எழுதியது - மெயில் ஒப் இஸ்லாம் ஆசிரியர் குழு
இஸ்லாமிய மார்க்கமானது வெளிப்புற சட்டங்களையும், ஆன்மீகத்துறையையும் சேர்த்து ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டம் ஆகும். ஒருவன் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை உண்டான எல்லா நிலைகளுக்கும் தேவையான சட்டத்திட்டங்களை சொல்லி தந்துள்ள இஸ்லாம், அதே போல எவ்வாறு ஆன்மீகம் மூலம் படைத்த இறைவனை அறிவது, அவனை அடைவது என்றும் சொல்லி தந்துள்ளது.
சூஃபித்துவம் (ஸூபித்துவம்) என்பது இஸ்லாத்தின் ஆன்மீக பகுதியை குறிக்கிறது. இந்த சூஃபித்துவம் “தசவ்வுப்” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
ஒருநாள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தங்களது தோழர்களோடு அமர்ந்து இருந்தார்கள். அப்போது ஒருவர் அங்கே வந்தார். அவரை அதுவரை அந்த ஊரில் யாரும் பார்த்தது கிடையாது. புதுமுகம். வந்தவர் நபிகள் நாயகத்தின் (ﷺ) முன்னாள் வந்து நெருங்கி அமர்ந்தார்.
பின்னர் நபிகள் நாயகத்திடம் (ﷺ) “முஹம்மத் நபியவர்களே! இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்கள் “வணக்கத்துக்குரிய நாயன் இறைவனை அன்றி வேறு நாயன் இல்லை என்றும் முஹம்மத் நபியவர்கள் இறைவனின் திருத்தூதர் என்றும் நம்பிக்கை கொள்ளுதல், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை சரிவர நிறைவேற்றி வருதலும்தான் இஸ்லாம்” என்று கூறினார்கள். அதற்கு வந்த அந்த மனிதர் “ஆம், நீங்கள் உண்மையை உரைத்தீர்கள்” என்று கூறினார்.
பின்னர் “ஈமான் (நம்பிக்கை) என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்கள் “இறைவனையும், வானவர்களையும், இறைவனால் அருளப்பட்ட இறைவேதங்களையும், இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்களையும், இறுதி நாளையும், நன்மை தீமை யாவும் இறைவனின் நாட்டப்படியே நடைப்பெறுகிறது என்னும் விதியையும் நம்புதலே ஈமான் (நம்பிக்கை) என்று கூறினார்கள். அதற்கு வந்த அந்த மனிதர் “ஆம், நீங்கள் உண்மையை உரைத்தீர்கள்” என்று கூறினார்.
கடைசியாக “இஹ்ஸான்” (சம்பூரணத்தன்மை) என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்கள் “இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னை பார்க்கிறான் என்ற நிலையில் வணங்க வேண்டும் இதுதான் இஹ்ஸான்” என்று கூறினார்கள். அதற்கு வந்த அந்த மனிதர் “ஆம், நீங்கள் உண்மையை உரைத்தீர்கள்” என்று கூறினார்.
பக்கத்தில் உட்கார்ந்து இருந்த நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களின் தோழர்களுக்கு மிக்க ஆச்சர்யமாக இருந்தது, வந்தவரே கேள்வியும் கேட்டுவிட்டு கூறிய பதிலுக்கு சரியாக சொன்னீர்கள் என்று சரி கண்டுவிட்டும் போகிறாரே என்று ஆச்சர்யத்துடன் அமர்ந்து இருந்தனர்.
வந்த மனிதர் சென்று விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்கள் தங்களது தோழர்களின் ஆச்சர்யத்தை புரிந்து சொன்னார்கள். வந்தவர் யார் தெரியுமா? ஜிப்ரீல் என்று சொல்லக்கூடிய வானவர்களின் தலைவர். உங்களுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுப்பதற்காக இறைவன் அவர்களை அனுப்பி அவர் மூலம் கேள்வி கேட்டு கற்றுக்கொடுக்கிறான் என்று கூறினார்கள்.
இதன்படி, இஸ்லாமிய மார்க்கம் என்னும் கோட்டை மூன்று தூண்களை கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் என்பவையே அவை. இந்த மூன்று அடிப்படைகளை கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று விடயங்கள்தான் :
- ஷரீஆ எனப்படும் இஸ்லாமிய சட்டம்
- அகீதா எனப்படும் இஸ்லாமிய கொள்கை
- சூஃபித்துவம் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகம்
ஷரீஆ எனப்படும் இஸ்லாமிய மார்க்க சட்டம்
இது வெளிப்புற சட்டங்களை அடிப்படையாக கொண்டது. உதாரணமாக: எவ்வாறு தொழுவது? தொழும்போது என்ன ஓதுவது? எவ்வாறு நோன்பு நோற்பது? கொலை செய்தால் என்ன தண்டனை?, இது போன்ற வணக்கம், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, வியாபார கொடுக்கல் வாங்கல்கள், குற்றவியல் தண்டனை அனைத்துக்குமான வெளிப்புற சட்டத்திட்டங்கள் பற்றிய அறிவுதான் ஷரீஆ எனப்படும் இஸ்லாமிய மார்க்க சட்டம்.
அகீதா எனப்படும் இஸ்லாமிய கொள்கை
இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விடயம். மாறுப்பட்ட பல்வேறு நம்பிக்கைகளுக்கு மத்தியிலும் கொள்கைகளுக்கு மத்தியிலும் சரியான நம்பிக்கையை, கொள்கையை பின்பற்றுதலை இது குறிக்கும். உதாரணமாக – இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையானது இறைவனுக்கு உடலோ உருவமோ இல்லை என்பதாகும். ஆனால், ஒரு முஸ்லிம் இறைவனுக்கு உருவம் உண்டு, உடல் உண்டு என்று நம்பிக்கை கொண்டால், பெயரளவில் அவன் முஸ்லிமாக இருந்தாலும் அவன் உண்மை முஸ்லிமாக கருதப்பட மாட்டான்.
சூஃபித்துவம் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகம்
இது முழுமையாக உள்ளம் சம்பந்தப்பட்ட ஆன்மீக வழிமுறையாகும். எவ்வாறு உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அறிவது, அவனை வணங்குவது, அவனை அடைவது? என்று இறைவனை அடைவதற்கான வழிக்காட்டல்களை சொல்லி தரும் அறிவுதான்தான் சூஃபித்துவம் எனப்படுகிறது.
அதன்படி, மேல் சொன்ன மூன்று விடயங்களும் ஒழுங்காக ஒன்று சேர்ந்தாலே ஒருவன் உண்மை முஸ்லிமாக ஆகலாம்.
உதாரணமாக - தொழுகையை எடுத்துக்கொள்வோம். ஒரு முஸ்லிம் தினமும் ஐந்து நேரம் தொழுவது கடமை. தொழுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. முதலில் நிற்க வேண்டும், பின்னர் தரையில் நெற்றியை வைத்து வணங்க வேண்டும், ஒவ்வொரு நிலையிலும் சில வசனங்களை வாயால் ஓத வேண்டும். இவை தான் ஷரீஆ என்னும் வெளிப்புற சட்டங்கள்.
அடுத்து தொழும் மனிதன் சரியான நம்பிக்கையோடும் கொள்கையோடும் தொழவேண்டும். இறைவனை தொழுகிறேன் என்று ஆரம்பித்து விட்டான். ஆனால் அவனோ இறைவனுக்கு உருவம், உடல் உண்டு என்று நம்பிக்கை கொண்டவன். எனவே, இவன் என்ன தொழுதாலும் அதில் எவ்வித பலனும் இல்லை. எனவே, இதுதான் அகீதா என்னும் இஸ்லாமிய கொள்கை.
அடுத்து, ஒருவன் தொழுகையை ஆரம்பித்துவிட்டான். அவனது உடல் தொழுகிறது. ஆனால் அவனது உள்ளமோ இறைவனை நினைக்காமல், வேறு ஏதேனும் ஒன்றை நினைத்து கொண்டு இருக்கிறது. தொழுகை என்பது இறைவனை ஞாபகம் செய்து இறைவனுடன் ஒருவன் செய்யும் உரையாடல் ஆகும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால், அப்போது கூட இறைவனை நினைக்காமல் வேறு ஏதேனும் நினைவில் இருந்தால், அந்த தொழுகை வெறும் சடங்கு, சம்பிரதாயமானதே தவிர அவன் உண்மையில் இறைவனை வணங்கவில்லை. எனவே தூய உள்ளத்தோடு வேறு சிந்தனைகள் இன்றி இறைவனை மட்டும் நினைத்து தொழுவதுதான் சூஃபிசம்.
எனவே மேலே சொல்லப்பட்ட மூன்று காரணிகளையும் ஒரு மனிதன் முழுமையாக பின்பற்றும்போதுதான் அவன் பூரணத்துவம் பெற்ற ஒரு முஸ்லிமாக மாறுகிறான். பல்வேறு சிறப்புகளை பெற்றுக்கொள்கிறான். அதில் முக்கியமானது சூஃபித்துவம் பற்றிய அறிவு.
இஸ்லாத்தில் சூஃபிசம்
இன்று முஸ்லிம்கள் மறந்த, ஆனால் மிக தேவையான ஒரு அறிவுதான் இந்த சூஃபித்துவம். இதுதான் இஸ்லாத்தின் ஆணிவேர். ஆம், இஸ்லாம் என்பது வெறும் வெளிப்புற சடங்கு சம்பிரதாயம் அல்ல. உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அடைவதுதான் அதன் நோக்கம். தொழுகை, நோன்பு போன்ற எல்லா வணக்க வழிப்பாடுகளும் அந்த நோக்கத்தை அடைவதற்கான கருவிகளே.
ஆனால், இன்றைய முஸ்லிம்கள் இந்த வணக்க வழிப்பாடுகளை வெறுமனே சடங்கு சம்பிரதாயமாக மாற்றி கொண்டனர். அதன் உண்மை நோக்கங்களை புரிந்து கொள்ளவில்லை. சூஃபித்துவ அறிவை பெற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டனர். அதன் விளைவுதான், இன்று முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும் எல்லா விதமான சீரழிவுகளும் ஆகும்.
சூஃபிசம் போதிப்பது என்ன?
இஸ்லாமிய ஆன்மீகத்துறையான சூஃபித்துவம் போதிப்பது இறைவனை அடைவதற்கான சகல வழிமுறைகளையும் ஆகும். இறைவனை அடைவது என்பது அவ்வளவு சாதாரண விடயம் அல்ல. முதலில் இறைவனின் நேசத்தை பெறுதல் வேண்டும். அதற்கு இறைவனை நேசிக்க வேண்டும். அப்படி இறைவனின் நேசத்தை பெற முதலில் இறைவனின் பிரதிநிதியான மனிதர்களை நேசிக்க வேண்டும். ஏனைய படைப்புகளை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு நன்மை செய்து, கெடுதல் செய்யாமல் வாழுதல் வேண்டும்.
பின்னர் உள்ளத்தை பரிசுத்தப்படுத்துதல் வேண்டும். உள்ளத்தில் உள்ள தீய அழுக்கான எண்ணங்களை நீக்கி, உள்ளத்தளவில் எப்போதும் நல்லதையே நாடி, உலக ஆசாபாசங்களை உள்ளத்தை விட்டும் நீக்கி இறைவனின் நேசத்திற்கு மட்டுமே உள்ளத்தில் இடம் கொடுக்க வேண்டும்.
இப்படியாக சூஃபிசம் அன்பையும் அமைதியையும் போதிக்கிறது. எந்நேரமும் உள்ளத்தை இறைவனின் நினைப்பில் வைத்திருத்தல், இறைவனை தியானித்தல், நல்ல குணங்களை, நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளல், மதம், சாதி, இன, நாடு வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் அன்பு காட்டுதல், உதவி செய்தல், ஆனால் தீயவர்களால் சத்தியத்திற்கு பாதகம் ஏற்படும்போதும், சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும்போதும் உயிரை கொடுத்தேனும் தீயவர்களுடன் யுத்தம் செய்து சத்தியத்தை பாதுகாத்தல் (இதுவே உண்மையான ஜிஹாத்), மக்களுக்கு நல்லது செய்தல், நல்லதை சொல்லிக்கொடுத்தல் போன்ற போதனைகளையே சூஃபித்துவம் போதிக்கிறது. அதாவது இஸ்லாம் போதிக்கிறது.
