வெள்ளத்தோடு எதிர்நீச்சல் போட்டு மனிதாபிமான நெடுங்கரங்கள், மக்களின் துயர் துடைக்க நீண்டுள்ளன.
இரும்பையும் நெருப்பையும் காற்றையும் விட வலிமையானது கொடுக்கும் கரங்கள் என்ற நபிகள் நாயகம் ((ஸல்) அவர்களின் வார்த்தைகளை நெஞ்சை உருக்கும் அந்த தெய்வீகப்பணிகள் சத்தியமாக்குகின்றன. சென்னை செல்லப் புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை கடந்து செல்லமுடியாமல் நின்று விட்ட்து. ரயிலில் பயணம் செய்த சுமார் 800 பயணிகள் எங்கும் செல்லமுடியாமல் தவித்தனர். அவர்களில் 300 பேர் எப்படியோ தப்பித்து வெளியேறி விட சுமர் 500 பேர் மூன்று நாட்களாக ரயிலிலேயே தங்கியுள்ளனர். ரயில் படிக்கட்டுகளை தொட்டுக் கொண்டு ஓடிய வெள்ளம் எங்கே தண்டவளத்தை அரித்து விடுமோ என்ற அச்சத்தில் உறைந்திருந்த மக்களுக்கு அருகிலிருந்த மேலப்புதுக்குடி மக்கள் கோயில் உண்டியலில் இருந்த காசை எடுத்து உணவு சமைத்து வெள்ளத்தில் நீந்திக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.
பெரும் பாதிப்புக்குள்ளான திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் இருந்த செய்துங்கநல்லூரில் பள்ளிவாசலை திறந்து விட்டு இருநூறு பேரை காப்பாற்றி தங்க வைத்து உணவளித்துள்ளனர். இந்த முஸ்லிம்களின் உதவி இல்லை என்றால் நான் இறந்தே போயிருப்போம் என ஒரு இந்து நண்பர் பதிவிட்டிருந்தார். அங்குள்ள கிருத்துவ பள்ளிக் கூடத்திலும் மக்கள் தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய இட்த்தில் கட்டப்படுகிற பெரும்பாலான பள்ளிவாசல்களில் மாடிகள் இருக்கின்றன. அவை மக்கள் தங்கிக் கொள்ளவும் டாய்லெட்களை பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன. சர்ச்சுகள் பெரும்பாலும் தரைத்தளங்களை மட்டுமெ கொண்டிருப்பதால் அவைவும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. கிருத்துவ பள்ளிக் கூடங்கள் மக்களின் ஒதுங்குமிடங்களாக மாறியிருக்கின்றன என்றார் ஒரு சகோதரர்.
திருப்பூரைச் சார்ந்த குர்பானி அமைப்பினர் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு சமைத்துக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் சாப்பாடு தயாரித்துக் கொண்டே இருக்கிறோம். நீங்கள் அதை கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் அவர்கள். நெல்லை கோவை உட்பட பல பகுதிகளிலிருந்தும் மக்கள் தங்களது ஆதரவுக் கரங்களை நீட்டியிருக்கிறார்கள்.
அவற்றை விநியோகிப்பதற்காக நான்கு படகுகளையும் துடுப்புக்களையும் இரவலாக வாங்கி வைத்திருக்கிறோம். பல இடங்களுக்கு நீந்திச் சென்று தான் உதவிப் பொருட்களை வழங்குகிறோம் என்கிறார் ஜாமிய பள்ளிவாசலின் ஆம்புலன்ஸில் நிவாரணப்பணிகளை மேற்கொள்கிற மெளலவி அப்துர் ரஹ்மான் மஸ்லஹி.
தூத்துக்குடி ஓரளவு சீராகி வருகிறது ஆத்தூர் ஏரல் பகுதிகள் தான் நெருங்க முடியாத அளவில் வெள்ளக்காடாக இருக்கிறது. அடுத்து அங்கு செல்ல திட்டமிட்டிருக்கிறோம் என்றார் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்கிற தூத்துக்குடி காழி முஜீப் மஸ்லஹீ.
இறங்கி பணியாற்ற வேண்டும் என்று பொதுவாக சொல்வதுண்டு. உண்மையில் வெள்ளத்தில் இறங்கிப் பணியாற்றிய அமைச்சர்கள்,அதிகாரிகள், அலுவலர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், , ஏராளமான பொதுச் சேவர்கள் அனைவரும் தமிழக மக்களின் நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.
Thank God என்று சொல்வதுண்டு. God thanking you guys! -Abdul Azeez Baqavi


|