Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம்-10): புலிகளின் இறுதி யுத்தம் மூடுமந்திரமாக இருந்தது ஏன்?
Posted By:peer On 9/24/2022 7:29:22 PM

இலங்கை கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடங்கிய (ஆம். சண்டையை தொடங்கியது அங்கிருந்த புலிகள்தான் என்பதை தற்போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்தே உறுதி செய்துகொள்ள முடிகிறது) சண்டையில் முதல் இரு நாட்கள் புலிகளுக்கே வெற்றி என்பது போன்ற போக்கு காணப்பட்ட நிலையில், நாம் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்ட செல்வநகர் யுத்தத்திலேயே முதல் தடவையாக புலிகள் இழப்புக்களை சந்திக்க தொடங்கினர்.

செல்வநகர் முகாமில் இருந்து ரோந்து வந்த ராணுவத்தினரை வீதி மறைவிடங்களில் இருந்து புலிகள் தாக்கியதுவரை, போரின் போக்கு புலிகளுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், தாக்குதலுக்கு உள்ளான ராணுவத்தினர், மறைவிடங்களை தேடி ஓடிவிட, அவர்களை தேடி புலிகள் வீதிக்கு வந்ததுதான் பெரிய தவறு.

சண்டை நடந்த இடத்துக்கு செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து மேலும் ராணுவத்தினர் வரலாம் என்ற சாத்தியத்தை புலிகள் கணக்கில் எடுக்கவில்லை. அதனால்தான் தமது மறைவிடங்களை விட்டு வெளியே வீதிக்கு வந்தார்கள். ஆனால், செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து மேலதிகமாக 15 ராணுவத்தினர், தாக்குதல் நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்கள் தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்தபோது, புலிகளின் நின்றிருந்த இடத்துக்கு பின்புறமாக வந்து சேர்ந்தனர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த புலிகளை மிக தெளிவாக பார்க்க முடிந்தது.

ராணுவத்தினர் புலிகளுக்கு பின்னால் இருந்த இடத்தில் கவர் எடுத்துக் கொண்டு சுடத் தொடங்கினார்கள்.

10 நிமிடங்களுக்கு உட்பட்ட நேரத்தில், 15 ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், சுமார் 40 புலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். இறுதி யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் ஆரம்பம், இங்குதான் தொடங்கியது.

செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து ரோந்து வந்த ராணுவத்தினரை கடைவீதியில் வைத்து தாக்கிய புலிகளின் படையணிக்கு தலைமை தாங்கியவர், ராணுவ முகாமை கண்காணிக்க யாரையும் அனுப்பியிருக்கவில்லை. அப்படி அனுப்பியிருந்தால், இரண்டாவது டீம் சண்டை நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டபோது, கண்காணிக்க அனுப்பப்பட்டவர் தகவல் கொடுத்திருப்பார். கடைவீதியில் 40 பேர் உயிரை விட்டிருக்க தேவையில்லை.

இந்த சண்டையில் ராணுவ தரப்பில் வெறும் 2 பேர்தான் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தரப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. இதுதான் இறுதி யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட முதலாவது, ‘சேதத்துடன் கூடிய’ தோல்வி.

இதில் உயிரிழந்த சுமார் 40 புலிகளைவிட, அந்த இயக்கத்துக்கு ஏற்பட்ட பெரிய சேதம் என்ன தெரியுமா?

இந்த சண்டை பற்றி மீடியாக்களில் வெளியான அரைகுறை செய்திகள்தான்! (அல்லது பாதி மறைக்கப்பட்ட செய்திகள்)

இறுதி யுத்தத்தில் நடந்துகொண்டிருந்தபோது மீடியாக்களில் வெளியான செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். யுத்தம் முடிவதற்கு சில வாரங்களுக்கு முன்புவரை, விடுதலைப் புலிகள் ஜெயித்துக் கொண்டு இருப்பது போன்ற செய்திகளே தமிழ் மீடியாக்களில் வெளியானதை கவனித்திருக்கலாம்.

ஆனால் திடீரென, எல்லாமே தலைகீழாக மாறின. புலிகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கப்பட்டார்கள் என்ற செய்தி வெளியானது.

இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளம். ஆரம்பத்தில் இருந்து செய்திகளை படித்துக் கொண்டிருந்த பலருக்கு, யுத்தத்தின் போக்கு தலைகீழாக மாறியதில் மனதில் ஏற்பட்ட தாக்கம் பெரியது. சிலர் அந்த தாக்கத்தில் இருந்து இன்னமும் விடுபடவில்லை. வேறு சிலரின் வாழ்க்கையே மாறியது.

ஆனால் நிஜத்தில், யுத்தத்தின் போக்கு தலைகீழாக மாறவில்லை. இறுதி யுத்தம் ஆரம்பத்தில் இருந்தே (சுமார் 4 அல்லது 5 சந்தர்ப்பங்களை தவிர) புலிகளுக்கு சாதகமற்ற நிலையிலேயே போய்க்கொண்டு இருந்தது.

ஆனால் வெளியே காண்பிக்கப்பட்ட பிம்பம் வேறு. 90 சதவீத தமிழ் மக்கள் நம்பியதும் அதைத்தான்.

இந்த நிலை, அநேக தமிழ் மீடியாக்களால் ஏற்பட்டது, அல்லது ஏற்படுத்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது, வெளியே தெரியாத மூடுமந்திரமாக இருப்பதன் காரணம் அதுதான். யுத்தம் முடிந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை பலரும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இருப்பதன் காரணமும் அதுதான்.

யுத்தத்தில் தமது மகனையோ, மகளையோ, சகோதரனையோ, சகோதரியையோ இழந்த பலருக்கு, அவர்கள் ஏன் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள் என்பது தெரியாது! யுத்தம் தோல்வியில் முடிந்தது ஏன் என்று தெரியாது. யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும் தெரியாது. 30 வருடங்களுக்கு மேல் பலமான நிலையில் இருந்த விடுதலை புலிகள் இயக்கம், திடீரென சுவிட்ச் போட்டதுபோல காணாமல் போனது ஏன் என்ற காரணமும் தெரியாது.

யுத்தத்தால் இழப்புகளை சந்தித்தவர்களுக்கு, அதற்கான காரணத்தை தெரிந்துகொள்வது அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால், எங்கிருந்து, யாரிடமிருந்து தெரிந்து கொள்வது?

கிழக்கில் நடந்த யுத்தம் பற்றிய இந்த அத்தியாயத்தில், அதிலிருந்து சற்றே விலகி, இந்த யுத்தம் பற்றிய செய்திகளை தமிழ் மீடியாக்கள் ஏன் அரைகுறையாக தந்தன என்பதை பார்த்துவிட்டு செல்லலாம்.

அத்தியாயத்தின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட செல்வநகரில் நடந்த சண்டையையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

மறுநாள் வன்னியில் இருந்து இந்த யுத்தம் பற்றிய தகவல்கள் தமிழ் மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்டன (தகவல் கொடுத்தவர் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்). அதில், செல்வநகர் சண்டையின் முதல் பகுதிதான் கொடுக்கப்பட்டது.

அதாவது, “ரோந்து வந்த ராணுவத்தினரை புலிகள் மறைந்திருந்து தாக்கியதில் இரு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மற்றைய ராணுவத்தினர் மறைவிடங்கள் தேடி ஓடினர்” என்பதுதான் செய்தி.

அதன்பின் மற்றொரு டீம் வந்து சுட்டதில் 40 புலிகள் உயிரிழந்த தகவல், மறைக்கப்பட்டது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செய்திப் பிரிவு, அந்த தகவலை வெளியிட்டது. ஆனால், “அதெல்லாம் பொய் பரப்புரை” என்றன தமிழ் மீடியாக்கள்.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி, வன்னியில் இருந்த பொதுமக்களும் அதை நம்பினார்கள்.

இதுதான், யுத்தத்தின் இறுதிப் பகுதிவரை நடந்தது. “கிழக்கு மாகாணத்தில் புலிகள் தாக்கியதில் ராணுவத்துக்கு பலத்த சேதம், ராணுவம் பின்வாங்கி ஓடியது” என்று தமிழ் மீடியாக்களில் தினமும் செய்திகள் வெளியாகின. ராணுவம், கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்றிவிட்டு, வடக்கே வன்னிவரை வந்தது.

“மன்னாரில் புலிகள் போட்டுத் தாக்குகிறார்கள், ராணுவம் அலறுகிறது” என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ராணுவம் மன்னார் மாவட்டத்தையே கைப்பற்றிவிட்டு, கிளிநொச்சி மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தனர். அதன்பின் மன்னார் மாவட்டம் பற்றி எந்த தமிழ் மீடியாவும் மூச்சு விடவில்லை.

