Posted by Kashif
(sohailmamooty) on 10/20/2009
|
|||
உலகம் முழுவதும் பட்டினியில் 1 கோடி மக்கள்! நைரோபி: உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவிக்கிறது. ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில், உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும். உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர் கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது. சோமாலியாவில், வன்முறை யும், உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டாலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டாலராக உள்ளது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நெடு நாட்களாகி விட்டது. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தை களில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது. ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது. கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி விட்டது. விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது. 1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் போதுமானதாக இல்லை. உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளனர். http://palaivanathoothu.blogspot.com/2009/10/1.html
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |