இன்னைக்கு டீசல் விலை 68.22 ரூபாய். ஆனா, எண்ணெய் கம்பெனிங்க அரசுக்குக் கொடுக்குற விலை 18.78 ரூபாய். அன்னிக்கு மத்திய கலால் வரி 4.04 பைசா இருந்துச்சு. இன்னிக்கு 31.83 ரூபாயா ஏறிக்கிடக்கு. விலை குறைவா கிடைக்குற நேரத்துல கூட `வரி’ங்கிற பேர்ல கொள்ளை அடிக்குறீங்களே மோடிஜி... இதுதான் நீங்க நாட்டு மக்களுக்குச் செய்யற நன்மையா ஜி❓
‘பூவில் வண்டு தேன் எடுப்பது போல இருக்க வேண்டும் வரிவிதிப்பு’னு சொன்னார் மூதறிஞர் ராஜாஜி. அதைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. ம்ஹுக்கும்... உங்களை ஏத்தி விட்ட அத்வானிஜியையே தூக்கிக் கடாசிட்டீங்க. ராஜாஜி, காந்திஜி பத்தியெல்லாம் எப்படி நினைப்பீங்க!
மகாராஜாக்கள் ஆண்ட காலத்தில் கூட விளைச்சல்ல ஆறுல ஒரு பங்கு தான் வரி வசூலிச்சாங்களாம். ஆனா, தர்மவான் உங்க ஆட்சியில 2014-லிருந்து இப்போவரைக்கும் பெட்ரோல்ல 247 சதவிகிதமும், டீசல்ல 796 சதவிகிதமும் மத்திய கலால் வரியை உயர்த்தி இருக்கீங்கனு பொருளாதார வல்லுநர்கள் சொல்றாங்க.
`சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் தான் இந்தியாவிலேயே பெரிய லாரி சங்கம்’னு சொல்றாங்க. கொரோனாவுக்கு முன்னாடி இவங்க மூலமா மட்டும் தினமும் மூணு லட்சம் லிட்டர் டீசல் விற்பனை ஆகுமாம். சங்ககிரி லாரிக்காரங்க, கவர்மென்ட்டுக்கு ஒரு நாளைக்கு டீசல் மூலமா கொடுக்குற வரிப்பணம் சுமார் 150 கோடி ரூபாய். இப்படி நாடு முழுக்க சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய் பெட்ரோல், டீசல் மூலமா வருமானம் வரும்னு பொருளாதாரப் புள்ளிகள் சொல்றாங்க.
ஒரு பட்டியலைச் சொல்லுட்டுமுங்களா மோடிஜி... லாரிக்காரனோட ரத்தக்கண்ணீர்ப் பட்டியல் அது. ஒரு 14 சக்கர புது லாரி சேஸ் விலை ஜி.எஸ்.டியோட சேர்த்து 31 லட்சம் ரூபாய். அதுக்கு மேல பாடி கட்டுறது, தார்ப்பாய் வாங்குறது, இன்ஷூரன்ஸ், பதிவுக்கட்டணத்துக்கு 5 லட்சம் ரூபாய் வேணுமுங்க. ஆக, 36 லட்ச ரூபாய் முதலீட்டைப் போட்டு தொழில்ல இறங்குறாங்க. இதுல 31 லட்சம் ரூபாய் கடன். அதுக்கு தவணை மாசம் 60,000 ரூபாய் வீதம் 5 வருஷம் கட்டணும். மாசம் சுமார் 2,000 லிட்டர் டீசல் தேவை. ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் 50 ரூபாய்க்கு மேல வரினு பாய்ஞ்சு பிறாண்டி, பிடுங்கிடுது உங்க அரசாங்கம்.
