சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி*
எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்திய முஸ்லிம் சமூகம் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நீண்ட கால தீர்வே அவசியம் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் இந்திய முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வகுப்புவாதம் மற்றும் மதவெறியை ஊக்குவிப்பவர்கள் வெட்கமின்றி குறுகிய அரசியல் மற்றும் கருத்தியல் நலன்களுக்காக நமது ஜனநாயக நிறுவனங்களை சிதைத்து வருகின்றனர். முஸ்லிம்கள் மத்தியில் கணிசமான அளவில் கோபமும், கவலையும் அதிகரித்துள்ளது. எனினும், நாம் ஏமாற்றமோ, அச்சமோ அடைய வேண்டாம். உறுதியையும், துணிச்சலையும் வெளிப்படுத்தி, இந்த சவால்களை முறியடிக்க தொடர்ந்து உழைக்க வேண்டியது காலத்தின் தேவை. இந்திய முஸ்லிம் சமூகம் சவால்களை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. 1857 கலகம் முதல் இந்திய தேசத்திற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை, நாட்டின் பிரிவினை மற்றும் பல தூண்டி விடப்பட்ட நிகழ்வுகள் நமது வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கின்றன. மேலும் இறைவனின் அருளால், இந்த சவால்களை நாம் எதிர்கொண்டு அவற்றை வென்றுள்ளோம்.
"நம்முடைய சக்தியை நாம் அறிந்திருக்க வேண்டும்; அது நமது மார்க்கத்தில் வேரூன்றி உள்ளது; அதன் உன்னதமான மற்றும் அடிப்படையான போதனைகள் மற்றும் கொள்கைகளில் வேரூன்றியுள்ளது. அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக நாம் ஒரு அரண் போல செயல்படுவோம். எனவே, நாம் குறிவைக்கப்பட்டு சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் உட்படுத்தப்படுவோம். நமது சவால்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது நீண்டகால தீர்வு மட்டுமே சாத்தியம். நம்முடைய நெருங்கிய செல்வாக்கு வட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்திற்கு ஆறு முக்கிய திட்டங்களை நான் முன்மொழிகிறேன்:
1- சக நாட்டு மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய அவர்களின் தவறான எண்ணங்களை நீக்கி, உண்மை நிலையை எடுத்துரையுங்கள்.
2) முஸ்லிம் சமூகத்தின் நிலைமையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். கல்வி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடைய பலவீனங்களை நீக்குங்கள். முக்கியமாக, அவர்களின் ஒழுக்கப் பண்புகளையும், மார்க்கத்தை கடைப்பிடிப்பதையும் மேம்படுத்துங்கள்.
3) கைரே உம்மத் (சிறந்த சமூகம்) என்பதை நடைமுறைப்படுத்துங்கள்.
4) மதம், ஜாதி, மற்றும் சமூகத்திற்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் நீதிக்காக எழுந்து நிற்க வேண்டும். அநீதியை அமைதியான முறையில் எதிர்ப்போம்.
5) சமூக ஊடகங்களின் சக்தியை ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துங்கள். உங்கள் அவநம்பிக்கை, ஏமாற்றத்தை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் தளமாக இதைப் பயன்படுத்த வேண்டாம். அவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளின் பக்கம் நாட்டை திருப்ப வேண்டும், இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உம்மத்திற்கு தைரியத்தை வழங்கவும் பயன்படுத்தவும்.
6) வரவிருக்கும் தேர்தல்கள் நாட்டிற்கு முக்கியமானவை. அமைதி மற்றும் நீதியை விரும்பும் மக்களை நாம் ஆதரிக்க வேண்டும், இந்தத் தேர்தலில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதிசெய்து, சரியான திசையில் நமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். இந்த சவாலான காலங்களை ஒரு புதிய சகாப்தத்தின் விடியலாக மாற்றுவோம். கோபத்தையும் விரக்தியையும் ஆக்கபூர்வமான ஆற்றலாக மாற்றுவோம், இது நமது தற்போதைய நிலையை மாற்ற உதவும்."
|