Posted by Hassan Abdul Kader
(hasan) on 9/8/2009
|
|||
அஹ்மதாபாத்:குஜராத்தில் இஷ்ரத் ஜஹான், கேரளாவைச்சார்ந்த ஜாவித் குலாம் என்ற பிராணேஷ்குமார் உட்பட 4 பேர் கொல்லப்பட்டது போலிஎன்கவுண்டரில் என்று அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிமன்றம் கூறியுள்ளது.
மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தமாங்கின் விசாரணை அறிக்கை நேற்று அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் சம்ர்ப்பிக்கப்பட்டது.
சொஹ்ரபுதீன் சேஹ் சம்பவத்திற்கு பிறகு குஜராத் மோடி அரசுக்கு ஏற்பட்ட புதிய பின்னடைவு இந்த விசாரணை அறிக்கை.அநியாயமாக கொல்லப்பட்ட 4 பேருக்கும் லஷ்கர்-இ-தய்யிபாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.
2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம்தேதி அன்று மும்பை கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், பாகிஸ்தானைச் சார்ந்தவர் என்று குற்றஞ்சுமத்தப்பட்ட அம்ஜத் அலி என்ற ராஜ்குமார், அக்பர் அலி ராணா, ஜிஸான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோரை குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் போலீசார் சுட்டுக்கொன்றனர். மும்பை குருநானக் கல்சா கல்லூரியில் இரண்டாம் வருடம் பட்டபடிப்பு பயின்ற மாணவியான இஷ்ரத்தும், இதர 3 நபர்களும் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தைச் சார்ந்தவர்களென்றும், அவர்கள் மோடியைக்கொல்வதற்காக குஜராத்திற்கு வந்தார்கள் என்றும் குஜராத் போலீசார் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
குஜராத் காவல்துறையினர் அவர்களுடைய ரகசிய திட்டத்தை செயல்படுத்த இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேரையும் மும்பையிலிருந்து அஹ்மதாபாத்திற்கு கொண்டுவந்ததாக விசாரணை அறிக்கை கூறுகின்றது.லஷ்கர்-இ-தய்யிபாவுடன் தொடர்புடைய முஸ்லிம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்றால் பொதுமக்கள் உடனே நம்பிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இந்த என்கவுண்டரை நிகழ்த்தியதாக அந்த விசாரணை அறிக்கை மேலும் கூறுகிறது.
இந்த சம்பவத்தைத்தொடர்ந்து சி.ஆர்.பி.சி 176 படி நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் சாதாரண மரண நிகழ்விற்கே இந்த பிரிவின் படி நீதி விசாரணைக்கு உத்தரவிடமுடியும். இஷ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதை மறுவிசாரணைச்செய்ய குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ஏ.டி.ஜி.பி பிரமோத் குமாரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட புலனாய்வுக்குழுவை நியமித்திருந்தது. இஷ்ரத்தின் தாயார் சமீனா கவ்ஸர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த புலனாய்விற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதற்கு முன்னர் இதேபாணியில் நடைபெற்ற ஷொரஹ்புதீன் ஷேஹ் கொலையும் போலி என்கவுண்டர் என்று நீதி மன்றம் கூறியிருந்தது.
ஷொரஹ்பூதின் போலி என்கவுண்டர் வழக்கில் சிக்கி தற்போது சிறையிலிருக்கும் அன்றைய டி.ஜி.பி வன்சாராதான் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேரை கொன்ற போலி என்கவுண்டருக்கு தலைமையேற்று நடத்தியவர்.ஷொரஹ்புதீன் வழக்கில் சாட்சிகளை அழிக்க அவருடைய மனைவி கவுஸர் பீவியை தீவைத்து கொன்றனர். அஹ்மதாபாத் அருகிலிலுள்ள கோதார்பூர் வாட்டர் வர்க்ஸிற்கு சமீபத்தில் வைத்துதான் இஷ்ரத் உட்பட 4 பேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். கொல்லப்படுவதற்கு 4 தினங்களுக்கு முன்பே இஷ்ரத் காணாமல் போய்விட்டார். இஷ்ரத்தையும் மற்றுள்ளவர்களையும் அஹ்மதாபாத் காவல்துறையினர் கட்த்திச்சென்று கொன்றதாக அன்று குற்றச்சாட்டு எழுந்ததுஏழை குடும்பத்தில் பிறந்த இஷ்ரத் ஜஹான் கல்லூரி முடிந்து வந்தபின் டியூசன் வகுப்புகள் நடத்திதான் தனது குடும்ப செலவுகளை சமாளித்துவந்தார். கேரளத்தைச்சார்ந்த கோபிநாதன் பிள்ளையின் மகனான பிராணேஷ் குமார் ஸாஜிதா என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்துவந்தார்.
இந்நிலையில் ஸாஜிதாவை திருமணம் செய்வதற்கு முன்பு இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஜாவித் குலாம் ஷேஹ் என்று மாற்றிக்கொண்டார். இச்சம்பவம் அவர் கொல்லப்படுவதற்கு 8 வருடங்களுக்கு முன்பு நடந்தது. அவருடைய தந்தையான கோபிநாத பிள்ளையும் தனது மகனின் கொலைக்கு விசாரணை நடத்தவேண்டுமென்று மனித உரிமை அமைப்பான NCHRO வின் உதவியோடு நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
செய்தி:தேஜஸ் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் குஜராத் போலீசாரால் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்து தமிழகத்தின் முன்னணி மாத இதழான விடியல் வெள்ளி பத்திரிகை தனது நிருபர்களை மும்பைக்கு அனுப்பி விசாரணை மேற்க்கொண்டது. அப்போது இஷ்ரத் ஜஹானின் உடலை குளிப்பாட்டியவர்களிடம் விசாரித்ததில் இஷ்ரத்தின் மர்மஸ்தானத்தில் குண்டு பாய்ந்த தகவல் கிடைத்தது. மேலும் குஜராத் காவல்துறை கூறிய காரணங்களும் முன்னுக்குபின் முரணாக இருந்தது.இந்த விசாரணையின் மூலம் பெறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் அன்றே 2004 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் கொல்லப்பட்டது போலி என்கவுண்டரின் மூலம்தான் என்பதை விடியல் வெள்ளி பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |