www.vikatan.com
ஹரிஹரசுதன் தங்கவேலு
இருள் வலை வில்லன்கள்! - 21
திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லமுடியாத ரேகாவிற்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் ஒரு வேலைவாய்ப்பு வருகிறது. ‘உபேர் ஈட்ஸ்’ என்ற பிரபல நிறுவனத்தின் HR வாட்ஸப்பில் தொடர்புகொள்கிறார். உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இருக்கைகள் முன்பதிவு செய்து தருவதுதான் வேலை. ‘‘மொபைல் இருந்தாலே போதும்’’ என்கிறார். ரேகாவிற்கு வேலை கிடைக்கிறது. ரீனா என்ற குழுத்தலைவர் டெலிகிராம் குழுவில் ரேகாவை இணைக்கிறார். அக்குழுவில் பல இன்ஸ்டா மற்றும் தொழில் பிரபலங்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் முடிவிலும் தங்களுக்குக் கிடைத்த ஆயிரக்கணக்கான கமிஷன் தொகையின் ஸ்க்ரீன்ஷாட் படங்கள் பகிர்கிறார்கள். ரேகாவிற்கும் இவர்களைப் போல பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை எழுகிறது.
அதற்கான வழியை குழுத்தலைவர் ரீனாவிடம் விசாரிக்கிறார். ‘‘ப்ரீமியம் ஊழியர் திட்டத்தில் நுழைந்தால் நிறைய ஆர்டர்கள் கிடைக்கும்’’ என்கிறார் ரீனா. தன் நகைகளை விற்று இரண்டு லட்சம் முதலீடு தந்து ப்ரீமியம் ஊழியர் ஆனார் ரேகா.
ஓரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ரேகாவின் கனவு நிஜமானதா?
முதலில் வெறும் ஐந்து ஆர்டர்கள் மட்டுமே வந்த நிலையில், ப்ரீமியம் ஊழியராக நுழைந்தவுடன் ஒவ்வொரு நாளும் 250 ஆர்டர்களுக்குக் குறையாமல் வந்தன. அதை நிறுவனத்தின் வலைதளத்தில் சரியான நேரத்தில் முன்பதிவுகளைச் செய்து தந்தார் ரேகா. ஒரு ஆர்டருக்கான கமிஷன் தொகை நூறு என்ற ரீதியில் ஒவ்வொரு நாளும், 25,000 ரூபாய் ரேகாவின் வாலட்டில் வரவு வைக்கப்பட்டது. போட்ட முதலீடு இரண்டு லட்சத்திற்கு மேல் லாபம் மட்டுமே ஒரு லட்சம் என இரண்டே வாரத்தில் மூன்று லட்சத்துக்கு மேல் சேர்ந்தது. வாலட்டில் இருந்து பெரிய அளவில் பணத்தை வங்கிக் கணக்கிற்குப் பணப்பரிமாற்றம் செய்தால் ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கும் என ரீனா எச்சரித்ததால், தன் தேவைக்கேற்ப சிறிய அளவில் ஆயிரம், இரண்டாயிரம் என எடுத்து வந்தார் ரேகா.
20 நாள்களில் வாலட்டில் ஐந்து லட்சம் சேர்ந்ததும் ஆர்டர்கள் வருகை மீண்டும் ஒற்றை எண்களில் குறைந்துபோனது. மீண்டும் ரீனா அறிவுறுத்தியபடி, ப்ரீமியம் ஊழியராக ஆவதற்கு முதலீடு செய்தார் ரேகா.
இந்த முறை ரேகாவை ஐந்து லட்சம் முதலீடு செய்ய வைத்தார் ரீனா. இப்போது ஒரு நாளுக்கு 600 ஆர்டர்கள் வந்தன, அதற்கான கமிஷன் தொகை மட்டுமே 60,000 ரூபாய். சில நாள்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வாலட்டில் சம்பாதித்திருந்தார் ரேகா. நாள் முழுக்க ஆர்டர்களை க்ளிக் செய்து கை வலியே வந்தாலும், விடாமல் செய்தார் ரேகா. ஒவ்வொரு க்ளிக்கிற்கும் பணமாயிற்றே!
இப்படியாக ஆறு மாத காலத்தில் சுமார் நான்கு கோடி ரூபாயை வாலட்டில் பேலன்ஸாக சம்பாதித்திருந்தார் ரேகா. இதற்காக சுமார் எழுபது லட்ச ரூபாயைக் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்திருந்தார். நகைகளை விற்றது, தனது பெயரில் இருந்த இடத்தைக் கணவனுக்குத் தெரியாமல் விற்றது, நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கியது என மிகுந்த சிரமப்பட்டே இந்த எழுபது லட்ச ரூபாயை ரேகாவால் திரட்ட முடிந்தது. ஆனால் ஒவ்வொரு நாள் காலை எழுந்ததும் தனது ஊழியர் கணக்கில் இருக்கும் நான்கு கோடியைப் பார்க்கும்போது அனைத்து வலிகளும் மறைந்து போயின.
கடன்களை அடைக்க வேண்டுமே! அதற்காக இந்தப் பணத்தைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றார் ரேகா. ரிசர்வ் வங்கி விதி, ஆதார் எண், பான் எண் என ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்தப் பரிமாற்றம் மறுக்கப்பட்டது. ரீனாவிடம் விசாரித்ததில், ‘‘ஒரு கோடி ரூபாயைப் பரிமாற்றம் செய்ய ஐந்து சதவிகிதம் ஜி.எஸ்.டி கட்ட வேண்டும். 20 லட்சம் கட்டணம் செலுத்தி விட்டால் மறுநாளே நான்கு கோடி ரூபாயும் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்’’ எனத் தெரிவித்தார்.
வாலட் சேவையில் வெறும் டிஜிட்டல் பணமாக இருக்கும் கோடிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பெரும் மன இறுக்கம், குழப்பம் ரேகாவைச் சூழ்ந்தது. வீட்டிலிருந்த பொருள்களை விற்றார், ஒரு வாரத்தில் மீட்டுத் தருகிறேன் என அம்மா மற்றும் தங்கையின் நகைகளை அடகு வைத்தார். தெரிந்தவர், தெரியாதவர் என அனைவருக்கும் அழைத்துப் பேசி, கடன் வாங்கினார். இப்படியாகப் பணம் கிடைத்தது. டிஜிட்டல் வாலட்டில் இருக்கும் நான்கு கோடியை மீட்கும் இறுதி முயற்சியாக 20 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி கட்டணத்தையும் செலுத்தினார்.
அடுத்த நாள் லாகின் செய்து பார்த்தபோது டிஜிட்டல் வாலட் பூஜ்யம் எனக் காட்டியது. ரீனாவிடம் விசாரித்ததில், ‘‘உங்கள் வங்கிக் கணக்கில் வந்திருக்கும், பாருங்கள்’’ என்றார். தன் உயிர் மொத்தமும் விரல்களில் துடிக்க, வங்கிக் கணக்கில் லாகின் செய்து பார்த்தால் அங்கும் பணம் வரவில்லை. நேராக வங்கிக்கு ஓடினார் ரேகா. மேலாளரைச் சந்தித்துப் புகார் செய்தார். அனைத்தையும் சோதித்துப் பார்த்த மேலாளர், ‘‘மேடம், இது சைபர் மோசடி. ஒரு ரூபாய்கூட உங்கள் கணக்கில் வரவில்லை, இனியும் வராது.உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் செய்யுங்கள்’’ என்றார்.
ரேகாவிற்குப் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. ‘என்னது! மோசடியா? அப்படியானால் எனது 90 லட்சம் பணம் திரும்ப வராதா? என் குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு எப்படி பதில் சொல்வேன்’ என நினைக்கும்போதே அச்சத்தில் இதயம் உறைந்தது.
இன்வெஸ்ட்மென்ட் மோசடி, வொர்க் ப்ரம் ஹோம் மோசடி, க்ரிப்டோ மோசடி, ஆன்லைன் டாஸ்க் மோசடி, டெலிகிராம் மோசடி எனப் பல பெயர்களில் அறியப்படும் இந்த முதலீட்டு மோசடி எப்படி நிகழ்கிறது?
ஒரு பிரபல நிறுவனப் பெயரைக் குறிப்பிட்டு ‘வீட்டிலிருந்தே ஒரு நாளுக்கு இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை சம்பாதிக்கலாம்’ என சமூக வலைதள விளம்பரங்கள் மற்றும் வாட்ஸப் செய்திகள் மூலம் பகிர்வது முதல் கட்டம்.
