Posted by Sabersathik
(sabersathik) on 11/26/2009
|
|||
திருநெல்வேலி, நவ. 25: திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு வணிக நிறுவனங்களில் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் குவளைகளைப் பயன்படுத்தினால் நாளொன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் எச்சரித்துள்ளார்.
இம் மாவட்டத்தை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத மாவட்டமாக்கும் முயற்சியில் மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி ஆட்சியர் பேசியது:
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய இடங்களிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வாசல்களிலும், உள்ளாட்சிó அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் விளம்பர பலகைகள் வைக்கப்படும்.
வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் உணவகங்களில் பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் குவளைகளை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்துவோருக்கு டிசம்பர் மாத இறுதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டு முதல் எச்சரிக்கை விடுக்கப்படும். ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினாலோ அல்லது விற்றாலோ நாள் ஒன்றுக்கு ரூ. 250 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்படும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு விழாக்களிலும் பிளாஸ்டிக் குவளைகள், பாலிதீன் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக துணி மற்றும் காகித்தால் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
துணி மற்றும் காகிóதப் பொருள்களைத் தயாரிக்கும் தொழில் தொடங்க முன்வருவோருக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றார் ஆட்சியர்.
வணிக நிறுவனங்களுடன் ஆலோசனை: இம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திருநெல்வேலியில் உள்ள 2 பெரிய துணிக் கடைகளின் நிர்வாகத்தினரையும் அழைத்துப் பேசி அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளையோ காகிதப் பைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற மேலும் சில இனிப்பு விற்பனை கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களையும் நேரடியாக அழைத்துப் பேச அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், மாநகர காவல்துறை துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) அவினாஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், சுற்றுச்சூழல் பொறியாளர்கள் விஜயபாஸ்கரன், முருகன், டி.எஸ்.எஸ். தொண்டு நிறுவன நிர்வாகி கென்னடி அடிகளார், சரணாலயம் தொண்டு நிறுவன நிர்வாகி ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |