பள்ளிக்குச் சென்ற காலம் அது.
இன்றைய நகரம் போல அப்போது தெருக்கள் கடைகளால் நிறைந்திருக்கவில்லை. காய்கறி, மீன், பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றைத் தலையில் சுமந்தபடி தெருக்களுக்குள் வந்து விற்பவர்கள்தான் எங்கள் ஊரின் அன்றாடக் காட்சிகள்.
அந்த காலை பொழுதில் கேட்கும் பிரபலமான குரல்களில் ஓன்று "இட்லி இட்லி " என்று கனீர் குரலில் கேட்கும் பத்மா அக்காவின் குரல் .
பொத்தையடி பகுதியிலிருந்து கால்நடையாகவே வந்து தெருக்களில் இட்லி விற்பார்கள்.
இப்போது போல பைக்கில் வந்து, “இடியாப்பம்... இடியாப்பம்...” என்று குரல் கொடுத்துவிட்டு, நாம் வெளியே வருவதற்குள் அடுத்த தெருவுக்குச் சென்று விடுபவர்கள் அல்ல அவர்கள்.
அவர்களுடைய வாழ்க்கைக்கு வேகம் கிடையாது.
ஆனால் பாரம் இருந்தது.
பெரிய இட்லிச் சட்டி தலையில்.
ஒரு கையில் சட்டினித் தூக்குச்சட்டி.
மற்றொரு பக்கம் வாழை இலை இட்லி மிளகாய்ப்பொடி.
இத்தனை பாரத்திற்கு பின்னால் கண்டிப்பாக அவருக்கு குடும்ப பாரம் ஓன்று இருந்து இருக்கும் என்றே கருதுகிறேன்.
அந்தக் குரல் தெருவின் முனையில் கேட்டதுமே, வீடுகளின் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கும். சிறு பிள்ளைகள் திண்ணைக்கு ஓடி வருவார்கள். பத்மா அக்கா ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சட்டியை கீழே இறக்கி வைக்கும் போது, ஒரு பெரிய மலையே கீழே இறக்கி வைப்பது போல் இருக்கும்.
ஆவி பறக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற இட்லிகளை வைத்து, நாம் கொடுக்கும் டம்ளரில் வத்தல் சட்னியை ஊற்றித் பின் வாழை இலையைக் கிழித்து அதில் மிளகாய் பொடியை வைத்து தருவார்கள் அதில் இருந்து வரும் அந்த வாசம் இனிமையானது .
இன்று நினைத்துப் பார்த்தால், அது உணவாக மட்டும் தெரியவில்லை.
அது ஒரு காலத்தின் சுவை.
ஒரு தெருவின் வாசனை.
ஒரு தலைமுறையின் உழைப்பு.
ஒரு பெண்ணின் வாழ்க்கை.
காலம் உருண்டோடிவிட்டது. இன்று அதே பொத்தையடி பகுதியில் 'மாஸ்டர் மஹால்' கம்பீரமாக நின்றிருக்கிறது. அங்கு நடக்கும் விசேஷங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட, அரை கிலோமீட்டர் தூரத்திற்கு பைக்கை எடுக்காமல் நகர முடிவதில்லை.
ஆனால், அன்று அத்தனை பாரத்தையும் தன் தலையிலும், குடும்பத்தின் சுமையை தன் நெஞ்சிலும் சுமந்துகொண்டு, அந்த நீண்ட தூரத்தைச் சிரித்த முகத்தோடு கடந்து வந்தாரே பத்மா அக்கா...
இன்று இன்ஸ்டாகளில் யாரெல்லாமோ சிங்கப்பெண்ணாக கொண்டப்படுகிறார்கள் . நான் சற்றே பின்னோக்கி பார்க்கிறேன் நம்மோடு வாழ்ந்த பல சிங்கபெண்களை ...
~Mohamed Asan ஏர்வாடி
 |