இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஷைக் முஹம்மது கஜ்ஜாலி(ரஹ்) அவர்கள் எப்பொழுதும் اللهم ارزقني الوفاة في بلد حبيبك المصطفى
யா அல்லாஹ்! உனது அன்பிற்குரிய நேசரின் ஊரில் எனக்கு மரணத்தை அருள்வாயாக! என்று துஆ செய்வதுடன் என்னை ஜன்னத்துல் பகீஃஇல் அடக்கம் செய்யுங்கள் என மாணவர்களிடமும் உறவினர்களிடம் கூறுவார்களாம்.
அவர்கள் இது எப்படி முடியும்? ஒரு ஆத்மா எவ்விடத்தில் மரணிக்கும் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும் ரகசியமாயிற்றே என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம்.
ஆனால் அல்லாஹ் ஷைக் அவர்களின் ஆசையை நிறைவேற்ற ஏற்பாடு செய்தான்
ஷைக் அவர்களின் 79 வயதில் சவூதியின் தலைநகர் ரியாத்தில் #இஸ்லாமும் மேற்குலகும் - என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைப்புவந்தது.
ஷைக் அவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு அதில் கலந்துகொள்ள வேண்டாம் என உறவினர்கள் தடுத்தனர். குறிப்பாக மருத்துவர்கள் 'நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்தாகிவிடும்' என எச்சரிக்கை செய்தார்கள்
அக்கால கட்டத்தில் ஹதீஸ் கலை தொடர்பான அவர்கள் நூல் ஒன்று பெரிதும் சர்ச்சைக்குள்ளானது! சவுதி அறிஞர்களால் அந்நூல் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.
ஆனாலும் ஷைக் கஜ்ஜாலி அவர்கள் அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள் அவர்கள் உரையாற்றும்போது, ஒருவர் எழுந்து நீங்கள் சுன்னாவை புறக்கணிக்கிறீர் என குற்றம் சாட்டினார். அதனை மறுத்து, தான் எவ்வாறெல்லாம் சுன்னாவை நேசிக்கிறேன் என்பதை விளக்கிப் பேசும்பொழுது உணர்ச்சிவசப்பட்டவராக "நான் இவ்வுலகில் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா மேலோங்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுகிறேன்" என்று பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவரின் மரணச் செய்தியும் ஜன்னத்துல் பகீஃஇல் அடக்கமாக வேண்டும் என்ற அவரின் விருப்பமும் மன்னர் அப்துல்லாஹ்விடம் தெரிவிக்கப்பட்டது. மன்னர், ஷைக் இப்னு பாஜ் அவர்களிடம் ஆலோசித்து ஷைக் கஜ்ஜாலி அவர்களின் உடலை மதீனா விற்குக் கொண்டு வந்து ஜன்னத்துல் பகீஃஇல் அடக்கம் செய்ய ஆணையிட்டார்
முனைவர் ஜஃலூலுல் நஜ்ஜார் சொல்கிறார்: அவரின் ஜனஸா தொழுகையில் நானும் கலந்து கொண்டேன். உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தனிவிமானத்தில் மக்கள் வந்து குவிந்தனர், தொழுகைக்குப்பின் அவரின் உடலை ஜன்னத்துல் பகீஃற்கு கொண்டுவந்தபின்னரும் மஸ்ஜிதுன் நபவிவரையிலும் மஸ்ஜிதின் உள்பகுதியிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.
முனைவர், மேலும் சொல்கிறார். அடக்கம் செய்ய கப்ரைத் தோண்டுபவர்களில் ஒருவர் சொன்னார்: உங்கள் நண்பர் ஒரு அதிசயமான மனிதராக இருக்கிறார் நான் பல இடங்களில் குழி தோண்டினேன் பூமி ரெம்பவும் இருக்கமாக இருந்ததால் எளிதாக தோண்ட முடியவில்லை.
ஆனால் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களின் ஊழியரும் ஹதீஸ் கலை வல்லுநரான நாபிஃ(ரஹ்)அவர்களின் கப்ருக்கும் இமாம் மாலிக் பின் அனஸ்(ரஹ்) அவர்களின் கப்ருக்கும் இடைப்பட்ட பகுதிதான் குழி தோண்டுவதற்கு இலகுவாக இருந்தது என்றார். ஒரு ஹதீஸ் கலை வல்லுநரின் கப்ருக்கும் பிக்ஹு சட்டங்களின் முன்னோடியான ஒரு இமாமுடைய கப்ருக்குமிடையே அல்லாஹ் ஷைக் அவர்கள் விரும்பியவாறே இடம் கொடுத்தான் அல்லாஹு அக்பர்
ஷைக் முஹம்மது கஜ்ஜாலி அவர்கள் 09/03/1996ம் நாளில் தனது 79ம் வயதில் மறைந்தார்கள் அல்லாஹ் ஷைக் அவர்களுக்கு சுவனத்தின் உயர்ந்த இடத்தை வழங்குவானாக!
--அரபு இணையதளத்திலிருந்து கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி
|