ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 10:38 [IST]
நெல்லை: தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை , குமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் வள்ளியூர் பஸ் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்து விட்டது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலை கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில்...
மார்த்தாண்டம், கொட்டாரம், பூதப்பாண்டி, கன்னிமார், ஆரல்வாய்மொழி உள்பட மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டியது. அந்த மழை நேற்று காலையும் நீடித்தது.
இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இந்த மழையின் காரணமாக அணைகள், கால்வாய்கள் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் அதிகபட்சமாக 69 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவிலில் மழையின் காரணமாக வைத்தியநாதபுரம் விவேகானந்தா தெருவில் வசிக்கும் லாசர் என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.
ராஜாக்கமங்கலம் நீண்டகரை பி.பகுதியில் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியதில் 12 தென்னை மரங்கள் கருகின. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வயல்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது.
கன்னியாகுமரியில் நேற்று காலை திடீரென கடல் உள் வாங்கியது. கடல் உள்வாங்கியதாலும், கொந்தளிப்பாக காணப்பட்டதாலும் காலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து பிற்பகலில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. இருப்பினும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.
வள்ளியூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய பலத்த மழை நேற்று காலை வரை நீடித்தது. அருகில் உள்ள ஓடையில் உடைப்பெடுத்ததால் வள்ளியூர் பஸ் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது.
திருச்செந்தூர் பகுதியில் 5 வீடுகள் சேதம் அடைந்தன. மாவட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சேர்வலாறு அணை நிரம்பியது. அணையில் தற்போது 150 அடி தண்ணீர் உள்ளது. பாபநாசம் அணை 140 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105 அடியை எட்டியது.
மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. சபரி மலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் நீராடினார்கள். நெல்லையில் பெய்த மழையால் பாளை. தொழிலாளர் நல அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்து நின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
|