Posted by Kashif
(sohailmamooty) on 9/7/2009
|
|||
வெளிநாட்டில் வேலை பார்க்கும் நெல்லை: துபாய், சவூதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் அங்கு திடீரென்று ஏற்படும் இன்னல்களை சமாளிக்க மத்திய அரசு இந்தியர்கள் நலநிதியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேடு, சவூதி அரேபியா, கத்தார், மலேசியா, ஏமன், சூடான், சிரியா, இந்தோனேசியா, லெபனான், தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் இந்த நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எதிர்பாராதவிதமாக பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலி விசா காரணமாக வெளிநாடுகளில் தவிப்பது, தங்களது நிர்வாகத்திடம் இருந்து உரிய சம்பளம் கிடைக்காமல் அல்லல்படுவது, வீட்டு வேலையின் கொடுமை காரணமாக ஓடிவிடுவது, தங்குமிடம் மற்றும் தரமான மருத்துவ வசதி கிடைக்காமல் இருப்பது, வேலை பிடிக்காமல் சொந்த ஊருக்கும் திரும்பி வரமுடியாமை, பணியின் போது இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வர கம்பெனிகள் ஓத்துழைப்பு அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் உதவிக்காக கையேந்தி நிற்கும் நிலை உள்ளது. இவ்வாறு தவிப்பவர்களை மீட்க இந்திய அரசு தனி நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து மத்திய அரசு இந்தியர்கள் நலநிதி என்ற பெயரில் நிதியை உருவாக்கியுள்ளது. இதற்கு முதல் கட்டமாக ரூ.4 கோடியே 80 லட்சத்தை மத்திய அரசு ஓதுக்கீடு செய்துள்ளது. அத்துடன் பல்வேறு வழிகளில் நன்கொடை பெற்று நிதியை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 16 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் இதற்காக தனி மிஷன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மிஷன் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் நிம்மதியடைந்துள்ளனர். NEWS : Thats Tamil.com
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |