திங்கள்கிழமை, செப்டம்பர் 7, 2009, 10:54 [IST]
கொல்கத்தா : கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு விமானப் படை விமானத்தில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருந்ததால் அந்த விமானம் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியிலிருந்து சீனா செல்லும் வழியில் கொல்கத்தாவில் அந்த விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருப்பதை அந்த விமானத்தின் விமானிகள் தெரிவிக்கவில்லை. இது சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் அதை சுங்க இலாகா அதிகாரிகள் சிறை பிடித்தனர்.
அதிலிருந்த விமானிகள் உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சீனாவின் ஹன்யாங் நகருக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொல்கத்தாவில் தரையிறக்க அனுமதி கோரியது. இதை ஏற்று இந்திய விமானப் படையின் கிழக்கு மண்டல அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
விமானம் தரையிறங்கியதும் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக அதில் ஏறியபோது ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருந்ததைத் கண்டு அதிர்ந்தனர்.
ஆனால், விமானத்தில் இந்த ஆயுதங்கள் இருப்பதை விமானிகள் மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து இந்தியாவின் மீது பறக்க அந்த விமானத்துக்கு தரப்பட்ட அனுமதியை இந்திய விமானப் படை ரத்து செய்தது.
இதையடு்த்து விமானிகள் உள்ளிட்ட 9 பேரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இப்போது விமானம் சீல் இடப்பட்டு விமான நிலையத்தின் தனி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சீனாவின் ஹன்யாங் பகுதி ஆயுத உற்பத்திக்கு பேர் போனதாகும்.
|