Posted by Mohamedris
(Mohamedris) on 10/23/2009
|
|||
3 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி : பா.ஜ., கூட்டணிக்கு மீண்டும் அடி
புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு மீண்டும் பலத்த அடி கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா, அரியானா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், கடந்த 13ம் தேதி நடந்தது. லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த பின் நடக்கும் பெரிய அளவிலான தேர்தல் என்பதால், நாடு முழுவதும் இதன் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் ஒரு சோதனைக் களமாகவே அமைந்தது. மூன்று மாநில தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். மகாராஷ்டிராவில் ஹாட்ரிக்: மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி 144 தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி 140 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது காங்கிரஸ் 82 தொகுதிகளிலும், தேசியவாத காங்., 62 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணிக்கு 90 தொகுதிகளே கிடைத்துள்ளன. பா.ஜ., 46 தொகுதிகளிலும், சிவசேனா 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலை விட, இந்த முறை இந்த கூட்டணிக்கு 26 தொகுதிகள் குறைவாகக் கிடைத்துள்ளன. பா.ஜ., - சிவசேனா கூட்டணியின் ஓட்டுகளை, ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி சிதறடித்து விட்டதால், காங்கிரஸ் கூட்டணி எளிதாக வெற்றி பெற்றது. ராஜ் தாக்கரே கட்சி 13 தொகுதிகளிலும், பல சிறிய கட்சிகளை உள்ளடக்கிய மூன்றாவது அணி 14 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை, விலைவாசி அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை போன்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடித்து, காங்கிரஸ் கூட்டணி "ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் தோல்வியால் பா.ஜ., கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அரியானாவில் குழப்பம்: அரியானாவில் மொத்தம் 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருந்தாலும், தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு அந்த கட்சிக்கு இன்னும் ஆறு இடங்கள் தேவைப்படுகின்றன. சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அது சுலபமாக நடக்கும். அரியானா தேர்தலில் பெரும் திருப்பமாக, ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தள கட்சி 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது, அரியானா அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் லோக்தளம் கட்சிக்கு ஒன்பது இடங்களே கிடைத்தன. லோக்தளம் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, தனியாக களம் இறங்கிய பா.ஜ.,வுக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் (பி.எல்.,) ஆறு தொகுதிகளிலும், சுயேச்சைகள் ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். அருணாச்சலில் அசத்தல் வெற்றி: அருணாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் அந்த கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய முதல்வர் தூர்ஜி காண்டு மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு, தனித்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் ஐந்து தொகுதிகளிலும், திரிணமுல் காங்கிரஸ் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ., மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் செல்வாக்கு அதிகரிப்பு: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், முதல் முறையாக நடக்கும் பெரிய அளவிலான சட்டசபை தேர்தல் இது என்பதால், எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னின்று பிரசாரம் செய்தனர். இந்த வெற்றி, தேசிய அளவில் காங்கிரசின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. ஆட்சி இல்லாத மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு இனி அதிகரிக்க உதவிடும். பொருளாதார மந்த நிலை, மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி பாதிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு அலை அரசுக்கு வராது. அடுத்த ஐந்தாண்டு எங்கள் ஆட்சி : அசோக் சவான் மகிழ்ச்சி: "காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் வகையில், இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்' என, மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார். மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் அசோக் சவான் கூறியதாவது: மகாராஷ்டிராவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்., - தேசியவாத காங்., கூட்டணி அரசின் நல்லாட்சி நடந்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தொடரும் வகையில் மக்கள் ஓட்டளித்துள்ளனர். அடுத்த முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், கட்சியின் மற்ற தலைவர்களும் முடிவு செய்வர். புதிதாக தேர்வு செய்யப்பட் டுள்ள காங்., எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் சட்டசபை தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வர். எனக்கும், முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவது உண்மை அல்ல. தேஷ்முக் எனது சகோதரரைப் போன்றவர். கடந்த தேர்தலில் 69 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆதரவைப் பெறுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். இவ்வாறு அசோக் சவான் கூறினார். காம்ப்ளி தோல்வி: * மகாராஷ்டிரா முதல் வர் அசோக் சவான் (காங்கிரஸ்), பொக் கார் தொகுதியில் வெற்றி பெற்றார். * முன்னாள் துணை முதல்வரும், சிவசேனா வேட்பாளருமான ஆர்.ஆர்.பாட்டீல், தாஸ்கான் - கவாதே தொகுதியில் வெற்றி பெற்றார். * அமராவதி தொகுதியில் ஜனாதிபதி பிரதிபா மகன் ராவ் சாகேப் ஷெகாவத், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்., அதிருப்தி வேட்பாளர் சுனில் தேஸ்முக்கை விட, 5,612 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். * விக்ரோலி தொகுதியில் லோக்பாரதி கட்சி சார்பில் போட்டியிட்ட மாஜி கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தோல்வி அடைந்தார். * துணை முதல்வர் சாஜன் புஜ்பால் யேவொலா சட்டசபை தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். * மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயின் மகள் பிரனிதி, சோலாபூர் தொகுதியில் வெற்றி பெற்றார். * மறைந்த பா.ஜ., மூத்த தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் (பா.ஜ.,) காட்கேபார் தொகுதியில் தோல்வி அடைந்தார். காங்., அலுவலகத்தில் உற்சாகம்: சோனியா வீட்டு முன் ஆட்டம்: மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் டில்லியில் அக்கட்சித் தொண்டர்கள் இனிப்பு வினியோகித்தும், வெடி வெடித்தும், நடனங்கள் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று காலையிலிருந்தே காங்கிரஸ், மூன்று மாநிலங்களிலும் முன்னணியில் இருந்து வந்தது. காலையில் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்த தொண்டர்கள், பின்னர் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலையிலும், சோனியா குடியிருக்கும் வீட்டின் முன்பகுதியிலும், ஜன்பாத் சாலையிலும் மேலும் குவிய ஆரம்பித்தனர். தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையான அக்பர் சாலையில் வெடி வெடித்தனர்; மேளம் அடித்து குத்தாட்டம் போட்டனர். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் உட்பட தொண்டர்கள், மக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இதனால், அக்பர் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சோனியா வீட்டின் முன், காங்கிரஸ் கட்சியின் கை சின்னம், சோனியா, ராகுல், பிரியங்கா படங்களை ஏந்தி கோஷமிட்டனர். சோனியாவின் தலைமையில் முதன்முறையாக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை நினைவூட்டுவதற்காக, "விஜய ரதம்' என்ற வெற்றித் தேரை சோனியா வீட்டின் முன் இழுத்தனர். திரளான தொண்டர்கள் தேர்தல் வெற்றிக்காக சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். எல்லா புகழும் சோனியாவுக்கே : முதல்வர் கருணாநிதி பாராட்டு: "மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு, சோனியாவின் கடும் உழைப்பே காரணம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: மகாராஷ்டிரா, அரியானா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மிகப் பெரிய வெற்றியை தெளிவாக வழங்கியுள்ளனர். இந்த வெற்றிக்கு, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் அரசுகள் மற்றும் மத்திய அரசின் சிறப்பான செயல்பாடே முழு முதல் காரணம். காங்கிரஸ் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட் டதில், உங்களின் திறமையும், ஊக்கமும் கொண்ட தலைமையும், கடுமையான மற்றும் நேர்மையான உழைப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மகிழ்ச்சியான தருணத்தில், என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்தை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். இவ்வாறு முதல்வர் எழுதியுள்ளார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |