நான் V. சாதிக் பாட்சா, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் எனது ஊர்.
சின்ன வயதில் இருந்தே சினிமா தியேட்டர்களோடும் திரைப்படங்களோடும் சில காரணங்களால் தொடர்பில் உள்ளவன்.
ஆரம்பத்தில் என் தாயார் முறுக்குகளை சுட்டு கொடுக்க என் ஏழு வயது முதல் அந்த முறுக்குகளை சினிமா தியேட்டர் கேண்டீனுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவேன்.
அதன்பின் என்னுடைய பதின் பருவத்தில் ஒரு பாப்கார்ன் மிஷின் வாங்கி பாப்கார்ன் உற்பத்தி செய்து சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா தியேட்டர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளோம்.
பட இடைவேளை முடிந்து வரவு செலவெல்லாம் பார்த்த பிறகே கேண்டீன்காரர் பணம் கொடுப்பார்.
அதுவரை நேரம் போகனும் என்பதால் இலவசமாக படம் பார்த்துக்கொள்வேன். அப்போது தான் அந்த இடத்தில் பொழுது போக்க முடியும்.
சில படங்களுக்கு கூட்டம் அதிகமாக வந்தால் படம் ஆரம்பிக்கும்போதே போக வேண்டும்.
கேண்டீனில் நின்று வியாபாரமும் செய்து கொடுக்கனும். இது தான் தின்பண்ட சப்ளையர்களின் அக்கால வழக்கமாக இருந்தது.
இந்த ஐம்பதாண்டுகால திரைப்படத் தொடர்பால் சினிமாக்களின் போக்கினையும், அதன் மூலம் மக்கள் மனங்களில் திரைத்துறையினர் பதிய வைக்க முயற்சிக்கும் சித்தாந்தங்களையும் என்னால் இலகுவாக புரிந்து கொள்ள முடிந்தது.
கருப்பு வெள்ளைப் படங்கள் முதல் இன்றைய நவீனமயமாக்கப்பட்ட திரையரங்குகளின் திரைப்படங்கள் வரை பல படங்களை பார்த்துள்ளேன்.
இந்த ஐம்பது ஆண்டுகளில் திரைப்படங்களில் இஸ்லாமியர்களுக்கென்று நல்ல காஸ்ட்யூம், முக்கிய கதாபாத்திரம் என்று எதுவும் இருக்காது.
தாடி, தொப்பி, ஜுப்பா, நெற்றியில் கருப்பு தழும்பு, கையில் தாயத்து, கொச்சையான தமிழ்ப்பேச்சு இவ்வளவுதான் முஸ்லிம்கள் என்று மட்டரகமாக அடையாளம் காட்ட முயற்சி செய்தார்கள்.
மறைந்த மாண்புமிகு முன்ளாள் முதலவர் எம்.ஜி.ஆர். அவர்களே கூட மகாதேவி எனும் பிரபலமான படத்தின் ஒரு காட்சியில் முஸ்லிமாக வேடம் போட்டு தாயத்து தான் விற்பார்.
"தில்லில்லா மனுஷன்கி பல்லேல்லாம் நல்லாரிக்கி சொல்லெல்லாம் விஷமிரிக்கி பாருங்கோ!இது நல்லார்க்கும் பொல்லார்க்கும் அல்லா நடுவேரிக்கும் எல்லாம் விளக்கிப்போடும் பாருங்கோ... ஆவோ தாயத்து தாயத்து..... லேலோ தாயத்து தாயத்து....."
இதுதான் அந்தப்பாடல் வரிகள்.
எவ்வளவு கொச்சையான தமிழ் பாருங்கள்......
இப்படி தாயத்து விற்பவர்களாகவும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் தொடர்பே இல்லாதவர்களாகவும் முஸ்லிம்களை காட்டி சினிமாக்களை எடுத்தனர்.
அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒன்றிரண்டு படங்கள் முஸ்லிம்களுக்கு நல்ல வேடங்களை தந்ததுண்டு.
