இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனி பல நாடுகளை எதிர்ப்பே இல்லாமல் கைப்பற்றி, அங்கிருந்த யூத மக்களை அழித்தொழிப்பதை ஆரம்பித்த நேரத்தில் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் ஒரு புகைப்படம் எனக்கு என்றும் மறக்க முடியாதது. அந்தப் புகைப்படம் இப்போதைய உக்ரைன் பகுதியில் எடுக்கப்பட்டது என்று நினைவு.

அந்தப் புகைப்படத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், பொது இடத்தில் உள்ளாடைகளோடு அலறியபடி தெருவில் ஓடி வருவதும், அவரை நிறைய ஆண்கள் சிரித்தபடி துரத்திக்கொண்டு வருவதும், இப்படித் துரத்திச் செல்பவர்களில் கையில் ஒரு கழியோடு, பள்ளி செல்லும் வயதிலிருக்கும் ஒரு சிறுவனும் இருப்பது மிகத் தெளிவாகப் பதிவாகியிருக்கும். ஆடைகள் அவிழ்க்கப்பட்டுத் துரத்தப்பட்டவரும், அந்தப் பெண்மணியைத் துரத்தியவர்களும் அது வரை அமைதியாய் ஒரே ஊரில் வாழ்ந்தவர்கள்தான் என்பதுதான் என்னால் அப்புகைப்படத்தை என்றும் மறக்க முடியாததற்குக் காரணம்.
உணர்ச்சியேற்றப்பட்ட கும்பல் மனநிலையில் சாதாரணமான மனிதர்களும் கூட இப்படி சக மனிதர்கள் மீதான வன்முறையை எந்த அளவுக்கும் கொஞ்சமும் குற்றவுணர்ச்சியின்றிச் செய்யக்கூடிய மிருகங்களாவார்கள் என்பதற்கு அந்தப் புகைப்படச் சம்பவம் போல சரித்திரத்தில் ஏகப்பட்ட உதாரணங்களுண்டு.
ஏன், சமீபத்தில் பில்கிஸ் பானு வழக்கில் கூட, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது மூன்று வயதுப் பெண் குழந்தையை சுவற்றிலடித்துக் கொன்ற அனைவருமே அவருக்கு நன்கு அறிமுகமான உள்ளூர்க்காரர்கள்தானே. அதிலே அவரது ஊரில் அவருக்குச் சிறு வயதிலிருந்தே சிகிச்சையளித்த மருத்துவரும் கூட உண்டு என்ற செய்தியைப் படித்தோமே...