‘மன்னாரில் அலறிய ராணுவம்’ எப்படி மன்னாரை கடந்து, கிளிநொச்சிவரை வந்தது என யாரும் கேள்வி கேட்டதில்லை.

இப்படியே ஒவ்வொரு இடமாக நடந்து, கிளிநொச்சியையும் கைவிட்டு புலிகள் முல்லைத்தீவுக்குள் வந்தபோது, ‘தந்திரோபாய பின்வாங்கல்’ என்றன தமிழ் மீடியாக்கள். “ராணுவத்தை முழுமையாக முல்லைத்தீவுக்குள் இழுத்துவிட்டு அடிக்கப் போகிறார்கள் புலிகள்” என்பதாக ஒரு மாயை தமிழ் மக்களிடையே உருவாக்கப்பட்டது.

இதில் தமிழ் ‘யுத்த ஆய்வாளர்களின்’ அட்டகாசங்கள், சொல்லி மாளாது. “இலங்கை ராணுவம் தோல்வியின் விளிம்பில் நிற்கிறது” என்பதே அவர்களது ஆய்வின் சாராம்சமாக முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது!

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு தமிழ் மீடியாக்களில் வெளியான இந்த செய்திகள்தான் இணையதளங்கள் மூலமாக வன்னிக்குள் இருந்த புலிகளாலும் படிக்கப்பட்டன. புலிகளின் உயர்மட்ட தலைவர்களுக்கு, யுத்தத்தின் நிலைமை தெரிந்திருந்தது. ஆனால், புலிகள் உறுப்பினர்களில் இரண்டாம் மட்டமும் அதற்கு கீழும் இருந்தவர்களுக்கு யுத்தத்தில் என்ன நடக்கிறது என்று, வெளிநாட்டு தமிழ் மீடியாக்கள் வெளியிடும் செய்திகள் மூலமே தெரிய வேண்டியிருந்தது.

யுத்தத்தின் இறுதி நாட்களில், ராணுவத்தின் 55-வது படைப்பிரிவு கடற்கரையோரமாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் நகர்ந்து கொண்டிருக்க, 53-வது, 58-வது படைப்பிரிவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவை நோக்கி கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்க, 59-வது படைப்பிரிவு ஒட்டுசுட்டான் பகுதியை நெருங்கி விட்டது.

அப்போது யுத்தத்தில் நிலைமை அறிவதற்காக ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்த புலிகளின் இரண்டாம் மட்ட தலைவர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டோம். அவருக்கு தமது பகுதிக்கு அருகே ராணுவம் வந்துவிட்டது என்ற தகவலே தெரிந்திருக்கவில்லை. “ஒட்டுசுட்டானை ராணுவம் சூழ்ந்துவிட்டதே… நீங்கள் தாக்குதலை தொடங்கி விட்டீர்களா?” என நாம் விசாரித்தபோது அவர், “ராணுவம், மாங்குளம் பகுதியில் நிற்கிறது. அங்கே புலிகள் அவர்களை தடுத்து நிறுத்தி யுத்தம் புரிகிறார்கள்” என்றார்.

“எமக்கு கிடைத்த தகவலின்படி, ராணுவம் உங்களுக்கு மிக அருகே வரை வந்துவிட்டது” என்று நாம் கூறியதை அவர் நம்பவில்லை. ராணுவம் மாங்குளத்தில் நிற்பதாக அவர் கூறிய நேரத்தில், ஒட்டுசுட்டான் புலிகளின் காவலரணில் இருந்து வெறும் அரை கிலோ மீட்டர் தொலைவில் நின்றிருந்தது 59-வது படைப்பிரிவு.

ஒரே நாளில் ஒட்டுசுட்டான் ராணுவத்திடம் வீழ்ந்தது.

யுத்தம் முடிவுக்கு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை, வெளிநாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில், “புலிகள் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள், அல்லது, தந்திரமாக ராணுவத்துக்கு வலை விரிக்கிறார்கள்” என்ற நம்பிக்கையை மீடியாக்கள் ஏற்படுத்தி வைத்திருந்தன. எந்த தமிழ் மீடியாவும், ராணுவத் தரப்பில் இருந்தும் செய்திகளை பெற்றதாக நாம் அறியவில்லை.

