இறை நம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் தங்கள் இறுதி முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும் என பிரார்திப்பார்கள் அதற்காக நிறைய துஆக்கள் ஹதீஸில் இருப்பதை பார்க்கிறோம் எனினும் மரணம் இலேசாக்கப் படுவதற்கு மனித கண்ணியம் பேணுவது அதாவது மனிதம் பேணுவதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அதற்கான செயல் வழிமுறையாக சொல்லுகிறார்கள்.
கீழ்காணும் இந்த நபிமொழி மனிதம் பேணுவதில் உள்ள மிகப் பெரும் பாக்கியத்தை குறிப்பாக இலேசான மரணத்தை பற்றி பேசுவதைப் பாருங்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று தன்மைகள் ஒருவரிடம் இருப்பின் இறைவன் அவருடைய மரணத்தை இலகுவாக்குகிறான். மேலும், அவரைச் சுவனத்தில் நுழையச் செய்கிறான்
1. பலவீனமானவர்களுடன் மென்மையாக நடந்து கொள்ளுதல்.
2. பெற்றோருடன் அன்புடனும் பாசத்துடனும் நடந்துகொள்ளுதல்.
3. அடிமைகளிடம் அழகான முறையில் நடத்தல்.
இன்றைக்கு இந்த மூன்று செயல்களிலும் மனிதர்கள் தவறுவதைப் பார்க்கலாம். தன்னை விட பலமிக்கவர்களை விட பலஹீனமானவர்களிடம் தங்களின் சக்தியை சிலர் காட்டுவார்கள். என்னதான் பெற்றோரை பார்த்துக் கொண்டாலும் பெரும்பாலோர் அவர்களிடம் அன்பு பாசத்தை காட்ட நேரம் தருவது அரிது. (அடிமைகள்) அல்லது பணியாட்கள் விஷயத்திலும் அவல நிலையைப் பார்க்க முடிகிறது.
நிறைய நன்மைகளை கொண்டு சுவர்கத்திற்கு செல்ல இருக்கும் வணக்கசாலிகள் கூட தாங்கள் சக மனிதர்களுடன் உறவாடும் போது செய்த தவறுகள் காரணமாக நாளை மறுமையில் அவர்களின் நன்மைகள் எல்லாம் பறிகொடுத்து நரகத்தில் தள்ளப்படுவார் என ஹதீஸில் பார்க்கிறோம்
நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜத்துல் விதா இறுதிப் பேருரையில் இது போன்ற மனிதம் பேணும் விஷயங்களைத் தான் அதிகமாக எச்சரித்துள்ளார்கள்.
#மனிதம்_போற்றுவோம் |