இப்படியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இங்கே படித்தவர்களும், ஓரளவு அரசியல் புரிதல் உள்ளவர்களும் அதிகம். மத நம்பிக்கைகள் இருந்தாலும் மத வெறி குறைவு என்றெல்லாம் நான் இத்தனை காலம் எனக்குள்ளாக நம்பிக் கொண்டிருந்தேன்.
இன்று என் நம்பிக்கை கொஞ்சமல்ல, நிறையவே ஆட்டம் கண்டிருக்கிறது.
இங்கே ஃபேஸ்புக்கில், எழுதத் தெரிந்தவர்களில் நமது அரசியல் சார்பு நிலைகளோடு ஒத்துப் போகும் நபர்களை மட்டுமே பெரும்பாலும் நம் நட்பு வட்டத்தில் வைத்திருப்பதால் மற்றவர்களைப் பற்றிப் பெரிதாக நாம் அலட்டிக் கொள்வதில்லை. இரண்டாவது அவர்கள் நமக்கு நேரடி வாழ்வில் அறிமுகம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் வாட்ஸப் அப்படி அல்ல. அதில் உள்ள அனைவரது தொடர்பு எண்களும் நமக்குத் தெரியும். 90% நம்மோடு ஒரே ஊரில் வாழும் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள், அலுவலக, தொழில் அடிப்படையிலான நட்பில் உள்ளவர்களாகவே இருப்பார்கள். ஒரு சிலர் தவிர மீத அனைவரும் நமக்கு நேரடியாக அறிமுகமானவர்கள். நம் தினசரி வாழ்வில் ஓர் அங்கமானவர்கள். ரத்தமும், சதையுமாக நம்முடனே புழங்குபவர்கள்.
எனக்கு வாட்ஸப்பில் ஸ்டோரி வைக்கும் பழக்கமில்லை, யாராவது சொன்னாலொழிய மற்றவர்களுடையதைப் பார்க்கும் பழக்கமும் இல்லைதான். இன்று எதேச்சையாக என் மொபைலில் காட்டும் அத்தனை பேருடைய ஸ்டோரிஸ்களையும் பார்த்தேன்.
உண்மையில் அதிர்ந்துதான் போய்விட்டேன்.
உறவினர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள், பழைய, இந்நாளைய தோழிகள், ஒரே அலுவலகத்தில் பணி புரிந்த / புரிபவர்கள், நம் மேல் மதிப்பு வைத்திருப்பவர்கள், நாம் நம் மனதுக்குள் மரியாதையான இடத்தில் வைத்திருப்பவர்கள், நண்பர்களின் அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகள், வாடிக்கையாளர்கள், வங்கிப் பணியாளர்கள் என்று நான் நினைத்தே பார்த்திராத எத்தனையோ பேர், இன்று வரை தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை வெளிக்காட்டியிராத எத்தனையோ பேர், ஜெய் ஸ்ரீராம் கோஷத்தோடு ராமர் கோவில் படம், மோடி படம், வீடியோக்கள் என்று அவர்களது இன்றைய ஸ்டேடஸில் கொஞ்சமும் சமூகச் சுரணையின்றி வைத்திருக்கிறார்கள்.
சிலர் வெறும் ராமர் கோவில், சிலை, அதன் முகத்தைப் பகிர்வதோடு நிறுத்தியிருக்கிறார்கள், சிலர் மாற்று மதத்தினரைச் சீண்டும் வாசகங்களையும் சேர்த்தே பகிர்ந்திருக்கிறார்கள். சிலர் இனிமேல் இங்கு ஹிந்து ராஷ்ட்ரம்தான் என்றும் அதன் அதிபர் மோடிதானென்றும், மற்றவர்களுக்கு இங்கே இடமில்லையென்றும் தங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
முன்பு ஒரே வங்கியில் என்னுடன் வேலை பார்த்த தம்பி ஒருவன், இன்றைக்கு எதிர்ப்பு பதிவு போட்டவர்களில் அவன் கண்ணுக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் "வயிறெரியுதா, செத்துருடா தா@₹&" என்கிற ஒரே கமெண்ட்டை காப்பி, பேஸ்ட் செய்திருக்கிறான். 'அவனுண்டு, அவன் வேலை உண்டு என்று அமைதியாக இருப்பவன்' என்பதுதான் நான் அவனைப் பற்றி இத்தனை நாள் வைத்திருந்த மதிப்பீடு. இன்று அந்த மதிப்பீட்டைத் தூள், தூளாக்கியிருக்கிறான் அவன்.

இதை வெறும் கடவுள் நம்பிக்கை அல்லது பாஜக, மோடி அபிமானம் மட்டும்தான் என்று என்னால் சுருக்கிப் பார்த்துக்கொள்ள முடியவில்லை.
நாளையே அதிகாரத் தரப்பிலிருந்து முழுவீச்சிலான இனச் சுத்திகரிப்புக்கு அறைகூவல் விடுத்தால், அதற்குச் சரியான விதத்தில் தூண்டி விடப்பட்டால், தூபம் போடப்பட்டால், அதில் இவர்களில் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் எத்தனை பேர் பங்கு பெறுவார்கள் என்று என்னால் யோசிக்காமலிருக்க முடியவில்லை.
நானாவது இவர்கள் சார்ந்த பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவன். என்னுடனே வாழும் இந்தியச் சிறுபான்மைச் சமூக மக்கள், நண்பர்கள் இவர்களது இன்றைய வாட்ஸப் ஸ்டேடஸ்களை எப்படிப் பார்த்திருப்பார்கள், நாளை தினசரி வாழ்க்கையில் இவர்களை எப்படி, என்ன மனநிலையோடு எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி என்னை அரித்துத் தின்கிறது.
இவர்களோடுதானா, மாற்று மதத்தினர் மேல் மனதுக்குள் இத்தனை வன்மங்களைத் தூக்கிச் சுமந்து திரிபவர்களுடன்தானா, சகோதரத்துவம் என்பது மனதில் துளிக்கூட இல்லாதவர்களுடன்தானா, இவ்வளவு போலியாவர்களுடன்தானா, தங்களது மதத்தின் மேல் இத்தனை வெறி கொண்டவர்களுடன்தானா, இவர்களுக்கு மத்தியில்தானா நான் இத்தனை காலம் வாழ்ந்தேன், இனி மிச்சமிருக்கும் காலத்தையும் இவர்களோடுதானா வாழப்போகிறேன் என்று நினைக்கும்போது உண்மையிலேயே மனதின் அடியாழத்திலிருந்து கடுமையானதொரு அச்சம் எழுகிறது.
என் இத்தனை வருட வாழ்க்கையில் இதுவரை என்னுடன் பயணித்த பலர் மீது ஒரே சமயத்தில் என் நம்பிக்கையை இழந்த தினம் இன்று.
Elangovan muthaiah
|