பிறகு நிறுவனத்தின் HR என அறிமுகம் செய்து கொண்டு பெண் பெயர்களில் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
உங்களுக்கு ஒரு டாஸ்க்கைக் கொடுப்பார்கள். லைக் செய்வது, க்ளிக் செய்வது, ஸ்க்ரீன்ஷாட் பகிர்வது என எளிமையாக இந்த வேலைகள் இருக்கும். அதைச் செய்ததும் அதற்கு ஊதியமாக 150 முதல் 250 ரூபாய் வரை உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி ஆச்சர்யப்படுத்துவார்கள்.
அடுத்து உங்கள் வேலையை உறுதி செய்து ஊழியர் எண் (Employee ID) என ஓர் எண்ணைப் பகிர்வார்கள். ‘‘இதோடு எனது வேலை முடிந்தது, உங்கள் டீம் லீடர் உங்களை வழிநடத்துவார்’’ என இன்னொரு பெண் ஐ.டி-க்கு நம்மை அனுப்புவார்கள்.
பிறகு ரகசிய மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலியைத் தரவிறக்கச் சொல்லி, நம்மை ஒரு குழுவில் இணைப்பார்கள்.
அந்தக் குழுவில் உறுப்பினர்களாக இன்ஸ்டா மட்டும் தொழில் பிரபலங்கள் இருப்பார்கள், பங்குச்சந்தை முதலீடு என்றால் வாரன் பஃபெட் கூட இருப்பார். இவர்கள் இருக்கும் குழுவில் நாம் இருப்பதை நினைத்து மிகப் பெருமிதமாக உணர்வோம்.! ஆனால் யாருடைய புகைப்படத்தை வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் டெலிகிராமில் டிபியாக வைத்துக்கொள்ளலாம் என்ற சிறிய விஷயத்தை நமது மூளை அப்போது உணராது.
பிரபலங்களின் புகைப்படத்தை டிபியாக வைப்பது ஒரு மாயத்தோற்றம். ‘அட, இவ்வளவு பெரிய ஆட்களே இருக்கிறார்களே’ என நாம் முழுமையாக நம்பிவிடுவோம்.
அடுத்து, ‘எனக்கு இன்று மட்டுமே இருபதாயிரம் வந்தது’, ‘எனக்கு முப்பதாயிரம் வந்தது’, ‘இந்த வேலைக்குச் சேர்ந்ததால் பெரும் பணக்காரனாக மாறிவிட்டேன்’ என நொடிக்கு நூறு ஸ்க்ரீன் ஷாட்கள் குழுவில் பகிர்வார்கள். பார்க்கும் நமக்கும் மனதில் ஆசை பிறக்கும். இந்த உளவியல் உத்தியை எக்கோ சேம்பர் (Echo chambers - எதிரொலிக்கும் அறைகள்) என்பார்கள். இந்தக் குழுவில் பெரும்பாலும் மோசடியாளர்களே உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்கள் பகிரும் கூகுள் பே, போன் பே பணவரவு ஸ்க்ரீன் ஷாட்கள் போலியாக எடிட் செய்யப்பட்டவை. தொடர்ந்து இப்படிப் பகிர்வதன் மூலம் பிறர் மனதிற்குள்ளும் அவர்கள் எண்ணத்தை எதிரொலிக்க வைப்பதே இந்த யுத்தி. சமூக வலைதளங்களில் ஐந்து பேர் ஒரு விஷயத்தைப் பேசினால், அது என்னவென்றே தெரியாவிட்டாலும் ஆறாவது நபரும் அந்த விஷயத்தைப் பேச நிர்பந்திக்கப்படுவார். அவர்களது கருத்தை இவரும் பிரதிபலிப்பதற்குக் காரணம், இந்த எதிரொலிக்கும் அறை எபெக்ட் தான்!
அடுத்து நிறுவனத்தின் இணையதளம் என ஓர் இணைய இணைப்பைப் பகிர்வார்கள். அதில் உங்கள் ஊழியர் எண்ணை வைத்து லாகின் செய்ததும் உங்களுக்கு என அக்கவுண்ட் மற்றும் வாலட் உருவாக்கப்பட்டிருக்கும். பங்குச்சந்தை, க்ரிப்டோ, உணவு என மோசடிக்கு ஏற்றபடி அதன் விவரங்கள் இங்கு வரைபடங்களாக கிராபிக்ஸ் நுட்பத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.