சூஃபிச அறிவை பெறும் முறைகள்
சூஃபித்துவ கல்வியானது மார்க்கச்சட்ட கல்வியை போன்று வெறும் புத்தகத்தின் வாயிலாகவோ அல்லது வெளிப்புற அறிவின் (Explicit Knowledge) மூலமாகவோ கற்றுக்கொள்வதை விட உள்ளத்திலிருந்து உள்ளத்திற்கு (Heart to Heart) என்ற முறையிலேயே பெரும்பாலும் கற்பிக்கப்படுகிறது.
நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களின் தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா கூறினார்கள் (அல்லாஹ் அவர்களை பொருந்திகொள்வானாக)
“இரண்டு விதமான கல்விகளை நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஒன்றை மட்டுமே வெளியில் சொன்னேன், மற்றதை கூறினால் என் தொண்டை சங்கு வெட்டப்பட்டுவிடும்” என்பதாக (நூல் - புகாரி)
அந்த இரண்டு விதமான கல்விகள் தான் வெளிப்புற மார்க்க சட்ட கல்வியும், ஆன்மீக சூஃபிச கல்வியும் ஆகும் என்று மார்க்க மேதைகள் விளக்கம் தருகின்றனர்.
மார்க்க சட்ட கல்வி இன்றளவிலும் பகிரங்கமாக போதிக்கப்படுகிறது, கற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், ஆன்மீக கல்வி அவ்வாறு அல்ல. அதற்கு என்று ஒரு சிறப்பான முறை இருக்கிறது.
நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களிடம் இருந்து அவர்களது தோழர்கள் இக்கல்வியை முறைப்படி கற்றுக்கொண்டனர். அவர்களிடம் இருந்து அவர்களுக்கு பின் வந்தவர்களும், அவர்களிடம் இருந்து அவர்களுக்கு பின் வந்தவர்களும் என்று ஒவ்வொரு சமுதயாமாக வாழையடி வாழையாக இக்கல்வி முறைப்படி போதிக்கப்பட்டு வருகிறது.
தரீக்காக்கள் என்றால் என்ன?
இப்படி நபிகள் நாயகம் (ﷺ) அன்னவர்களிடம் இருந்து இன்று வரை இந்த சூஃபிச அறிவுகள் வந்து சேர்ந்த அத்தொடரே தரீக்கா (வழி) என்று அழைக்கப்படுகிறது.
இஸ்லாத்தில் பல தரீக்காக்கள் உள்ளன. காதிரியா, ரிபாயியா, சிஸ்தியா, நக்ஷபந்தியா, ஷாதுலியா போன்ற இன்னும் பல தரீக்காக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் உண்மையில் இஸ்லாமிய ஆன்மீக பள்ளி பாசறைகளே.
அதாவது,சூஃபித்துவ கல்வியை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் இருந்து இன்று வரை கொண்டு வரக்கூடிய ஆன்மீக சங்கிலி தொடர்களே ஆகும். இவை பல கிளைகளாக பிரிந்து இன்றளவும் உலகளவில் இஸ்லாமிய ஆன்மீக கல்வியை மக்களுக்கு போதித்து கொண்டு உள்ளன.
இதன்படி, ஒவ்வொரு தரீக்க்காகளிலும் பல ஆன்மீக தலைவர்கள் அதாவது, ஆன்மீக ஆசான்கள் இருப்பர். இக்கல்வியை கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவன் அவர்களில் ஒருவரிடம் மாணவராக ஆகி அவர் மூலம் இக்கல்வியை முறைப்படி கற்றுக்கொள்கிறான். அதற்காக அவரிடம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளலே அரபி மொழியில் "பைஅத் செய்தல்" என்று அழைக்கப்படுகிறது. அந்த ஆன்மீக ஆசானை "முர்ஷித்" அல்லது "ஷெய்க்" என்றும் மாணவனை "முரீத்" என்றும் சொல்லப்படுகிறது.
