Posted By:peer On 10/17/2025 9:12:40 AM |
|
அண்மையில் மறைந்த எனது பாட்டனார் மர்ஹும். S.O.S. பீர் முகம்மது அவர்கள் ஆற்றிய சமூகப் பணிகள் ஏராளம். அவர்கள் பற்றிய சில நினைவுகளையும் செய்திகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
மிக செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த அவர் சிறு வயதிலிருந்தே சமூகப் பணிகளின் மீதும் அரசியல் மீதும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். நெல்லை ஏர்வாடி இஸ்லாமிய இளைஞர் மன்றத்தின் செயலாளராக இருந்து கல்வி உதவி, திருமண உதவி, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரம் என அவர் ஆற்றிய சமூக சேவைகள் ஏராளம்.
ஏர்வாடி தபால் நிலையம், பைத்துஸ் ஸலாம் பள்ளிவாசல், நியாய விலைக் கடை (ரேசன் கடை), அரசு நூலகம், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல திட்டங்கள் ஊரில் அமைவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். ஏர்வாடியில் உள்ள ஹிஸ்னுல் உலூம் அரபிக் கல்லாரியின் இயக்கம் மற்றும் வளர்ச்சியிலும் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
அதேபோல அன்றைய காலத்தில் ஏர்வாடியில் இரவு நேரங்களில் தான் திருமண நிகழ்வுகள் நடக்கும். பகலில் நடத்தக் கூடாது என்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவியது. அதற்கு எதிராக பகல் திருமணங்களை இஸ்லாமிய இளைஞர் மன்றத்தின் சார்பாக நடத்தியுள்ளார்கள். இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த காரணத்தால் அன்றைய காலகட்டத்தில் ஊரில் உள்ள பல சுவர்களில் 'SOS ஒழிக' என எழுதிய வரலாற்றையும் என்னோடு பகிர்ந்துள்ளார்.
தனது அரசியல் ஈடுபாட்டால் முஸ்லிம் லீக்கிலும் தீவிரமாக பணியாற்றிய அவர், முஸ்லிம் லீக்-கின் நெல்லை மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளார். மறைந்த பெருந்தலைவர் மர்ஹும்.காயிதே மில்லத் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் எழுந்து தனது கருத்தைக் பதிவு செய்த நினைவுகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டார். அதுபோல சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்துள்ளார்.
எனது அப்பாவின் திருமணத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் அன்றைய பாளை தொகுதி முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் மர்ஹும். M.M.பீர் முகம்மது அவர்கள். புத்தக வடிவில் அவர் வழங்கிய வாழ்த்து மடல் இன்றும் எங்கள் வீட்டு அலமாரியில் உள்ளது. அதே M.M.பீர் முகம்மது அவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற சென்றிருந்தபோது, எனது பாட்டனாரின் தந்தையான மர்ஹும். சாகுல் ஹமீது அவர்கள் அவருக்கு அன்பளிப்பாக வைர மோதிரம் அணிவித்தார்கள். அவர் அங்கு பெரும் வணிகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்பாவின் சேவைகள் என்பது மூன்று தலைமுறைகளைக் கடந்தது. எனக்குத் தெரிந்த ஒருவரின் மகள் திருமணத்துக்கு தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறி பணம் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதேபோல என்னோடு கல்லூரியில் பயின்ற எனது சக தோழன் ஒருவனுக்கும் கல்விக் கட்டணம் அப்பாவின் ஏற்பாட்டிலேயே வழங்கப்பட்டது.
இப்படி தனது கடைசி காலம் வரையிலும் சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அரசியல் மற்றும் சமூக சேவைகள் எல்லாம் விளம்பரங்களாகவும், பணம் சம்பாதிக்கும் களமாகவும் மாறிப்போன இன்றைய சூழலில், இறை நாட்டத்தை நாடியும், சமூகத்தின் மீது தாங்கள் கொண்ட அக்கறையாலும் தன்னலமின்றி சேவையாற்றிய அப்பாவைப் போன்ற சிலர் எப்போதும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சுயநலமான இவ்வுலகில் இறைவன் அவர்களின் மூலமாகவே சமூகத்தில் பல மாற்றங்களை நிகழ்த்துகிறான். சமூகத்தின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் பலருக்கும் அவர்கள் முன்மாதிரிகளாகவும் திகழ்கிறார்கள்.
இறைவன் அவர்களது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனமான ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக... ஆமீன்..
|