வள்ளியூர்: வள்ளியூர் பஸ்ஸ்டாண்டிற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து நடக்கவிருந்த கடையடைப்பு மற்றும் ரோடு மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. வள்ளியூர் ஊருக்கு வெளிப்புறம் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டதால் ஊருக்குள் வந்து செல்லவேண்டிய பஸ்களில் சில பைபாஸ் வழியாக சென்றது. இதனை கண்டித்து வள்ளியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் சர்வகட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்றுகூடி அலோசனை நடத்தினர்.கூட்டத்தில் வள்ளியூர் பஸ்ஸ்டாண்டிற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளிடம் நேரில் வலியுறுத்த வேண்டும். அதன் பின்பும் பஸ்கள் பைபாஸ் வழியாக சென்றால் வள்ளியூரில் கடையடைப்பு மற்றும் ரோடு மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன்படி ராதாபுரம் எம்.எல்.ஏ.அப்பாவு தலைமையில் வியாபாரிகள் சங்க தலைவர் சின்னத்துரை, பொருளாளர் முருகன், துணை செயலாளர் காதர்முகைதீன், காங்., நகர தலைவர் குமாரசாமி, பா.ஜ.நகர தலைவர் முத்தழகன், ம.தி.மு.க. தவசிராஜன், டி.ஒய்.எப்.ஐ.நாகதேவன், வர்த்தக காங்., நகர தலைவர் சீராக் இசக்கியப்பன் உட்பட பலர் போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் அனைத்து பஸ்களும் வந்து செல்லவும், குறிப்பாக எண்ட் டூ எண்ட் பஸ்கள் பணகுடி, வள்ளியூர் வழியாக எப்போதும் போல் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வள்ளியூர் பஸ்ஸ்டாண்டில் விரைவு பஸ் முன்பதிவு மையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பேரில் வள்ளியூரில் நடக்கவிருந்த கடையடைப்பு மற்றும் ரோடு மறியல் போராட்டத்தை வியாபார மற்றும் அரசியல் பொதுநல அமைப்புகள் வாபஸ் பெற்றனர்
|