சூஃபிசம் மூலம் இறைவனை அடைவது எப்படி?
ஒரு முர்ஷித் (ஆசிரியர்) தன்னிடம் பைஅத் செய்துள்ள மாணவனை இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக வழிகாட்டுவார். அவனுக்கு தேவையான அறிவுரைகள், வழிக்கட்டல்களின் மூலம் அவனை நேர்வழிக்கு கொண்டு செல்லுவார்.
அதேநேரம், மாணவனின் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தவும், இறை சிந்தனையை அதிகப்படுத்தவும் அம்மாணவனுக்கு முதலில் சில திக்ர்களை (வார்த்தைகளை) சொல்லிக்கொடுத்து அதனை ஓதி வரும்படி கூறுவார். அதேபோல அவர் கூறும் கட்டளைகளை ஒரு மாணவன் முறைப்படி செய்து வருவான். அவை யாவும் முழுக்க முழுக்க அவனை ஒழுக்க சீலனாக ஆக்கவும் இறை அன்பை பெற்ற ஒருவனாக ஆக்க்கவுமாகவே இருக்கும்.
இப்படி தொடர்ந்து பயின்று வரும் அம்மாணவனின் ஆன்மீக படித்தரம் அவன் அறியாத நிலையிலேயே உயர்கிறது. அவனின் படித்தரத்திற்கு ஏற்ப அவனுக்கு வழங்கப்படும் கல்வியும் மாறுப்படுகிறது.
இப்படி ஆன்மீக பயிற்சியில் ஈடுப்பட்டு வரும் ஒருவனது வாழ்க்கை, வணக்கம், செயற்பாடுகள் அனைத்தும் சாதாரண மனிதர்களது செயற்பாடுகளை விட்டும் முற்றிலும் வித்தியாசப்பட்டு இருக்கும். சாதாரண மனிதர்களை போன்று உலக ஆசாபாசங்களில் சிக்கி மனதை பறிக்கொடுத்து வாழமாட்டான். போட்டி, பொறாமை, கர்வம், திமிர், நம்பிக்கை மோசடி, அநியாயம் செய்தல், கோபம், குரோதம், தீவிரவாதம் என்று எந்த கெட்ட குணங்களும் அவனிடம் இருக்காது.
உலகத்தில் குடும்பத்தோடும் சக மனிதர்களோடும் வாழுவான். ஆனால் அனைவருக்கும் நல்லது செய்து வாழுவான். நல்லவனாக வாழுவான். பிறருக்கு எந்த விதத்திலும் தன் நாவினாலோ, உடலாலோ துன்பம் இழைக்க மாட்டான். உலகத்தில் அனுமதிக்கப்பட்ட விதத்தில் இன்பம் அனுபவிப்பான். ஆனால், வரம்பு மீற மாறமாட்டான். அதிலேயே தன் உள்ளத்தை பறிக்கொடுத்து அடிமையாகி விட மாட்டான்.
அவ்லியாக்கள் (இறைநேசர்கள்) என்றால் யார்?
இப்படி அவர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் செய்து வருகையில் அவரது ஆன்மீக படித்தரம் உச்ச நிலையை அடைகிறது. அவர் இறைவனின் நேசத்தை பெற்ற ஒரு இறைநேசராக மாறுகிறார். இத்தகைய சிறப்பு மிக்க மனிதர்களையே முஸ்லிம்கள் "அவ்லியாக்கள்" அதாவது இறைநேசர்கள் என்று சொல்லுகின்றனர். இஸ்லாமிய வரலாற்றில் அன்று தொட்டு இன்று வரை எண்ணிகையில் அடங்காத அவ்லியாக்கள் உலகத்தில் தோன்றி மறைந்து உள்ளனர். இன்னும் தோன்றி கொண்டே இருப்பர்.
