மனித வாழ்க்கையின் நோக்கங்கள் எந்தளவுக்குத் தடம் புரண்டிருக்கிறதென்று பாருங்கள்…
வீடென்பது வாழ்வதற்கான இடம். அதன் நோக்கம் நீங்களும் உங்களது குடும்பமும் நிம்மதியாகத் தங்குவதும் உங்களது privacyயை பாதுகாத்துக் கொள்வதுமாகும் . ஆனால் மனிதன் தனது விருந்தினர்களிடம் அதனைக் காட்டி, அவர்களின் வாயால் “wow, superb” என்ற பாராட்டைப் பெற்றுக் கொள்வதையும், வருவோர் போவோர் அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்பட்டுப் போவதையும் வீடு கட்டுவதற்கான நோக்கங்களாக மாற்றிக் கொண்டான்.
நீங்கள் ஆடையணிவது உங்களது மானத்தை மறைத்துக் கொள்வதற்கும், நீங்கள் நாகரிகமானவராக அடுத்தவர்களோடு பழகுவதற்கும், உங்களது கலாச்சாரப் பண்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமாகும். ஆனால், தனது ஆடையின் விலையையும் அதனது brandஐயும் வைத்து தனது கண்ணியத்தை அளவிடுவதற்காகவும், தனது செல்வத்தைப் பறைசாற்றுவதற்காகவுமே மனிதன் இன்று ஆடையணிகிறான்.
நீங்கள் ஒரு வாகனத்தை வாங்குவது உங்களது பயணங்களை இலகுபடுத்துவதற்காக வேண்டியே. ஆனால் தனது செல்வத்தை வைத்துப் பெருமையடிப்பதற்கான (showing off) மிக முக்கியமான ஊடகமாக மனிதன் வாகனத்தை மாற்றிக் கொண்டான்.
நீங்கள் கற்பது உங்களது அறிவை வளர்ப்பதற்கும், உலகைப் புரிந்து கொள்வதற்கும், அதற்கூடாக முடியுமானால் உங்களது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்வதற்குமாகும். ஆனால் இன்றைய மனிதன் பட்டங்களை வைத்துப் பெருமையடிப்பதற்கும், பதவிகளின் பின்னால் அலைந்து திரிவதற்குமுரிய ஒன்றாக அதனையும் மாற்றிக் கொண்டான்.
அனைத்துக்கும் அப்பால், நீங்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதும், தான தர்மங்களைச் செய்வதும், நற்காரியங்களில் ஈடுபடுவதும் இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்காக என்பதே அடிப்படை நோக்கம். ஆனால் இன்று அவற்றைக் கூட, ‘தக்வாதாரி’ அல்லது ‘பரோபகாரி’ அல்லது ‘சமூக சேவகர்’ என்ற பெயர்களையும் பட்டங்களையும் ஏனைய மனிதர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காகவே மனிதன் செய்கிறான்.
வாழ்வின் நோக்கங்கள் யாவும் மாறிவிட்டன. எனவே வாழ்க்கையும் தடம்புரண்டு போய்க் கிடக்கிறது.
அல்குர்ஆனின் இந்தக் கேள்வி எந்தக் காலத்தையும் விட இந்தக் காலத்துக்குத் தான் மிகவுமே பொருந்திப் போகிறது போலும்!
“நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்?!” (81:26)
 |