பாவமன்னிப்பு போன்ற ஒன்றிரண்டு படங்களை அதற்கு உதாரனமாக சொல்லலாம்.
பெரும்பாலான தமிழ்ப்படங்கள் முஸ்லிம் கேரக்டரை காட்டுவதென்றால் மேலே நான் சுட்டிக்காட்டிய காஸ்ட்யூம்களோடும், கொச்சைத் தமிழ் பேசி சாம்பிராணி போடும் கேரக்டராகவும், அரபு நாட்டில் இருந்து சூட்கேஸில் பணம் கொண்டுவந்து, நிம்பிள் பொன்னு தரான் நம்பிள் பனம் தரான் என்று ராஜஸ்தான் சேட்டான் மொழியில் பேசி கள்ளக்கடத்தல் செய்யும் பாத்திரங்களாகவே முஸ்லிம்களைக் காட்டி வந்தனர்.
அதன் பிறகு மணிரத்தினம் போன்ற சமூக அக்கறையற்ற மேல்தட்டு இயக்குனர்கள், அர்ஜுன், விஜயகாந்த், விஜய் எனத் தொடங்கி நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று சொல்லும் கமலஹாசன் வரையிலான அத்தனை பிரபல நடிகர்களும் தங்கள் ஹீரோயிஸத்தைக் காட்டுவதற்காக முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதி, பிரிவினைவாதி, பயங்கரவாதி, காஷ்மீர் தீவிரவாதி, ஆப்கான் தீவிரவாதி என்று பல வகைகளில் கடந்த முப்பது ஆண்டுகாலங்களுக்கும மேலாக காட்டியதன் விளைவாக.... விபரமறியா ஒரு சிறுவனிடம் தீவிரவாதியின் படம் வரையச் சொன்னபோது அது தொப்பியும் தாடியும் வைத்திருந்த ஒருத்தனை வரைந்தது என்றால், இவர்கள் பணம் சம்பாதிக்கவும், அரசியல் செய்யவும், ஆட்சியைப் பிடிக்கவும் ஒரு சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளாகச் சித்தரித்து குதறி எடுத்தனர். அதில் குளிர் காய்ந்தனர்.
சினிமா ஒரு வலிமையான ஊடகம் என்பதால், அதன் தாக்கம் சமூகம், அரசியல், அரசு இயந்திரம் ஆகியவைத் தாண்டி நீதித்துறை உட்பட அனைத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி சமூக நீதி எனும் தளத்தில் முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமுதாயமாக ஆக்கி ஓரம்கட்டப்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.
முஸ்லிம்களின் உடை, உணவு, வழிபாடு, வணிகம் என்று அனைத்திலும் அவர்களின் உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டபோது அதனை களைய துணைநிற்க வேண்டிய சக பெரும்பான்மை சமூகம் அமைதியாக வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அவர்களின் உள்ளங்களில் இஸ்லாமிய வெறுப்பை விதைத்ததில் காட்சி ஊடகங்களுக்கு குறிப்பாக சினிமாத்துறைக்கு பெரும் பங்களிப்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்த வெகுஜன வெறுப்பை அல்லது பாராமுகத்தைத் தனக்கு சாதகமாக்கி இரு பெரும் சமூகங்களுக்கிடையே பகையை மூட்டி அரசியல் ஆதாயம் பெற வெள்ளைக்காரன் காலத்தில் பற்றவைக்கப்பட்டு இன்றைய கொள்ளைக்காரர்கள் வரை பற்றியெரியச் செய்த அரசியல் தீ 'அயோத்தி'.
ஆனால் நிஜம் என்னவெனில் முஸ்லிம் சமுதாயம் இந்த சித்தரிப்புக்கெல்லாம் நேரெதிராகவும் நல்லவர்களாகவும் தான் உள்ளது. (சில விதிவிலக்குகளைத் தவிர)...
அதற்கு உதாரணம் நானே!
நான் எனது இருபத்தைந்தாவது வயதில் ஒரு நூல் மில்லில் பகுதிநேரக் கணக்காளராக வேலை செய்து வந்தேன்.
அப்பொழுது அந்த நூல்மில்லில் நூல் பைகள் தைக்கும் வேலை செய்துவந்த முன்னாள் ஊழியர், அவர் ஒரு பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். தீண்டத்தகாதவராக ஆக்கி அவரது சொந்த மதத்தால் ஒதுக்கப்பட்டு சேரியில் (அ) காலனியில் வசித்தவர். கல்வியறிவே இல்லாத ஏழை. அவர் வயதானவரும் கூட.
ஒரு நாள் மதியவேளை நான் உணவு இடைவேளை முடிந்து வீட்டிலிருந்து மில்லுக்குத் வந்து கொண்டிருந்தேன்.
எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அந்தப் பெரியவர் மீது ஒரு பஸ் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டது.
எனக்குத் தெரிந்தவர் என்பதால் நான் உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தந்துவிட்டு அந்தப் பெரியவரை கோபி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன்.
அவர் நான் வேலை பார்த்த நூல்மில்லுக்கு அருகில் காலனியில் வசித்தவர்.
எனவே மில் மேலாளரைத் தொடர்பு கொண்டு விபரம் சொல்லி அப்பெரியவரின் வீட்டுக்கு தகவல் கொடுத்தேன்.
கோபி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உடனடியாக கோயம்பத்தூர் எடுத்துச் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும் என்று அரசு ஆம்புலண்ஸில் அனுப்பி வைத்தனர். அடிபட்ட அந்தப் பெரியவர், அவரது மனைவி, மகன், மருமகள் இவர்களோடு நான். அடிபட்டவரும் அவரது உறவினர்களும் ஷெட்யூள் காஸ்ட் எனும் தாழ்ந்த ஜாதியினர், மேலும் கல்வியறிவே இல்லாதவர்கள் அவர்கள் தவிப்பதைப் பார்த்து நான் வேலைக்கு லீவ் சொல்லிவிட்டு ஆம்புலண்ஸில் ஏறிவிட்டேன்.
ஆம்புலண்ஸ் அவினாசி எனும் ஊரை நெருங்கும் போது பின்னால் இருந்து சப்தம் போட்டார்கள் வண்டியை நிறுத்தி நானும் டிரைவரும் போய்ப் பார்த்தால், அவர் இறந்துவிட்டார். நான் ஆம்புலண்ஸ் டிரைவரிடம் வண்டியை கோபிக்கே திருப்பிவிடலாம் இவர்கள் பாவம் கோயம்புத்தூர் சென்று என்ன செய்வார்கள் என்று கேட்டேன், அவர் முடியவே முடியாது எனக்கு மருத்துவர் இட்ட கட்டளை இவரைக் கொண்டுபோய் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்பதாம் என்னால் மீறமுடியாது அப்படிச் செய்தால் என் வேலை போய்விடும் என்று கூறி ஆம்புலன்ஸை கோவை அரசு மருத்துவமனைக்கே கொண்டுசென்று அடிபடவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசரப் பிரிவுக்குள் அனுப்பிவைத்தனர். நான் மட்டும்தான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். இரண்டு மூன்று மருத்துவர்கள் வந்து அவரைப் பரிசோதித்துவிட்டு எதுவுமே சொல்லவில்லை தள்ளி நின்று கொண்டனர். ஸ்டாஃப் நர்ஸ் எனும் ஒரு வயதான அம்மா ஒருத்தரும் வந்து பரிசோத்தித்தார். நான்கு பேரும் பார்த்து முடித்த பிறகு டீன் என்னைப் பார்த்துச் சொன்னார், இவர் இறந்துவிட்டார் என்று.