அடுத்து, ‘நீங்கள் இலவசத் திட்டத்தில் இருக்கிறீர்கள்’ என்று சொல்லி, ப்ரீபெய்டு திட்டம், ப்ரீமியம் திட்டம் என ஏதோ ஒரு பெயரில் மோசடியை அறிமுகம் செய்வார்கள், அதில் ஐம்பதாயிரம் செலுத்தினால் இவ்வளவு லாப எனத் தொடங்கி, ஐம்பது லட்சம் வரைக்கும் முதலீடு செய்ய வைப்பார்கள்.
நீங்கள் செலுத்திய பணத்திற்கு ஏற்ப டிஜிட்டல் வாலட்டில் லாபத்தொகை வளர்ந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது சிறிய அளவில் நீங்கள் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். இந்த சொற்ப பணமே நாம் கொடுத்த முதலீட்டில் இருந்துதான் வருகிறது என அப்போது நமக்குத் தெரியாது. அது சம்பளம் அல்லது லாபப் பணம் என நம்ப வைக்கப்படுவோம்.
இந்த டிஜிட்டல் வாலட்டில் எவ்வளவு கோடி சேர்ந்தாலும் உங்கள் வங்கிக்கு அதை மாற்றவே முடியாது. காரணம், அந்த வலைதளம் மற்றும் டிஜிட்டல் வாலட் எல்லாமே போலியாக உருவாக்கப்பட்டவை. ஒரு வெள்ளைத்தாளில் உங்கள் பேலன்ஸ் ஒரு லட்சம் என எழுதி அதை அழுத்தினால் உங்கள் வங்கியில் ஒரு லட்சம் க்ரெடிட் ஆகுமா? ஆகாது அல்லவா! அது போலத்தான் இது!
இன்றைக்கு செலவே இல்லாமல் ஒரு வலைதளத்தை உருவாக்கிவிட முடியும். அதில் கிராபிக்ஸ், படங்கள், ரூபாய், பேலன்ஸ் போன்ற எதை வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ள முடியும். ஒரு கால்குலேட்டரில் எண் காட்டுவது போல, மோசடியாளர் எவ்வளவு தொகையை டைப் செய்கிறாரோ அது உங்கள் வாலட்டில் பேலன்ஸாக இருப்பது போலக் காட்டும். அதை எக்காலத்திலும் உங்கள் வங்கிக்கு மாற்ற முடியாது.
பிறகு எப்படி என்னால் சிறிய அளவில் தொகை எடுக்க முடிந்தது என நினைக்கலாம்! அது நம்மைப் போலவே முதலீடு செய்த இன்னொருவர் நமக்கு அனுப்பிய தொகை. அவரது அன்றைய டாஸ்க்காக அதைச் சொல்லியிருப்பார்கள். நாம் பணம் வந்து விட்டதா எனப் பார்ப்போமே தவிர, அது எங்கிருந்து வந்தது என்ற மூலத்தை ஆராய்வதில்லை.
இந்த மோசடிக்கும் பெரு நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மோசடியாளர்கள் பகிரும் இணைப்புகளும் போலியாக உருவாக்கப்படுபவை. அவர்கள் பகிரும் URL எனும் வலைதள முகவரிகளை கவனித்துப் பாருங்கள். எழுத்துப் பிழைகளுடன், நிறுவனங்களுக்குத் தொடர்பே இல்லாத வேறு பெயர்களில் இருக்கும்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் சைபர் மோசடிகளில் இந்தியர்கள் இழந்த தொகை ரூ. 1,750 கோடி. இதில் சுமார் 1,200 கோடி இன்வெஸ்ட்மென்ட் மோசடிகளில் இழந்திருக்கிறார்கள்.
ஆகவே, ‘துரித பணம், டபுள் லாபம், எளிய வேலை, க்ளிக் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்’ என எந்தச் செய்தி உங்களுக்கு வந்தாலும் கவனம் நண்பர்களே!
பணத்தைப் பெருக்குவது மட்டுமே லாபம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் மோசடியில் இழக்காமல் உங்கள் வசம் இருக்கும் பணமும் ஒரு விதத்தில் லாபம்தான்.
- விழித்திருப்போம்...
 |