பிறர் உங்களுக்கு அநீதி செய்தாலும் நீங்கள் அவர்களுக்கு அநீதி செய்யாமல் பொறுமை செய்யுங்கள். பிறரால் ஏற்படுகின்ற துன்பங்களையும், அநீதிகளையும், அட்டூழியங்களையும் சகித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்தல் இறைஞானப் பதிவிகளில் உயர் பதவியை பெற்றுத் தரும். உலகில் தோன்றி மறைந்த இறைஞான மகான்களில் அதிகமானோர் தம்மை இழிவு படுத்திக் கொண்டதினாலேயே குத்புகளாயினர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஓர் இறைஞானியிடம் நீங்கள் எப்போதாவது மகிழ்ச்சியடைந்ததுண்டா? என்று கேட்கப்பட்ட போது அவர் கொடுத்த பதிலை இங்கு கவனத்திற் கொள்ளுங்கள். (அவர் சொல்கிறார்)
நான் “ஹஜ்” செய்வதற்காக ஜித்தாவுக்கு ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அக் கப்பலில் என் போல் பலர் இருந்தார்கள். நடு நிசியில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு கப்பலை ஆட்டி அசைத்தது. பயணிகளிற் சிலர் அழுதார்கள். இன்னும் சிலர் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் கையால் தலையில் அடித்துக் கொண்டு சத்தமிட்டார்கள்.
நானோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இறைவனிடம் கையேந்திக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம் போன்ற திரு நாமங்களின் “ஜலாலிய்யத்” எனும் வேகத்தைக் கண்டு நான் பயந்து ஒடுங்கி அவனின் தொடர்பில் தலை குனிந்து இருந்தேன்.
இந்நிலையில் யாரோ ஒருவர் வந்து என் தலை முடியை இறுகப் பிடித்து இழுத்தவனாக அடே மடையா! மக்களெல்லோரும் அழுது சலித்துக் கொண்டிருக்கும் நிலையில் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்டவனாக என் தலை முடியைப் பிடித்து என்னை இழுத்தெறிந்தான். கழுத்தையும் பிடித்து நசுக்கினான்.
இது அல்லாஹ்வின் செயலேயன்றி வேறெவரின் செயலுமல்ல என்பதையுணர்ந்து, اَلْفَنَاءُ فِيْ أَفْعَالِ اللهِ அல்லாஹ்வின் செயல்களில் நான் “பனா” ஆகியிருந்தேன். வந்தவன் என் நிலைமை தெரியாமல் நடந்து கொண்டான்.
எனது வாழ்வில் எனக்கு இப்படியொரு நிகழ்வு நடந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் கடலை கொந்தளிக்க வைத்தவனும் அவன்தான், என் தலைமுடியைப் பிடித்து இழுத்தவனும் அவன்தான் என்பதை நான் உணர்ந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தேன். இது என் வாழ்வில் நான் பெற்ற மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றார்.
ஏனெனில் எச் செயலாயினும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் என்று அறிந்தவனே அல்லாஹ்வை அறிந்தவனாவான். எச் செயலாயினும் அது அல்லாஹ்வின் செயல் என்று அறிந்தவனுமாவான்.
اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ செயல்கள் எல்லாமே அல்லாஹ்வின் செயலேயன்றி வேறெவனின் செயலல்ல. படைப்புக்கு சுயமான செயல் உண்டு என்று நம்புதல் “ஈமான்” எனும் நம்பிக்கையில் ஏற்படும் பலவீனமாகும். இது அறியாமை.
எந்த ஒரு படைப்புக்கும் சுயமான செயலில்லை. செயல் அனைத்திற்கும் சொந்தக் காரன் அல்லாஹ் மட்டுமேயாவான். கத்தி வெட்டும். ஆயினும் சுமயாக வெட்டுவதில்லை. அது சுயமாக வெட்டுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கத்தியால் அறுக்க முயற்சித்த போது கத்தி அறுக்கவில்லை. கத்திக்கு சுயமாக அறுக்கும் சக்தி இருந்திருந்தால் அது நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கழுத்தை அறுத்திருக்க வேண்டும். அது அறுக்கவில்லை. இதற்கான காரணம் கத்திக்கு சுயமாக அறுக்கும் சக்தி இல்லை என்பதினாலாகும். கத்தி அறுப்பதாயினும் அதில் அறுப்பவன் என்ற தன்மையில் அவன் - அல்லாஹ் வெளியாக வேண்டும். வெளியானால் மட்டுமே அது அறுக்கும்.
நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நும்றூத் என்பவன் நெருப்புக் குழியில் எறிந்த போது நெருப்பு அவர்களை எரிக்கவில்லை. இதற்கான காரணம் நெருப்புக்கு சுயமாக எரிக்கும் தன்மை இல்லை என்பதினாலாகும். அல்லாஹ் அந்த நெருப்புக்கு
يَا نَارُ كُوْنِيْ بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيْمَ
நெருப்பே! நீ இப்றாஹீம் அவர்களை எரித்து விடாமலும், கடுங்குளிராகி தாக்கிவிடாமலும் நடுத்தரமாக - அவருக்கு இதமாக இருந்து கொள் என்று கட்டளையிட்டான். நெருப்பு சுயமாக சுடக் கூடியதாக இருந்தால் அது அவர்களை எரித்திருக்கும்.
மேற்கண்ட விளக்கத்தின் மூலம் செயல்கள் எல்லாம் அல்லாஹ்வுக்குரியதாகும் என்ற உண்மை தெளிவாகிறது.