நாம் புலிகளிடம் தகவல் பெற்றதுபோல, ராணுவத்துடனும் தொடர்பில் இருந்தோம். இரு தரப்பு செய்திகளையும், வேறு சில வழிகளில் உறுதி செய்துகொண்டபின், ரியாலிட்டியை எழுதியதில், நம்மவர்கள் சிலரிடம் இருந்து எமக்கு ‘துரோகி’ பட்டம் துரிதமாக வந்து சேர்ந்தது.

2008-ம் ஆண்டு இறுதியில் நடந்த சம்பவம் ஒன்று.

அதுவரை தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டிருந்த புலிகள், ராணுவம் கிளிநொச்சியை வந்து அடைந்ததும், திருப்பித் தாக்குவார்கள். யுத்தத்தின் திருப்புமுனை அதுதான் என தமிழ் மீடியாக்கள் கூறிக்கொண்டு இருந்தன.

2008 டிசெம்பர் இறுதி வாரத்தில் ராணுவத் தரப்பில் இருந்து எமக்கு கிடைத்த தகவலின்படி, 57-வது படைப்பிரிவு, கொக்காவில், அக்கராயன்குளம் பகுதிகளை கைப்பற்றிவிட்டு, வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அதிரடிப் படைப்பிரிவு-1 (பின்னாட்களில் 58-வது படைப்பிரிவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) கிளிநொச்சியை நெருங்காமல் பூநகரியில் இருந்து பரந்தனை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அவர்கள் பரந்தனை கைப்பற்றிவிட்டு, தெற்கு நோக்கி திரும்பினால், வடக்கே அதிரடிப் படைப்பிரிவு-1, தெற்கே 57-வது படைப்பிரிவு என பாக்குவெட்டிக்குள் சிக்கிய பாக்கு போன்ற நிலை கிளிநொச்சிக்கு ஏற்படும்.

இந்த நிலையில் எமது புலிகள் தரப்பு சோர்ஸ் ஒன்றிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, புலிகள் தமது ஆட்டிலரி பீரங்கிகள் சிலவற்றை கிளிநொச்சியில் இருந்து கிழக்கு நோக்கி நகர்த்துகிறார்கள் என தெரியவந்தது. புலிகள் அவற்றை புதுக்குடியிருப்பு நோக்கி கொண்டு செல்கிறார்கள் என ஊகித்தோம்.

அந்த நாட்களில் எமது பத்திரிகை (பரபரப்பு வீக்லி) செவ்வாய்க்கிழமைகளில் கனடாவில் வெளியாகும். 2008 டிசெம்பர் 30-ம் தேதி வெளியான பத்திரிகையின் கவர் ஸ்டோரி, ‘அடுத்த சில தினங்களில் ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றும்’ எனறு வெளியானது.

செவ்வாய் கனடாவில் வெளியாகும் பரபரப்பு வீக்லி பத்திரிகை மறுநாள் புதன்கிழமை லண்டன், பாரிஸ், சூரிச் மற்றும் ஐரோப்பிய நகரங்களில் கிடைக்கும். டிசெம்பர் 30-ம் தேதி வெளியான பத்திரிகை லண்டனில் விற்பனைக்கு வந்தபோது, அதை விற்பனை செய்யும் சில வர்த்தக நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

எமது பத்திரிகையின் சில பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றை வாங்க கடைகளுக்கு சென்ற வாசகர்கள் தடுக்கப்பட்டனர்.

இந்த எதிர்ப்பு, இரு தினங்கள் (டிச.31, ஜன.1) மட்டுமே நீடித்தது. காரணம், ஜனவரி 2-ம் தேதி, கிளிநொச்சி நகரம், ராணுவத்திடம் வீழ்ந்தது.

இதுதான் மீடியாக்களின் நிலைமை! மற்றொரு சம்பவத்தை பாருங்கள்.

யுத்தத்தின் இறுதி நாளில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நந்திக்கடல் பகுதியில் கொல்லப்பட்டார் என்ற செய்தியை இலங்கை அரசு அறிவித்தது. அதற்கு முதல் வாரம் வெளியான ‘ஒரு முக்கிய வீக்லி’ பத்திரிகையின் கவர் ஸ்ரோரி என்ன தெரியுமா? (தொடரும்)



ஈழ யுத்தம்: இறுதி நாட்கள்- (பாகம்-9) ஈழ யுத்தம்: இறுதி நாட்கள்- (பாகம்-11)



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..