நான் அவரிடம் கேட்டேன், இவரது உறவினர்களுக்கு ஒரு விவரமும் தெரியாது, இதே ஆம்புலன்ஸின் எங்களை கோபிக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள் அங்கே சென்று உடற்கூறாய்வு செய்து கொள்கிறோம் என்று கெஞ்சிக் கேட்டேன். அதற்கு தலைமை மருத்துவர், எங்கள் மருத்துவமனைக்கு யாராவது பிணமாக வந்தால் உடற்கூறாய்வு செய்யாமல் வெளியே அனுப்ப சட்டத்தில் இடமில்லை எனவே நீங்கள் மருத்துவமனை சரக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து, FIR போட்டு வாங்கிக் கொடுத்தால்தான் போஸ்ட்மார்ட்டம் செய்து உடலைத் தரமுடியும் என்று சொல்லும் போது நேரம் இரவு 7:15 மணி.
இறந்தவரின் உறவினர் துக்கத்தில் அழுவார்களா அல்லது இந்த வேலைகளுக்கு அலைவார்களா? கோவை மற்றும் கோபி என்று இரு காவல் நிலையங்களில் FIR போட வேண்டும், பிணத்தை கோபி காவல் நிலையத்தார் வந்து அங்க மச்ச அடையாளங்களைப் பதிய வேண்டும், கோவை முதல் தகவல் அறிக்கையை கோபி முதல் தகவல் அறிக்கையோடு கோர்வை செய்ய வேண்டும். நான் அந்த உறவினர்கள் மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு கோவை காவல் நிலையம் சென்று நிலைமையை விளக்கி FIR போட்டு வாங்கிக் கொண்டு, அதை கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து நாளை காலை கோபி காவல் நிலையத்தில் இருந்து FIR போட்டு வாங்கிவந்து ஒப்படைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த மூவருக்கும் டிபன் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து நாங்கள் நால்வரும் இரவு கடைசி பஸ் 9 மணிக்கு கோவையில் இருந்து கிளம்பி அவர்களை வரும் வழியில் நல்லகவுண்டன்பாளையம் ஸ்டாபிங்கில் இறக்கிவிட்டுவிட்டு நாளைக்கு நானே கோவை சென்று மற்ற வேலைகளைப் பார்த்து சடலத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறேன் நீங்கள் கவலைப் படாமல் ஆகவேண்டியதைப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு நான் வீட்டிற்கு வந்து சேரும் போது மனி 11:30
மறுநாள் காலையில் நேரத்திலேயே நன்பர் ஹோம்கார்டாக இருந்தவர், மோகன் என்பவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கோபி காவல் நிலையம் சென்று விஷயத்தை விளக்கி கோவை FIR காப்பியைக் கொடுத்து மேற்படி வாகனவிபத்தை வழக்காகப் பதிந்து இடையிடையே கோபி மருத்துவமனைக்குச் சென்று தேவையான படிவங்கள் அது இது என்று எல்லாவற்றையும் முடித்து ஒரு கார் ஒன்றை வாடகைக்குப் பிடித்து, நூல் மில் ஓனர் ஸ்பான்ஸர் செய்தார், நான், நன்பர் மோகன் மற்றும் கோபி தலைமைக்காவலர் ஆகிய மூவரும் கோவை காவல் நிலையம் சென்று அங்குள்ள முறையான கோப்புகளைத் தயார் செய்து உடற்கூறாய்வு செய்யும் அதிகாரியிடம் ஒப்படைக்கையில் அன்று அங்கே ஏழெட்டுப் பிணங்கள் காத்திருந்தன... இரண்டு முறை ஏட்டைய்யாவுடன் பிண அறைக்குள் நுழைந்து பிணத்தை நான் அடையாளம் காட்டினேன். ஏட்டைய்யா வேண்டிய தகவல்களை எல்லாம் கேட்டுக் கேட்டு எழுதிக்கொண்டார் எப்படியோ ஒரு வழியாக மதியம் ஒரு மணிக்கு உடலை ஒப்படைத்தார்கள். இவ்வளவு ஆம்புலன்ஸ்கள் இல்லாத காலம், கறுப்பு கலர் கார்கள் பிணம் எடுத்துச் செல்வதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கும் அதில் ஒன்றை வாடகைக்குப் பேசி உடலைக் கொண்டு வந்து சுமார் மூன்று மணியளவில் ஒப்படைக்கும் போது அனைத்து உறவினர்களும் கையெடுத்துக் கும்பிட்டனர். பிறகு இன்ஸ்யூரன்ஸ் வழக்கில் நானே சாட்சியம் அளித்து காப்பீட்டுத் தொகை அந்தக் குடும்பத்துக்குச் சென்று சேரும்வரை எந்தப் பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் உதவினேன்.
