Posted by Sabersathik
(sabersathik) on 11/7/2009
|
|||
தொடர் மழை காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்பட பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியர் ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார். பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்துள்ளது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 77.50 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 92.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 750 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்துள்ளது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 98.09 அடியாக இருந்தது. இன்று இது 117.62 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 74 அடியாக இருந்தது. இன்று 83.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,765 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை நீடிப்பதால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் மேலும் உயரக் கூடும். மாவட்டத்தில் உள்ள இதர அணைகளில் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் நிரம்பியுள்ளன. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை 83 அடியை எட்டி நிரம்பியுள்ளது. இந்த அணைக்கு வரும் 2,273 கன அடி தண்ணீர் அப்படியே ஆற்றில் விடப்பட்டுள்ளது. இதே போல் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை 82 அடியாக நிரம்பியுள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை 70.21 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே முழுகொள்ளளவான 36.10 அடியை எட்டியுள்ளது. 132.2 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை 95 அடியாக உயர்ந்துள்ளது. இதே போல் 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை 25 அடியாகவும், 23.60 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணை 10.50 அடியாகவும், 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடு முடியாறு அணை 39.50 அடியாகவும் உயர்ந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக 15 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் மூழ்கி கிடக்கின்றன. தூத்துக்குடி நகரில் தொடர்ச்சியாக 7 மணி நேரம் மழை பெய்தது. ஒரே நாள் இரவில் 171.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக தூத்துக்குடியில் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடுவது நேற்று நிறுத்தப்பட்டது. அனைத்து அணைகளும் மூடப்பட்டிருந்தன. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1547 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையிலும் வினாடிக்கு 574 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேற்கு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் நீர்தேங்கி உள்ளதால் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |