அகிலத்தின் அருட்கொடை, மனிதகுலத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி நாயாகர் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் மீலாத் எதற்காக? என்று இந்த வசந்த மாதம் ரபியுள் அவ்வல்லில் பேச எழுத கடமைப்பட்டிருக்கிறோம்.
நாயகத்தின் மீலாதிற்கு முன் இந்த உலகம் எப்படி இருந்தது என சற்று பார்ப்போம்.
நாயகத்திற்கு முன்னால் வந்த இறைதூதர்களின் செய்தி திரிக்கபட்டு மறைக்கப்பட்டது. ஒட்டு மொத்த உலகமும் அறியாமை எனும் இருளில் மூழ்கி கிடந்தது. பலதெய்வ கோட்பாடும் சிலைவணக்கமும் நாகரீக வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டிவிட்டிருந்தது. அன்று அறியப்பட்டிருந்த உலகம் அதாவது எகிப்திலிருந்து இந்தியா வரை அல்லது கிரேக்கம் முதல் சீனம் வரை உலகெங்கிலும் நாகரீகத்தின் ஒளி மங்கியிருந்தது. ரோமாபுரியும் பாரசீக அரசுகளும் கொடுங்கோன்மையில் மூழ்கி தரம்கெட்ட மனித சமூகத்தில் பயங்கரங்கள் பல பரவியிருந்தன. ஆட்சியாளர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக மட்டும் அல்ல சில நேரம் தாங்களே கடவுளாக மக்களிடம் விளங்கினார்கள். நிலப்பிரபுக்களும் மதம் சார்ந்த உத்தரவுகளும் தங்களிடத்தே வைத்திருந்தனர் இந்த ஆட்சியாளர்கள். ஏற்கனவே கடும்வரி, இலஞ்சம், கையூட்டு மற்றும் வன்கொடுமை தொழிலாளி என பாதிக்கப்படும் பொதுமக்களிடம் இந்த ஆட்சியாளர்களின் உத்தரவுகள் அந்த மக்களை இன்னும் பலஹீனப்படுத்திவிட்டது. யாரும் இந்த நோய்யை பற்றி கவலைப்படவோ அல்லது அதற்கு தீர்வு காணவோ முன்வரவில்லை. மக்களின் துயரை துடைக்க வேண்டியவ மன்னர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாய் ஒழுக்க சீரழிவிலும் பல்வேறு அழிவுப்போர்களிலும் சாம்ராஜ்ய மாற்றத்திலும் மூழ்கி மக்களின் வாழ்வை மேலும் கஷ்டப்படுத்தினார்கள். புதிய புதிய உத்தரவுகள் புதிய அடக்குமுறைகளை மட்டுமே கொண்டுவந்தது.
ரோமாபுரி மற்றும் பாரசீக பேரரசுகள் தொடர்ந்து தங்களுக்குள் போரிட்டு சில கால இடைவெளியில் பெரும் நிலப்பரப்புகளை பிடித்துக்கொண்டனர். இவர்கள் நிலத்தை மாறி மாறி கைப்பற்றும் ஒவ்வொரு முறையும் மக்கள் மீது தங்கள் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவார்கள். சர்ச்சுகளும் கோவில்களும் ஆட்சியாளர்களின் வெற்றிக்கேற்ப அவர்களின் வழிபாட்டுத்தலமாக மாற்றியமைக்கப்படும். முழு உலகிலும் ஆயுதமேந்தி போர் புரிவது படையெடுப்பதுதான் நியதியாக இருந்தது அதனால் மனிதகுலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய வாழ்வாதார அவசியங்களை இழந்து நிற்கும் பொதுஜனமோ இதை எதிர்த்து குரலெழுப்ப இயலவில்லை. மனசாட்சிக்கான சுதந்திரம் தென்படவில்லை. மனிதன் கண்மூடித்தனமாக இருளில் மூழ்கியிருந்தான், எந்த மதமும் அல்லது தத்துவமும் மனிதனுக்கு ஒளிபாய்ச்சி வழிகாட்டவில்லை. மதகுருமார்கள், இறைத்தூதர்களின் போதனைகள் திரித்தும் பிழைகொண்டு மாற்றப்பட்டும் இருந்தன. திரிக்கப்பட்ட பின் எஞ்சியுள்ள சில கோட்பாடுகளும் அதிகாரவர்க்கத்திற்கு நெருக்கமாய் உள்ளவர்களின் கரங்களில் இலாபமீட்டும் ஒரு தொழிலாக விளங்கியது. கிரேக்க தத்துவங்கள் வலுவிழந்து நின்றது, confucious மற்றும் mani போன்ற மதகுருமார்களின் போதனைகள் மறைந்துபோனது, புத்த வேத மதங்களும் புறந்தள்ளப்பட்டது. மனித சமூகம் எங்குசெல்வதென்று அறியாது நம்பிக்கை ஒளி இழந்து நின்றது. பிரச்சனை ஒரு இக்கட்டான நிலைக்கு சென்றடைந்து மனிதகுல மீட்பாளரை உலகிற்கு வரவழைத்தது.
இந்த நிலையில் தான் அகிலத்தின் அருட்கொடை யின் மீலாத் நடை பெற்றது, உலகம் ஓர் வசந்தத்தை பெற்றது, அவரது புகழை அல்லாஹ்வே உயர்தியுள்ளதாக கூறுகிறான் (وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ)
இந்த உலகம் எத்தனையோ தலைவர்களை கண்டுள்ளது வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் மறுமலர்ச்சியாளர்கள், மதம் மற்றும் தத்துவ கோட்பாட்டின் ஸ்தாபகர்கள், மாபெரும் ஆட்சியாளர்கள், புரட்சியாளர்கள் காணக்கிடைப்பார்கள். அனைவரிடத்திலும் காணப்படும் பொதுவான ஓர் அம்சம் என்னவெனில் வாழ்வின் ஏதேனும் ஒரு பகுதியில் அவர்கள் சாதித்திருப்பார்கள் இதர பகுதியில் கறைபடிந்த தீமைகள் ஊருவதற்கான பெருந்துளையை விட்டுவைத்திருப்பார்கள். மனித சமூகத்தின் முழு மாற்றத்தை அதாவது உள்ளும் புறமும் தனிமனித வாழ்விலும் கூட்டு சமூக வாழ்விலும் சரியான மாற்றத்தை ஏற்படுத்திய எந்த இயக்கத்தையும் கொள்கையையும் இதுவரை பார்க்கமுடியவில்லை. இந்த முழுமையான மாற்றத்தைத்தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் சாதித்து காட்டினார்கள். மனிதனின் அகத்திலும் புறத்திலும் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படுத்திய இந்த மாற்றம் வரலாற்றில் தனித்துவம் பெற்றதொரு மாபெரும் மாற்றமாகும். பள்ளிவாசலிலிருந்து பல்பொருள் அங்காடி வரை, கல்விச்சாலை முதல் நீதிமன்றம் வரை, வீட்டிலிருந்து பொதுத்தளம் வரை மனித சமூகத்தின் எல்லா தளத்திலும் முழுமையான மாற்றம் அது.
மீலாதுன் நபியின் நோக்கத்தை, நபியின் வருகையின் நோக்கத்தை அல்லாஹ் இப்படி குறிப்பிடுகிறான்.
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் : 61:9)
மனிதருள் மாணிக்கம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் மீலாதை படிப்போம் பரப்புவோம் அதன் வழி நடப்போம்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்
- உஸ்மான் காலித்
|