இப்பொழுது மேலே நான் திரைப்படங்கள் பற்றி எழுதிய விஷயங்களை நினைவு கூர்ந்துகொள்ளுங்கள்.
படிப்பறிவில்லாத, ஏழ்மை நிலையில் உள்ள ஒரு மனிதரை தீண்டத்தகாதவன் என்று அவர்களது சொந்த மதமே தள்ளி நிற்கையில் நான் இவ்வளவு தியாகங்கள் செய்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளும் நம்முடைய உண்மையான குணத்தைப் பிரதிபலித்து படம் எடுத்துப் பாராட்டாவிட்டாலும் நம்மைத் தீவிரவாதி என்று படம் எடுத்துக் கேவலப்படுத்துகிறார்களே என்று நான் எத்தனையோ முறை வருந்தியது உண்டு.
அந்த வலி ஏற்படுத்திய காயங்களுக்கு எல்லாம் மருந்தாக இளம் இயக்குநர் மந்திரமூர்த்தி எடுத்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் அயோத்தி திரைப்படம் அருமருந்தாக இருக்கிறது. என் போன்ற சமூக செயற்பாட்டாளர்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது.
கடைசிக் காட்சியில் கதாநாயகன் தன் பெயரை அப்துல் மாலிக் என்று உச்சரிக்கும் போது என் காதில் சாதிக் பாட்சா என்றே விழுந்தது.

அயோத்தி என்பது ஏதோ கற்பனைக் கதையல்ல இதோ சாதிக் பாட்சா சாட்சியம் அளிக்கிறேன் இது என் கதை என்னைப் போன்ற லட்சக்கணக்கான சாதிக் பாட்சாக்களும் அப்துல் மாலிக்குகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.... அன்பிற்குரிய சகோதரர்களே எங்களைப் பாராட்டாவிட்டாலும் பழி தூற்றாமல் இருக்கலாமே.....
அயோத்தி படத்திற்காகா உழைத்த அத்தனை இதயங்களுக்கும் நன்றி
'காஷ்மீர் பைல்ஸ்' எனும் படத்தை வெளிநாட்டவர்களே காறி உமிழ்ந்த நிலையில் இங்குள்ள பவர்ஃபுல் பெர்ஸ்னாலிட்டிகள் அந்தப் படத்தை புரொமோட் செய்து நாங்கள் பயங்கரவாதத்தின் பாதுகாவலர்கள் என்றும் முஸ்லிம் விரோத்த்தை ஆதரிப்பவர்கள் என்றும் தாம் அடையாளம் காணப்படுவதைப் பற்றி துளியும் கூச்சமில்லாமல் நடந்து கொள்வதை எப்படி சகிப்பது???
இந்த நிலையை மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அத்தனையையும் நாம் செய்யவேண்டுமல்லவா?
தமிழக அரசு இந்தப்படத்துக்கு வரிவிலக்கு உள்ளிட்ட அனைத்து ஆதரவினையும் விளம்பரங்களையும் செய்துதரவேண்டும் என்று இந்தப் பதிவின் வழியே நான் கோரிக்கை வைக்கிறேன்.
எனது கோரிக்கை சரிதான், நியாயமானதுதான் என என்னுவோர் இதைப் படித்துவிட்டு கட்டாயம் ஷேர் செய்யுங்கள்.
ஒன்று பத்தாகும், பத்து நூறாகும், நூறு லட்சங்களைத் தாண்டி கோடிக்கணக்கான மனங்களில் இந்த உண்மை அயோத்தீ பரவட்டும்.
இனி படம் எடுப்பவர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும்.
உங்கள் நண்பன்
V.சாதிக்பாட்சா, கோபிச்செட்டிபாளையம் 9789223357
|