மத்திய, மாநில அரசுகளுக்கு வரிங்கிற பேர்ல பாவப்பட்ட ஒரு லாரிக்காரன் ஒரு வருஷத்துக்கு டீசல் மூலமா மட்டும் 12 லட்சம் ரூபாய் படி அளக்குறான். ஒரு தடவை 14 டயர் வாங்குனா அதுக்கு 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி கட்டணும். அதாவது, 90,000 ரூபாய். இன்ஜின் ஆயில் வகையில வருஷத்துக்கு வரிக்காசு 1,000 ரூபாய். டோல்கேட்டுக்கு வருஷத்துக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் அழணும். இன்ஷூரன்ஸ் 60,000 ரூபாய்.
மாநில அரசு வரி 32,000 ரூபாய். தேசிய அனுமதி வரி 19,000 ரூபாய். இதுக்கு மேல மோட்டார் வாகன அதிகாரிங்க, போலீஸ்காரங்களுக்கு லஞ்சப் பணம் வருஷத்துக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய். இதுக்கப்புறம் டிரைவர் சம்பளம் இருக்குது. இதையெல்லாம் தாண்டி, கடனுக்கான தவணையைக் கட்ட மாசம் 60,000 ரூபாய் சம்பாதிக்கணும். எந்த அசம்பாவிதமும் இல்லாம வண்டி ஓடினா, கடனை அடைக்கிறதுக்கு ஏழு வருஷம் ஆகும். அப்போ லாரியோட மதிப்பு மீறிப் போனா 15 லட்ச ரூபாயா குறைஞ்சிருக்கும்.
ஒரு லாரிக்காரன் 15 லட்சம் ரூபாய் சம்பாதிக்க ஏழு வருஷம் ஆகுது. ஆனா, அவன் கிட்ட அரசாங்கம் பிடுங்குறது, முதல் வருஷம் 26 லட்சம், பிறகு வருஷா வருஷம் 21 லட்சம் ரூபாய்னு மொத்தம் 1.52 கோடி ரூபாய். படிக்கிற உங்களுக்கே மூச்சு முட்டுதுன்னா... பணத்தைக் கட்டுற லாரிக்காரனோட நிலைமையைக் கொஞ்சமாச்சும் நெனைச்சுப் பார்க்க வேணுமுங்க.
ஒரே ஒரு லாரி மூலமா மட்டும் சாமானியன் கிட்ட இம்புட்டுப் பணத்தைப் பிடுங்கி, அம்பானி, அதானி, விஜய் மல்லையா, நீரவ் மோடி மாதிரியான ஆளுங்களுக்கு `கடன்’கிற பேருல அள்ளிக் கொடுத்து, பிறகு தள்ளுபடி செய்யறது தான் உங்க ஆட்சியோட லட்சணமா ஜி❓
போற இடத்துலல்லாம் திருக்குறளைத் தூக்கிப் பிடிக்கிற மோடிஜி, இந்தத் திருக்குறளையும் கொஞ்சம் படிச்சுப் பாருங்க.
‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’
அரசன் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும் படைக்கருவி. இதுதான் இந்தக் குறளுக்கான பொருள் சாமியோவ்!
நாங்க கேக்குறதெல்லாம் ஒண்ணு தான். குட்டியூண்டு மாநிலமான டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், டீசல் விலையை லிட்டருக்கு 9 ரூபாய் குறைச்சிருக்காரு. ஆனா, வானளாவிய நிதி ஆதாரம் பொருந்திய நீங்க லிட்டருக்கு 20 ரூபாயும், நாட்டுலேயே அதிக லாரிக இருக்குற தமிழ்நாட்டுல முதலமைச்சர் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைச்சா இந்தப் பாவப்பட்ட லாரிக்காரங்க உசுரு பொழச்சிக்குவாங்க ஐயா. இவங்கல்லாம் வேற யாருமில்லை... ஒரு காலத்துல விவசாயம் பார்த்துட்டு, அதுல இருந்து தூக்கியெறியப்பட்ட பழைய கோவணாண்டிகதானுங்க. கொஞ்சம் மனசு வெச்சு இதைச் செய்யுங்க மோடி ஜி!
இப்படிக்கு,
கோவணாண்டி |