நற்பண்பு என்பது தசையைப் போல!
நற்பண்பு என்பது நமது தசையைப் போல என்கிறார்கள் ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள்!
அப்படியென்றால் என்ன?
எந்த அளவுக்கு நாம் நம் தசைகளுக்குப் பயிற்சி அளிக்கிறோமோ - அந்த அளவுக்கே நமது உடல் வலிமை ஏற்றம் பெறும்!
அது போலவே நாம் எந்த அளவுக்கு - நாம் பெற வேண்டிய நற்பண்புகளுக்குப் பயிற்சி அளிக்கிறோமோ அந்த அளவுக்கே நமது “மகாரிமல் அஃக்லாக்” எனும் கண்ணியமான நற்பண்புகள் நமக்குள் வளரும்!
Virtue and ethics is like a muscle. The more you train to exercise it, the better it becomes.
நற்பண்புகளின் நிலைக்களனாக நாம் ஒரே நாளிலெல்லாம் மாறி விட முடியாது!
திறமை ஒன்றை வளர்த்துக் கொள்ளும்போது - நாம் பல தவறுகளைச் செய்து விடுவது - தவிர்க்க இயலாதது. அது நீச்சலாக இருந்தாலும் சரி; வாகனம் ஓட்டுவதாக இருந்தாலும் சரி; தவறுகள் நிச்சயம் நிகழும்!
அது போலத்தான் - நற்பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போதும் - நமக்குத் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் நிச்சயம் உண்டு!
உடற்பயிற்சியிலே தவறுகள் செய்தால் - அவைகளைத் திருத்திக் கொள்வது போலத்தான் நற்பண்புக்கான பயிற்சியிலும் நாம் செய்து விடுகின்ற தவறுகளைத் திருத்திக் கொண்டு விட வேண்டும்!
நற்பண்புகளுக்கான இந்த தொடர் பயிற்சியில் - உண்மையிலேயே நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தால் - நமது ஆளுமையின் அசைக்க முடியாத அங்கமாக அந்த நற்பண்புகள் ஆகி விடும்!
*
நமது தவறுகளைத் திருத்திக் கொள்வது என்பது நமக்கு மிகக்கடினமாக இருப்பது எதனால் தெரியுமா?
கவனியுங்கள்!
நற்பண்பு என்பது நமது தசை போன்றது என்பது போலவே, தீய பண்புகளும் நமது தசைகள் போன்றது தான்!
அறிந்தோ அறியாமலோ - நமது தீய குணங்களுக்கும் - நாம் தொடர்ந்து பயிற்சி அளித்தே வந்திருக்கிறோம் - நமது கடந்த காலங்களில்!
ஷெய்ஃக் அவர்கள் தரும் உதாரணம்: சுயநலம்!
பிறர் நலம் நாடுதல் ஒரு நற்பண்பு எனில், சுயநலம் என்பது ஒரு தீயபண்பு ஆகும்!
பிறர் நலன் நாடுவதற்கு பதிலாக, எனக்கு பிறரால் என்னென்ன கிடைக்க வேண்டும் என்று, காலை முதல் இரவு வரை ஒருவர் சிந்திக்கிறார் செயல்படுகிறார் எனில் இதல் பொருள் என்ன?
சுய நலம் எனும் அவரது “தசைக்கு” அவர் அனு தினமும் தொடர்ந்து பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார் என்பது பொருள்!
இதனை நரம்பியல் அறிவியல் கண்ணோட்டத்தில் சொல்வதாக இருந்தால் - நாம் தொடர்ந்து செய்கின்ற நமது சுயநலச் செயல்பாடுகள் - ஒரு விதமான நரம்பியல் இணைப்புகளையே நமக்குள் உண்டாக்கி வைத்திருக்கும். அந்த வலைப்பின்னலை - மிக இலகுவாகவெல்லாம் கலைத்து விட்டு - பிறர் நலம் நாடும் உச்சத்துக்கெல்லாம் ஒருவர் சென்று விட முடியாது!
எந்த அளவுக்கு அந்த வலைப்பின்னல் வலிமையாக இருக்கிறதோ - அந்த அளவுக்கு நாம் எடுக்கும் முயற்சியும் வலிமையாக இருந்திட வேண்டும்!
இப்படிப்பட்ட வலிமையை அன்றைய நபித்தோழர்கள் பெற்றிருந்தார்கள்!
எப்படி? ஒன்று: மக்காவில் இறக்கியருளப்பட்ட இறைவனின் சொற்களுக்கு அந்த நபித்தோழர்கள் அந்த அளவுக்கு மதிப்பளித்திருந்தார்கள்!
இரண்டு: மகத்தான நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான அண்ணல் நபி (ஸல்) அவர்களை, அந்த நபித்தோழர்கள் அந்த அளவுக்கு நேசித்திருந்தார்கள்!
நமக்கும் இந்த இரண்டு வழிகள் மட்டுமே! |