கடற் கொந்தளித்த போது கப்பலில் இருந்த மகான் “செயல்களுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான்” என்ற நம்பிக்கையில் ஆணித்தரமாக இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
கப்பலில் சென்ற மகான் அவர்கள் தனது வாழ்வில் தனது முடியை இழுத்து தன்னை அவமானப்படுத்திய நிகழ்வு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததென்று கூறியுள்ளார். செயல்கள் எல்லாம் அல்லாஹ்விற்குரியவை என்று நம்பினவருக்கும், படைப்புகளுக்கும் செயல்கள் உள்ளன என்று நம்பினவனுக்கும் வித்தியாசம் உண்டு. முந்தினவன் “முவஹ்ஹித்” தத்துவவாதியாவான். பிந்தினவன் “முஷ்ரிக்” ஆவான்.
மகான் அவர்கள் தனக்கு நடந்த மகிழ்ச்சியான இன்னுமொரு நிகழ்வையும் கூறுகிறார்கள்.
நான் ஒரு பயணத்தில் இருந்தேன். வீடு வந்து சேர முடியாமற் போய்விட்டது. வழியில் எங்கு தங்குவதென்று யோசித்துக் கொண்டிருந்தேன். எங்காவது ஒரு பள்ளிவாயலில் தங்கலாம் என்ற எண்ணத்தோடு கால் நடையாக வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒரு பள்ளிவாயலைக் கண்டு அங்கு தங்கலாம் என்று நகர்ந்தேன். பள்ளிவாயலின் கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டினேன். முஅத்தின் கதவைத் திறந்தார். உள்ளே சென்று தொழுதுவிட்டு ஒரு மூலையில் இருந்தேன். முஅத்தின் வந்து இங்கு இரவில் தங்குவதற்கு எவருக்கும் அனுமதியில்லை என்றார். நான் வெளியூர்வாசி. இவ் ஊரில் எனக்கு அறிமுகமான எவருமில்லை. நீங்களும் இடம் தரவில்லையானால் நான் பாதையில்தான் படுத்துறங்க வேண்டும் என்றேன். என் கதை அவரின் காதில் நுழையவில்லை. என்னை இழுத்து வெளியே தள்ளிவிட்டார். சோதனை மேல் சோதனையாக பெரு மழையுடன் காற்றும் வீசத் தொடங்கியது. நான் அல்லாஹ்வின் செயலை பொருந்திக் கொண்டவனாக வெள்ளத்தைக் கட்டிலாக்கிக் கொண்டு “ஸுப்ஹ்” உடைய “அதான்” பாங்குவரை வெளியிலேயே இருந்தேன்.
இந்த நிகழ்வும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான நிகழ்வாகும்.
இன்னுமொரு சமயம் நான் “பஸ்” பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தேன். அதில் இருக்க இடமின்றி நின்று கொண்டிருந்த ஓர் இளைஞன் என்னை எழும்புமாறு கோபத்துடன் சொன்னான். அவனிடம் நான் வயதானவன். என்னால் நிற்க முடியாது என்றேன். அவன் கோபப் பட்டவனாக என்னை இழுத்தெறிந்து விட்டு என் இருக்கையில் இருந்து கொண்டான். நான் கால் ஒடிந்த நிலையில் தரையில் கிடந்தேன் என்றார்.
மேற்கண்ட மூன்று நிகழ்வுகளின் போதும் நான் அனுபவித்த கஷ்டங்களும், துயரங்களும் அதிகம். இதேபோல் எனக்கு பிறரால் ஏற்பட்ட அவமானங்களும், சோதனைகளும் அதிகம் அதிகம். ஆயினும் நான் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், மற்றும் அவமானங்களை அவை அல்லாஹ்வின் செயல்களென்று பொருந்திக் கொண்டேன். எனது பொறுமை காரணமாகவே நான் இப்போது அல்லாஹ்வின் விருப்பத்தைப் பெற்று நான் ஆன்மிகப் படித்தரங்களில் பல படிகளைத் தாண்டியுள்ளேன்.
இவ்வாறு கூறிய மகான்தான் இறைவனில் “பனா” நிலையடைந்து பேரின்பத்தில் லயித்து காணும் பொருளையெல்லாம் அல்லாஹ்வுக்கு வேறாகாத, அவன் தானானவையாகக் கண்டு மகிழ்ந்த அபூ யஸீத் அல் பிஸ்தாமீ றஹிமஹுல்லாஹ் அவர்களாவர். றழியல்லாஹு அன்ஹு.
கல்புக் கண் கெட்ட உலமாஉகளால் எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கும், சோதனைகளுக்கும் அளவே இல்லை. என் கண்ணால் ஓடிய கண்ணீர் துளிகள் மறுமையில் என்னைக் காக்கும் கேடயங்களாக ஆகட்டும். இதேபோல் எனது கருத்தைச் சரி கண்டு பல துன்பங்களை அல்லாஹ்வின் அருள் அன்பிற்காகச் சுமந்து கொண்ட எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் என்னோடு மேலான “பித்வ்ஸ்” எனும் சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை நல்குவானாக!
நான் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பகிரங்கமாகச் சொன்ன ஆரம்ப கால கட்டத்தில் அதை விளங்கிச் சரி கண்டு ஏற்றுக் கொண்டவர்கள் மிகக் குறைவானவர்களே இருந்தனர். காலஞ் செல்லச் செல்ல அவர்களின் அறிவுக் கண்களும் திறந்து இன்று இவ்வூரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பிறருக்கு விளங்கப்படுத்துமளவு இறையியல் அறிந்தவர்களாயிருப்பதற்கு உதவியது முல்லாக்களின் “பத்வா” என்பதை எண்ணி உள்ளம் மகிழ்ச்சியால் பூத்துக் குலுங்குகிறது.
முற்றும். |