திருநெல்வேலி: நெல்லையில் வரும் 20ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி நடக்கிறது.இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பதிவுதாரர்களின் விபரங்கள் பொதுத்துறை மற்றும் அரசு உதவிபெறும் தனியார் நிறுவனங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மனுதாரர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர். மேலும் ஒரு சிறப்பு நடவடிக்கையாக தனியார் துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு இணங்க தகுதியான நபர்கள் தேர்வு செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் வேலை வாய்ப்பு சந்தை நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு சந்தை வரும் 20ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறையை சேர்ந்த வேலையளிப்போரும், வேலை வேண்டுவோரும் நேருக்கு நேர் சந்திந்து தேவையான மனுதாரர்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் துறையை சேர்ந்த வேலையளிப்போர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டிப்ளமோ படித்தவர்கள், ஐ.டி.ஐ.படித்தவர்கள் போன்றோருக்கு பணிக் காலியிடங்கள் ஏராளமாக உள்ளது. எனவே தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுஜயசேகரன் நாயர் தெரிவித்துள்ளார். Top
|