செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2009, 13:38 [IST]
மங்களூர் : முஸ்லீ்ம் மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு பர்தா அணிந்து வருவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்தது. இப்போது அதே போன்ற ஒரு தடையை மங்களூரில் உள்ள கல்லூரி நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட மாணவிக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு போடப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மங்களூரில் ஸ்ரீ வெங்கட்ராமன் சுவாமி கல்லூரி என்ற கல்லூரி உள்ளது. இதை பந்த்வாலில் உள்ள எஸ்.வி.எஸ். வித்யவர்த்தகா சங்கம் நடத்தி வருகிறது. இது அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும்.
இங்கு முதலாமாண்டு பி.காம் படிப்பவர் ஆயிஷா ஆஸ்மின் (19). இவர் பர்தா அணிந்து முகத்தை மூடியபடி கல்லூரிக்கு வந்துள்ளார். இதையடுத்து இவரை அழைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் சீதாராம மய்யா, முகத்தை மூடியபடி வகுப்புகளுக்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
சமீப காலமாக இந்த கல்லூரியில், பர்தா மற்றும் முகத்தை மூடியபடி வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி ஆஸ்மின் கூறுகையில், இந்தத் தடையால் கடந்த பத்து நாட்களாக நான் வகுப்புகளுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 11ம் தேதி கல்லூரியில் சேருவதற்காக நேரடித் தேர்வுக்கு வந்தபோது கூட நான் பர்தாவில்தான் வந்தேன். அப்போது யாரும் அதை ஆட்சேபிக்கவில்லை. இப்போது இப்படி தடை விதித்திருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.
பர்தா அணிய தடை விதிக்கப்பட்டதால், நான் சுடிதார் அணிந்து, தலையைச் சுற்றிலும் ஸ்கார்ப்பை சுற்றிக் கொண்டு வந்தேன். ஆனால் அதற்கும் தடை விதித்து விட்டனர். எனது பெற்றோரையும் அழைத்து இதுகுறித்து எச்சரித்தனர் என்றார்.
இந்தத் தடையால் தற்போது வகுப்புகளுக்குப் போக முடியாத நிலையில் உள்ள ஆஸ்மின், திங்கள்கிழமை நடந்த இன்டர்னல் தேர்வையும் எழுத முடியாமல் போயுள்ளார்.
கல்லூரி நிர்வாகத்தின் போக்கு இப்படியென்றால் சக மாணவிகள் செய்த கிண்டலும் ஆஸ்மினை வேதனைப்படுத்தியுள்ளது. நீ தலையில் ஸ்கார்ப் கட்டி வருவதை நிறுத்தாவிட்டால் நாங்கள் காவி ஸ்கார்ப்பை கட்டி வருவோம் என்று அவர்கள் மிரட்டினார்களாம் என்றார் ஆஸ்மின்.
இந்தப் புகார் குறித்து முதல்வர் மய்யா கூறுகையில், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை ஏற்றுத்தான் இந்த நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளோம் என்கிறார்.
இதற்கிடையே, கல்லூரி மாணவ, மாணவியருக்கென உடைக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை என்று மங்களூர் பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
|