Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இந்துமாக்கடல் வாழ் சமூகத்தில் மறைந்துவரும் மொழியைக் காப்பாற்றும் காயல்பட்டினம்
Posted By:peer On 7/25/2023 10:59:50 AM

தமிழ்நாட்டின் முத்துக்குளிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை நகரமான காயல்பட்டினத்தில் மிக வேகமாக வழக்கொழிந்து கொண்டிருக்கும் அர்வி என்றழைக்கப்படும் அறபுத்தமிழ் மொழியை மீட்டுருவாக்கும் முயற்சியில் காயல்பட்டினவாசிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

காயல்பட்டினத்தில் உருவான அறபுத்தமிழ், அறபுகளுக்கும் தமிழ்முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு தொடர்புப் பாலமாக அமைந்திருந்தது. சென்னை புதுக்கல்லூரியின் பேராசிரியர் கே.எம்.ஏ. அஹமது சுபைர் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையின்படி கி.பி.எட்டாம் நூற்றாண்டுமுதல் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை அறபுத்தமிழ் மிகத்தீவிரப் பயன்பாட்டில் இருந்ததையும், மேலும் வணிகம், சொத்துப் பரிமாற்றம், கடிதத் தொடர்பு, இலக்கியம் போன்றவற்றில் தமிழ்முஸ்லிம் சமூகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தியதையும் அறிய முடிகிறது.

“தமிழ் – அறபி ஆகிய இரண்டு செவ்வியல் மொழிகள் இணைந்து ஈன்ற அழகிய குழந்தைதான் அர்வி மொழி. அர்வி அதன் நோக்கத்தையும் பெருமையையும் இழந்தாலும், அது மீட்டுருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்” என்கிறார் காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாளை பஷீர்.

அர்வி ஆர்வலர்கள் காயல்பட்டினத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் பாதுகாக்க, ‘காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையம்’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். விரைவில் இம்மையம் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் அர்வி பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தவிருக்கிறது. மேலும், காயல்பட்டினம்வாழ் தமிழ்முஸ்லிமாகிய நான் இந்த அர்வி மொழி எப்படித் தோன்றியது என்பதுகுறித்து என் சமூகத்திடமிருந்து தெரிந்துகொண்டேன். அர்வி மொழியின் பல நூற்றாண்டுகாலத் தொடர் வளர்ச்சியை பதிந்துவைத்துள்ள ஆவணங்கள்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். அர்வி மொழி எப்படித் தோன்றியது என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர், முஸ்லிம்களிடையே மறக்கப்பட்டுவரும் ‘மனைவி வீட்டில் கணவன் குடிபோகும்’ (Matrilocal) தனிச் சிறப்பான மரபின் வரலாற்றை காயல்பட்டினத்தில் காண வேண்டும்.

17ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வடக்கு ஐரோப்பியர்கள் தங்களது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் கடல்வழியைக் கண்டுபிடிக்கவும் தொடங்கியபோது, இந்துப்பெருங்கடல் வணிகமானது அறபுகளாலும் பாரசீக வளைகுடாவின் கடற்புறங்களிலிருந்து வந்த பாரசீகர்களாலும் நிரம்பியிருந்தது. ஏறக்குறைய 7ஆம் நூற்றாண்டிலும் அதனைத் தொடர்ந்துவந்த காலங்களிலும் ஊர்ஊராகச் சுற்றிவரக்கூடிய அறபு வணிகர்கள், சுமைதூக்குபவர்கள், சிறு-பெரு வணிகர்கள் இந்தியத் தீபகற்பத்தைத் தேடிவந்து அதன் கடற்புற ஊர்களில் படிப்படியாகக் குடியேறத் தொடங்கினார்கள். அவர்கள் உள்ளூர் பெண்களையும் மணமுடித்தார்கள். இத்திருமண உறவு மூலமாகத்தான் அர்வி மொழி தோன்றியது. காயல்பட்டினத்துப் பெண்கள் தங்களது கடலோடித் தந்தைகளையும், சகோதரர்களையும், வருகைதரு கணவர்களையும் (இச்சொல்லாட்சி இந்துமாக்கடல் வரலாற்றாசியர்களால், வர்த்தகத்திற்காகப் பயணிக்கும் கணவர்களை — தங்கள் மனைவி, குழந்தைகளைப் பார்ப்பதற்காக ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ இப்பாதை வழியாக வருபவர்களை — குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.) தொடர்புகொள்ள அர்வியைப் பயன்படுத்தினர்.

இந்துமாக்கடலின் வணிகத் தேவையின் அடிப்படையில் பல கலப்பின மொழிகள் உருவாகியுள்ளதாக அறபு மொழி, அர்வி ஆர்வலரான மாணவர் அனீஸ் அஹமது கருதுகிறார். அறபுகள் எங்கெல்லாம் கால்பதித்தார்களோ அங்கெல்லாம் உள்ளூர் மக்களின் மொழியுடன் கலந்து அறபுமலையாளம், ஜாவி போன்ற மொழிகள் உருவாகின. அனீஸ் அஹமதும் அவரது நண்பரும் மென்பொருள் தொழில்நுட்பவியலாளருமான முஹம்மது இப்றாஹீம் அன்சாரியும் இணைந்து அர்வியை இலகுவாக அணுகுவதற்கு ஒரு செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். இச்செயலி காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையம் நடத்தும் நிகழ்வில் தொடக்கம் காணவிருக்கிறது.

அர்வியின் மிகக் குறிப்பிட்டத்தக்க விஷயம் யாதெனில், பரந்துபட்ட அளவில் தமிழ் பேசும் முஸ்லிம் பெண்களால் அர்வியை எழுத, வாசிக்க முடியும். 17ஆம் நூற்றாண்டில், அறிஞர் சாம் ஷிஹாப்தீன் அவர்களால் எழுதப்பட்ட ‘பெண்புத்திமாலை’ புத்தகம்கூட பெண்களை மையப்படுத்தியே எழுதப்பட்டது. மேலும், 19ஆம் நூற்றாண்டில் செய்யது ஆசியா உம்மா போல் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களும், கவிதாயினிகளும் இருந்தார்கள்.


அர்வி மொழிக்கு ஆயிரமாண்டிற்கு மேல் வரலாறு உண்டு என வரலாற்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். அர்வியின் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்புகள் சோழ மண்டலக் கடற்கரையின் முத்துக்குளி துறைமுகமான தூத்துக்குடிமுதல் குமரிவரையுள்ள பகுதிகளில் கி.பி.1525இல் போர்த்துக்கீசியர்களின் படையெடுப்பால், அழிந்து போயிருக்கக்கூடும் என பேராசிரியர் சுபைர் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை கூறுகிறது. மேலும், அக்கட்டுரையில் போர்த்துக்கீசியப் படையெடுப்பிற்குப் பிறகு இறையடியாரான காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் வலி அப்பா, அர்விக்கு என முறைப்படுத்தப்பட்ட எழுத்துமுறையை மீட்டுருவாக்கம் செய்ததை பதிவு செய்திருக்கிறார். பின்னர் லித்தோ கிராஃபிக் அச்சுப் பரவலால் அர்வியில் புத்தகங்கள் ரங்கூனிலிருந்து மும்பைவரை 19ஆம் நூற்றாண்டில் அச்சிடப்படத் தொடங்கின. தெற்காசிய முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டை ஆய்ந்துவரும் ஆய்வறிஞரான டார்ச்டன் ஷாச்சர், ஹாஜி எம்.ஏ.ஷாகுல் ஹமீது & சன்ஸ் 1909களில் அர்வி படைப்புகளை பதிப்பித்ததோடு அதனை விற்பதற்கு புத்தகக் கடையையும் நடத்தி வந்ததைக் கவனப்படுத்துகிறார். எனினும், கடந்த பல பத்தாண்டுகளாக பழைய படைப்புகளை மட்டுமே அவர்கள் மறுபிரசுரம் செய்துவருகிறார்கள்.

மொழிகளின் வரலாற்றில் வாய்மொழி வழியாகவே ஒரு தலைமுறையிடமிருந்து மற்றொரு தலைமுறைக்கு மொழி கடத்தப்பட்டிருக்கிறது. ‘அபத்தி’ எனும் காயல்பட்டின பண்பாட்டு, படைப்பாக்க மையத்தின் இயக்குநரும் காப்பாளருமான ஜாரியா அஜீஸ் கூறுகையில், காயல்பட்டினத்து ஸூஃபி அறிஞர்கள் உரக்க வாசிக்கும் நிகழ்வுகளாலும், மத நிகழ்வுகளில் சொற்பொழிவாற்றுவதன் மூலமாகவும் அர்வியை உயிரோட்டமாக வைத்திருந்தனர் என்பதையும்; பல மதறசாக்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அர்வியை வாசிக்கக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும் அவர் கூறுகையில், “இன்றும்கூட ஐந்து தலைமுறைகளுக்கு முன்னருள்ள அர்வி புத்தகம், குறிப்புகளை காயல்பட்டினக் குடும்பங்களில் இருந்து கண்டறிய முடிகிறது” என்றும் குறிப்பிட்டார். “மேலும் அனீஸ் மற்றும் அன்சாரியின் எழுத்துரு உருவாக்க முயற்சியினால், எங்கள் அபத்தியில் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் — குறிப்பாக மூத்தோருக்கும் — அர்வியில் ஈடுபாடு உண்டாக்க குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பயன்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டமொன்று உள்ளது” என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், இதுவரை அர்வியின் இருப்புக்கு சில தனிப்பட்டவர்களின் முயற்சிகளே காரணம். இன்றும்கூட இஸ்லாமிய நூல்களைக் கற்பித்துவரும் மூத்த ஆசிரியையான சேலத்தைச் சேர்ந்த அம்மாஜி அக்கா குழந்தைகளுக்கு அர்வியை கற்பித்து வருகிறார்.

அர்வியின் எழுத்து அறபி எழுத்தில் இருக்கின்றபடியால், அறபி எழுத்து வடிவில் தமிழை எழுதுவதுதானே அர்வி என எளிதாகத் தெரியலாம். ஆனால், அர்வியின் எழுத்து வடிவமானது அறபி மொழியின் ஓசையில் இல்லாத உயிரெழுத்துகளுக்கும் சில மெய்யெழுத்துகளுக்குமாக கூடுதல் எழுத்துகளைக் கொண்டிருக்கின்றன. அர்விக்கு பெருமைப்படத்தக்க தனித்த இலக்கியப் பாணியுடன் கூடவே ஒத்திசைந்த சொந்த அகராதியும் உண்டு. அர்வி மொழிப் புலவர்கள் தமிழ் இலக்கணத்தி்லும் அறபி இலக்கணத்திலும் ஒட்டாமல் தனக்கே உரிய பாணியில் வேறு நடையில் அர்வி மொழியில் கவிதை வடிப்பார்கள்.

மாநிலத்தின் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ், ஆங்கிலம் வந்ததும் அர்வியின் வீழ்ச்சிக்குக் காரணம். எழுத்தாளர் சாளை பஷீர் சொல்வதுபோல், விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் குறிப்பாக மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டபொழுது அர்வியானது தமிழ்முஸ்லிம்கள் இடையே தனது சிறப்பை இழக்கத் தொடங்கியது.

இப்பகுதியில் அர்விமொழியை இறுதியாகப் பாதுகாத்து வந்த ஆலிம்கள், காவலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பரப்புபவர்கள் உள்ளிட்ட யாவரும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ்முஸ்லிம்களுடன் வாழ்ந்த சமூக-பண்பாட்டுச் சீர்திருத்தவாதிகளுக்கு ஆதரவாக திரும்பிய செயலானது, அர்வி மொழியின் வீழ்ச்சிக்கு கூடுதல் வலுச் சேர்த்தது. சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இச்சீர்திருத்தவாதிகள், அருகி வந்த அர்வி வாசிப்பாளர்களுக்கு கடும் அறைகூவலாக இருந்தனர். அர்வியில் புலமைபெற்றவர்கள் அனைவருமே ஸூஃபிப் பின்புலம் கொண்டவர்களாக இருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியப் புத்தாக்கவாதிகள் அனைவருமே இந்த ஸூஃபி வழிமுறையைக் கண்டித்தனர். இந்த ஸூஃபிக் கோட்பாடுகள் முழுவதும் அர்வி மொழியில்தான் கூடுதலாகத் தொகுக்கப்பட்டிருந்தன. புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை அனைவரும் புரிந்துகொள்ள முடியாது என்பதால் ஸூஃபிக் கொள்கைக்கு தவறான பொருள் விளக்கம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே அர்வி மொழியில் ஆழமான வாசிப்பு இல்லாதவர்கள், அர்வி மொழி நூல்களைப் படிக்க அர்வி மொழி அறிஞர்கள் தடை போட்டார்கள். ஆலிம்களிடமிருந்து வந்த இந்த மொழிப்பாதுகாப்பு நடவடிக்கையினால் அவர்களுக்கு ‘முஸ்லிம் பிராமணர்கள்’ என முஸ்லிம் சுயமரியாதைக்காரர்கள் பெயர் கொடுத்தனர் என்கிறது ஷாச்சரின் ஆய்வுக் கட்டுரை.

நம்மிடமிருந்து தவறிய மொழியைப் பாதுகாப்பது நமக்கும் நம் தலைமுறைக்கும் கடமையாகிறது என்கிறார் காயல்பட்டினம் மாநகரில் சமீபத்தில் தொடங்கப்பட்ட காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையத்தின் நிர்வாகியான காயல் எஸ்.இ.அமானுல்லாஹ். காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையத்தின் வழியாக அர்வி நூல்களையும் கட்டுரைகளையும் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். நாட்டின் பன்மை அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு ஒற்றை அடையாளமாக மாற்றப்படுவதுகுறித்து எழுத்தாளர் சாளை பஷீர் கவலை தெரிவிக்கிறார். இதன் மூலம் பல்வேறுபட்ட மொழிகள், பண்பாடுகள், நம்பிக்கைள் அழிக்கப்படும் என்பதையே நளினமாகச் சொல்கிறார். நமது அடையாளங்களை பற்றிப் பிடிக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும்விட தற்போது கூடுதலாக இருக்கிறது என உணர்வதாகக் கூறும் அவர், இந்தியாவின் பெருமையானது பன்முகத்தன்மையிலும் அதன் வேறுபாட்டிலும்தான் இருக்கிறது என்கிறார்.

(தமிழில்: எம்.சாகுல் ஹமீது)

(நன்றி: The Caravan, July 2023)






Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..