Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நோன்பின் மௌனம் - கணேஷ் வெங்கட்ராமன்
Posted By:peer On 3/5/2026 12:54:52 PM

 

நான் நோன்பு நோற்ற அனுபவமற்றவன். இருப்பினும், நிஷா மன்சூரின் இந்தச் சிறிய கவிதை, நோன்பு குறித்த ஒரு மகத்தான உண்மையை மிக நுணுக்கமாக எனக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

நோன்பு மகத்தானது
நோன்பு பரிசுத்தமானது
நோன்பின் அனுபவங்கள் மிக அந்தரங்கமானவை
‘உணவு உரையாடல் என்றால்
நோன்பு மௌனம்
எனவேதான்
நோன்பைக் குறித்துப் பேசவரும் யாவரும்
உணவைக் குறித்துப் பேசும் சுழலில்
வசமாகச் சிக்கிக்கொள்கிறார்கள்’
என்றார் சூபி.

(“நூருன் அலா நூர்” - சூஃபி மெய்ஞானக் கவிதைகள் - கவிஞர் நிஷா மன்சூர் - விஷ்ணுபுரம் பதிப்பகம்)

இந்த வரிகளில் என்னை மிகவும் கவர்வது, நோன்பை விவரிக்க முடியாத ஒரு 'அனுபவமாக' கவிஞர் கையாண்டுள்ள விதம். "அந்தரங்கமானது" என்று அவர் குறிப்பிடும்போது, அது வெறும் உடல் சார்ந்த ஒழுக்கம் மட்டுமல்ல; அது ஆன்மாவின் ஆழத்தில் நிகழும் ஒரு மௌன மாற்றம் என்பதை உணர முடிகிறது.

பொதுவாக நாம் நோன்பைப் பற்றிப் பேசத் தொடங்கும்போது கால அட்டவணை, பசி, தாகம், இஃப்தார் எனப் புறக்காரணிகளின் சுழலிலேயே சிக்கிக் கொள்கிறோம். இந்தக் கவிதை அந்த முரணையே சுட்டிக்காட்டுகிறது. நோன்பின் உண்மையான மொழி 'மௌனம்' என்றால், அதை வெளியில் நின்று பார்ப்பவர்களின் மொழி இயல்பாகவே 'உணவாக' மாறிவிடுகிறது. ஒரு சூஃபித்துவ நயத்துடன், நேரடி அனுபவத்திற்கும் அதை விவரிக்கும் மொழிக்கும் இடையே உள்ள இடைவெளியை இக்கவிதை மென்மையாக நினைவுறுத்துகிறது.

இந்தக் கவிதை நோன்பைப் பற்றி விளக்க முற்படவில்லை; மாறாக அதன் மையத்திலிருக்கும் 'சொல்லொணா அமைதியை' உணரச் செய்கிறது. நோன்பு நோற்காத ஒருவனாக என்னால் அந்த மௌனத்திற்குள் முழுமையாக நுழைய முடியாவிட்டாலும், அதன் வாசலில் நின்று அந்தப் புனிதமான அமைதியின் இருப்பை இக்கவிதை வழி உணர முடிகிறது.






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..