Posted by Haja Mohideen
(Hajas) on 10/12/2009
|
|||
சிறப்பு ரயில் டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன அக்டோபர் 12,2009 சென்னை: தீபாவளியையொட்டி, சென்னை சென்ட்ரலிலிருந்து சேலம் - ஈரோடு - மதுரை வழியாக தூத்துக்குடிக்கு நாளை இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும், நேற்று 10 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டன. டிக்கெட் கிடைக்காத பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சென்னை எழும்பூரிலிருந்து, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் தீபாவளியை ஒட்டி பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது. இதனால், எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் வரும் 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஒவ்வொரு ரயிலிலும் இரண்டாம் வகுப்பில் படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய காத்திருப்போர் பட்டியலில் தலா 250 பேர் வரை உள்ளனர்.
இந்த நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களிலும் ஒவ்வொரு ரயிலிலும் இடவசதிக்கு 200 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதையொட்டி, சென்னை சென்ட்ரலிலிருந்து தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகூருக்கு சிறப்பு ரயில்களை குறிப்பிட்ட தேதிகளில் இயக்க உள்ளதாக நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. சென்னை சென்ட்ரலிலிருந்து தூத்துக்குடிக்கு வரும் 13ம் தேதி இரவு 7.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் ஆறு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் 10 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டன. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத எட்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரயில் புறப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக நிலையத்திற்கு வந்தால், பயணிகள் இப்பெட்டிகளில் இடம் பிடித்து பயணம் செய்ய ஏதுவாக இருக்கும். சென்னை சென்ட்ரலிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் 15ம் தேதி மாலை 6.05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் ஆறு பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் 10 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டன. இத்துடன் இந்த ரயிலில் எட்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்லிலிருந்து நாகூருக்கு வரும் 15ம் தேதி இரவு 7.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளும் முன்பதிவாகி விட்டன. இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டியில் இருக்கை வசதிக்கு 223 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் 14ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயிலிலும், நாகூர் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து வரும் 16ம் தேதியும் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களிலும்,சென்னை சென்ட்ரலிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் 17ம் தேதி தீபாவளி அன்று இயக்கப்படும் சிறப்பு ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் டிக்கெட்டுகள் நிறைய உள்ளன. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |