அல்குர்ஆன் கூறும் இரண்டு சரிதைகள். இரண்டுமே பேரற்புதம். 1. யூசுஃப் (அலை). 2. மூஸா (அலை).
இரண்டு சரிதைகளுக்கும் இடையிலான அற்புதமான ஒப்பீட்டை அல்குர்ஆன் அழகாகச் சொல்லித் தருகிறது.
இரண்டுமே எகிப்தில் தொடங்கியது. இரண்டுமே தொலைந்து போனவர்களின் சரிதைகள்.
இருவருமே நீர்நிலைகளில் வீசப்பட்டனர். ஒருவர் கிணற்றில் வீசப்பட்டார். இன்னொருவர் நதியில் வீசப்பட்டார்.

யூசுஃப் (அலை), அவரை வெறுத்த சொந்த சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்டார். மூஸா (அலை), அல்லாஹ்வின் கட்டளைப்படி சொந்த தாயாரால் ஆற்றில் வீசப்பட்டார்.
முதல் சரிதை மிகுந்த வெறுப்பும் பகைமையும் கொண்டது. இரண்டாவது சரிதை மிகுந்த மென்மையும் அக்கறையும் கொண்டது.
முதல் சரிதையில் மனிதர்களின் திட்டமிடல் இருந்தது. இரண்டாவது சரிதையில் மனித குலத்தின் இறைவனுடைய திட்டமிடல் இருந்தது.
இருவருமே அரண்மனையில் வளர்க்கப்பட்டனர்.
யூசுஃப் (அலை) அவர்களின் இழப்பால் அவரது தந்தை வாடினார். மூஸால் (அலை) அவர்களை நினைத்து அவரது தாயார் வாடினார்.
மகனது கவலையால் யூசுஃப் (அலை) அவர்களது தந்தையின் பார்வை பறிபோனது. மகனது கவலையால் மூஸா (அலை) அவர்களது தாயாரின் இதயமோ நின்றுபோகும் அளவுக்குச் சென்றது.
இருவரையும் இரு பெண்மணிகள் வளர்த்தனர். யூசுஃப் (அலை) அவர்களின் வளர்ப்புத்தாயே அவரிடம் மோசமாக நடக்க முயன்றார். மூஸா (அலை) அவர்களை வளர்த்த தாயோ, அவரைக் கொல்லாதீர்கள் என்று ஃபிர்அவ்னிடம் மன்றாடினார்.
யூசுஃப் (அலை) அவர்களைத் தேடி சகோதரர்கள் புறப்பட்டனர். மூஸா (அலை) அவர்களைத் தேடி அவரது சகோதரி புறப்பட்டார்.
இருவரும் முதிர்ச்சியடைந்தபோது இருவருக்கும் ஞானத்தையும் அறிவையும் அல்லாஹ் வழங்கினான்.
யூசுஃப் (அலை) அவர்களின் தந்தைக்கும் மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கும் அவர்களது மகன்களைத் திருப்பித் தருவதாக அல்லாஹ் வாக்களித்தான்.
மகனது வாசனையை உணர்ந்தபோது யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை நிம்மதியடைந்தார். பெற்ற மகனை நெஞ்சோடு வாரியணைத்தபோது மூஸா (அலை) அவர்களின் தாயார் நிம்மதியடைந்தார்.
யூசுஃப் (அலை) வாழ்ந்த அரண்மனை அவருக்கு தீங்கு விளைவித்தது. மூஸா (அலை) வாழ்ந்த அரண்மனை அவருக்கு பாதுகாப்பை வழங்கியது.
ஆனால் இறுதியில் யூசுஃப் (அலை) வளர்ந்த ஊர் மக்கள் அவருடன் சமரசம் செய்து நல்லமுறையில் நடந்துகொண்டனர்.
ஆனால் மூஸா (அலை) வளர்ந்த ஊர் மக்கள் அவருடன் மோதி அவரைக் கொலைசெய்ய நாடினர்.
இறுதியில் இருபெரும் இறைத்தூதர்களும் பெருவெற்றி பெற்றனர். பேருதாரணங்களாக மாறினர்.
யாருடைய சூழ்ச்சியும் அங்கு எடுபடவில்லை. தடைகளைத் தாண்டினர். சதிகளை தவிடுபொடி ஆக்கினர்.
இங்கும் சில ஆட்சியாளர்கள் பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டுகிறார்கள். முஸ்லிம்களை கருவறுக்க நாடுகிறார்கள். ஓட்டுரிமையை இல்லாமல் ஆக்க நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ்வின் பதில் ஒன்றே ஒன்றுதான்:
’’அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களை தீட்டினான். இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரிலும் வல்லவன்”. (3:54)
நூஹ் மஹ்ழரி

|