தூஃபான் அல்-அக்ஸா போரில் பங்கேற்கும் முஜாஹிதீன்கள் குறித்து காஸாவைச் சேர்ந்த அறிஞர் ஷேக் மஹ்மூத் அல்ஹஸனாத் அவர்கள் சில சான்றுகளோடு ஆற்றிய உரையை கேட்க நேர்ந்தது.
அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, காஸாவில் ஒரு பெரிய பட்டமளிப்பு நிகழ்ச்சியை பற்றி அவர் பேசுகிறார். அன்று 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் (சிறார்கள் அல்ல) குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த பிறகு நடந்த தேர்வு நிகழ்ச்சியாகும் அது. காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தொடங்கி மக்ரிப் வேளையில் முடிவடைந்த ஒற்றை அமர்வு நிகழ்ச்சி. அன்று ஹாஃபிழ் (குர்ஆனை முழுமையாக மனனம் செய்து) சான்றிதழைப் பெற்றவர்கள் தாம் அக்டோபர் 7-ம் தேதி ஆக்கிரமிப்பு எதிரிகளை நடுங்கச் செய்தவர்களும், உயிர் தியாகிகளும் ஆவர்.
ஈமானிய தயாரிப்பை குறித்து தான் அவர் பேசினார். இது அண்மையில் தொடங்கியது அல்ல. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக காஸா இப்படித்தான் தயாராகி வருகிறது. நபி(ஸல்) அவர்களும், தோழர்களும் வாழ்ந்த காலத்தில் வலிமைமிக்க எதிரிகளை தோற்கடிக்க பெற்றிருந்த பயிற்சிகளை பெறுவதே வெற்றிக்கான ஒரே வழி என்பதை உணர்ந்ததில் இருந்து தொடங்கிய தயாரிப்புகள் வெறும் ஆன்மீகம் மட்டுமல்ல. அவர் சுமார் இருபது வயதுடைய காஸாவில் உள்ள ஒரு இளைஞரை குறித்து பேசுகிறார். அந்த இளைஞர் பார்ப்பதற்கு ஆரோக்கியமானவராக தெரிந்த போதிலும் வயதான நபரைப் போல முதுகு சற்று வளைந்து நடந்துள்ளார். ஏன் அப்படி நடக்கிறீர்கள்?என்று கேட்டபோது, பல வருடங்களாக சுரங்கப்பாதையில் தொடர்ந்து வேலை செய்து வருவதால் தான் இப்படி நடப்பதாக அவர் சிரித்துக் கொண்டே கூறினாராம். என்ன ஒரு அர்ப்பணிப்பு!
உலகம் முழுவதும் உள்ள இரக்க உணர்வும் தூய எண்ணமும் கொண்ட மக்கள் காஸாவுக்காக அழும் போது ஒரு துளி கூட நம்பிக்கையை இழக்காமல், கண்ணீர் வடிக்காமல், பதட்டமோ, தடுமாற்றமோ இன்றி போராட்டத்தில் நிலைகுலையாமல் நின்று வெற்றி குறித்த நம்பிக்கையை அவர்களால் வெளிப்படுத்த முடிவதெல்லாம் சும்மாவா என்ன?
இறைபக்தியும், உள்ளார்ந்த நேர்மையும் நிறைந்த இந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து தான் ஷஹீதுகளின் பூமியான காஸா ஒட்டுமொத்தமாக வளர்ந்து வருகிறது என்று சான்றளிக்கிறார் எகிப்தின் 'அல்கத்' சேனலின் செய்தியாளர் அஹ்மது அல்பதீரி. அக்டோபர் 25 அன்று போர்க்கால காஸா பற்றிய தனது செய்தி அறிக்கையில், காஸாவில் உள்ள மக்களின் மிகவும் விசித்திரமான வாழ்க்கையை குறித்து அவர் விவரிக்கிறார். மனிதர்களால் உருவாக்கப்படும் போர் போன்ற துயரங்களின் போதும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போதும் ஏற்படும் இயல்பான அராஜகங்களுக்கு மாறாக ஒழுக்கமான வாழ்க்கையை போர் விமானங்களின் தொடர்ச்சியாக கர்ஜிக்கும் வானத்தின் கீழ் வாழும் காஸா மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். திருட்டு இல்லை, வழிப்பறி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் போர் விமானங்கள் புறப்பட்டு சென்ற பிறகு திரும்பும் போது வீடு அழிக்கப்படாமல் இருந்தால் அங்கு உள்ள எந்த பொருளையும் யாரும் எடுத்து சென்றிருக்க மாட்டார்கள். காவல்துறைக்கோ அல்லது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இதர அமைப்புகளுக்கோ அங்கு வேலை இல்லை.
பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் கட்டுப்பாட்டை இழக்கும் மனிதர்களின் இயல்பான பண்பு காஸா மக்களுக்கு கிடையாது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொள்ளை மற்றும் திருட்டு பற்றி வெளியான செய்திகளை நான் நினைவுகூர்கிறேன். 'நாகரீக' அமெரிக்காவில் ஒரு மணி நேரம் மின்சாரம் போனபோது, ஷாப்பிங் மால்களில் டி.வி., குளிர்சாதனப் பெட்டிகள் முதலானவை காணாமல் போயின. இப்படி பல சம்பவங்களை சொல்ல முடியும்.
காஸாவில் தீய நடத்தைகள் கிடையாது. மேலும் அங்கு சில நற்பண்புகளும் உள்ளன. யாரும் எதனையும் சுயநலமாக பயன்படுத்துவதில்லை. வீடுகளை இழந்தவர்கள் இரவில் தூங்கும் போது எங்கோ கிடைக்கும் போர்வைகளை கூட பகிர்ந்து கொள்கிறார்கள். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு கீழே மூன்று மணி நேரம் வீதம் மாறி, மாறி உறங்குபவர்கள் அதற்கு முன்பு பரஸ்பரம் அறிமுகம் இல்லாதவர்கள். அவர்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அபூர்வமாக திறந்திருக்கும் பேக்கரிகளின் முன்னால் ஒரு துண்டு ரொட்டி வாங்க சில மணி நேரங்கள் நெரிசல் இல்லாமல் அவசரப்படாமல் வரிசையில் நிற்பார்கள். இதற்கிடையில் ஒரு பெண் கடைக்கு வந்தால் அவரை வரிசையின் முன் செல்லுமாறு கூறுவார்கள். உணவு, தண்ணீர் மட்டுமின்றி கழிப்பறைகள், பெண்கள், குழந்தைகளுக்கான சானிட்டரி நாப்கின்களையும் பகிர்ந்து ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும் அற்புதமான மனிதர்கள் அவர்கள். அல்லாஹ் யாரை நேசிக்கிறானோ அவர்களை கடுமையாக சோதித்து சுவர்க்கத்தை வழங்குவான் அல்லவா! இவர்கள் எப்படி தோல்வியை தழுவ முடியும்?
وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
" தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்."
(அல்குர்ஆன் : 59:9)
Courtesy: DrCK Abdulla
 |