இந்த லட்சணத்தில் நமக்கு பாடம் நடத்துவதா?
பெண் அசுத்தமானவள் எனவே பைபிளை (இன்ஜீல் எனும் இறை வேதத்தை) அவள் தொடக்கூடாது என்று ஐரோப்பா தடை போட்டிருந்த வேளையில், (முஸ்லிம் ஸ்பெய்னின் அறிவுத் தலைநகராய் விளங்கிய) கார்டோபா என்ற குர்துபாவின் ஒரு (area)பகுதியில் மட்டும் நூற்றி எழுபது பெண்கள் புனித வேதமாம் திருக்குர்ஆனை பிரதி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பேராசிரியர் முஹம்மத் அக்ரம் நத்வீ அவர்கள் தனது “அல்முஹத்திஸாத் மினன் நிஸா” (பெண்களில் நபிவழித் துறை அறிஞர்கள்) என்ற நூலில் நபிமொழிகளை அறிவித்துள்ள எட்டாயிரம் பெண்களின் வரலாற்று குறிப்புகளை எழுதியுள்ளார். இது நாற்பது பாகங்களைக் கொண்ட நூல்.
“நபிமொழிகளை அறிவிக்கும் மனிதச் சங்கிலித் தொடரிலுள்ள நான்காயிரம் ஆண்கள் குற்றம் சாட்டப்பட்டு (அவர்கள் அறிவிக்கும் நபிமொழிகள்) ஏற்கப்படுவதில்லை” என்று தனது ‘மீசானுல் இங்திதால்’ என்ற நூலில் கூறியுள்ள அல்ஹாஃபிழ் ஃதஹபீ அவர்கள், “அறிவிப்பாளர் வரிசையிலுள்ள பெண்களில் யாரும் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.
அல்ஹாஃபிழ் இப்னு அசாகிர் (ரஹ்- மரணம்: ஹிஜ்ரி,571) அவர்கள் கூறுகிறார்: “எண்பதுக்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்களிடம் நான் (நபிவழித்)துறை சார்ந்த அறிவைக் கற்றுள்ளேன்”
இமாம் சஹாவீ அவர்களின் “அழ்ழவ்உல் லாமிங் லி அஹ்லில் கர்னித் தாசிங்” என்ற நூலில், ஹிஜ்ரி ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகழ்மேவிய முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
முஸ்லிம் உலகம் இவ்வாறு மாதர்களை மேன்மைப் படுத்திய காலக்கட்டங்களில், ஐரோப்பியர்கள் ஆறு இலட்சம் பெண்களை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினர். “அவர்களெல்லாம் சூனியக்காரிகள்” என்று அதற்கு காரணம் சொல்லிக்கொண்டனர். (The European Witch Craze of the 14th to 17th Centuries: A Sociologist's Perspective | American Journal of Sociology: Vol 86, No 1 (uchicago.edu))
ஐரோப்பியர்களின் மத நீதிமன்றங்கள் (inquisition courts) இப்பெண்கள் மீது நடத்திய விசாரணைகள் கேலிக் கூத்தானவை.
இப்பெண்கள் இரவில் விண்வெளியில் பறக்கின்றனர், மனித உணர்வுகளை மாற்றி அமைக்கின்றனர், வெறுப்பை அன்பாகவும் அன்பை வெறுப்பாகவும் மாற்றுகின்றனர், இடி-மழை-வெயில் ஆகியவற்றை தீர்மானிக்கின்றனர், மனிதனை மிருகமாக உருமாற்றுகின்றனர், சாத்தானுடன் உடலுறவு கொள்கின்றனர் என்றும் இன்னபிற முட்டாள் தனமான குற்றச்சாட்டுகளை சுமத்தி பெண் அறிஞர்களை உயிரோடு கொளுத்தினர் ஐரோப்பியர்கள்.
இதே ஐரோப்பியர்கள் இப்போது, “இஸ்லாம் பெண்களை முடக்குகிறது” என்று பிதற்றிக் கொண்டு, ‘முஸ்லிம்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று நமக்கு பாடம் நடத்தப் பார்க்கிறார்கள்…!
#பெண்ணியம் #பெண்கல்வி #ஐரோப்பா |