உதாரணமாக - பக்தாத்தில் வாழ்ந்து அடங்கப்பெற்ற ஷெய்க் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி வலியுல்லாஹ், அஜ்மீரில் வாழ்ந்து அடங்கப்பெற்ற ஷெய்க் காஜா முயினுத்தீன் சிஸ்தி வலியுல்லாஹ், நாகூரில் வாழ்ந்து அடங்கப்பெற்ற நாகூர் ஆண்டகை ஷெய்க் ஷாஹுல் ஹமீத் வலியுல்லாஹ், கொழும்பில் அடங்கப்பெற்றுள்ள ஷெய்க் உஸ்மான் வலியுல்லாஹ் (அல்லாஹ் இவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக) ஆகிய அனைவரும் அவ்லியாக்களுக்கு உதாரணங்களாகும்.
இந்த இறைநேசர்கள் சில நேரங்களில் இறைவனின் அருளை கொண்டு சில அற்புதங்களை நிகழ்த்துகின்றனர். அவை முஸ்லிம்களால் "கராமத்" என்று சொல்லப்படுகிறது. அவை இறைவன் தன் நேசர்களுக்கு கொடுத்துள்ள ஒரு வெகுமதியாகும்.
இந்த இறைநேசர்கள் மதம், இனம், மொழி, நாடு என எவ்வித வேறுப்பாடும் இன்றி எல்லா மனிதர்களாலும் நேசிக்கப்படுகின்றனர். இவர்களது அடக்கஸ்தலங்களுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த பல்வேறு மதத்தை சேர்ந்த மனிதர்கள் போய் வருகின்றனர். அந்த அடக்கஸ்தலங்களுக்கு "தர்கா" என்று சொல்லப்படுகிறது. அம்மனிதர்கள் தமது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், தேவைகள் குறித்தும் அங்கே சென்று அந்த இறைநேசரிடம் முறையிடுகின்றனர். அந்த இறைநேசர் அது சம்பந்தமாக இறைவனிடம் பிரார்த்தித்து அம்முறையீடு ஏற்றுக்கொள்ள வழிவகுக்கிறார்கள்.
அப்போது அந்த இறைநேசர் மதம், மொழி, நாடு என எந்த ஒரு வேறுப்பாடும் காட்டுவதில்லை. நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் உண்மையான ஆன்மீக வாரிசுகளான அந்த இறைநேசர்கள் நபிகள் நாயகத்தை ﷺ போன்றே மக்களிடையே பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் உதவி செய்கின்றனர். அவர்களது நோக்கம் எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும். எல்லா மக்களும் நேர்வழி பெற வேண்டும் என்பது மட்டுமே. இப்படி அவர்கள் உதவி செய்ததன் மூலம் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளம். ஆனால் அவர்கள் ஒருபோதும் அம்மக்களிடம் நீ இஸ்லாத்தை தழுவினால்தான் நான் உனக்கு உதவி செய்வேன் என்று விலை பேசியது கிடையாது. அவர்களின் உயரிய பண்புகளாலும் நற்குணத்தாலும் கவரும் மக்கள் அவர்கள் மீது கொள்ளும் அளவில்லா காதல் அம்மக்களை இஸ்லாத்தை நோக்கி வர வைக்கின்றன.
சூஃபிசம் சம்பந்தமாக இன்னும் கற்றுக்கொள்வது எப்படி?
எமது இந்த கட்டுரை சூஃபிசம் சம்பந்தமான ஒரு அறிமுக கட்டுரை மட்டுமே. சூஃபிசம் சம்பந்தமாக இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவும், இந்த சூஃபிச வழிமுறையை பின்பற்றி இறைவனை அடைவதற்காக ஆன்மீக பாதையில் செல்ல விரும்புவோரும் வாசிக்க நிறைய நூல்கள் உள்ளன.
குறிப்பாக அறிவுலக மாமேதை என்று முஸ்லிம்களால் அழைக்கப்படும் மாபெரும் அறிஞர் இமாம் கஸ்ஸாலி அவர்கள் எழுதிய மாபெரும் நூலான "இஹ்யாவு உலூத்தீன்" என்ற நூல் சுமார் 1000 வருடங்களாக சூஃபிச துறையில் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. |