லட்சக்கணக்கான ஹாஜிகள் இன்று அரஃபாவில் மக்கா: இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்தி எழுபதாயிரம் ஹாஜிகள் உள்பட உலகின் பலபாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான ஹாஜிகள் இன்று(27/11/09) ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஸபீர் மலையில் சூரியன் உதித்தவுடனேயே ஹஜ்ஜின் பிரதான கடமையான அரஃபாவில் ஒன்று கூடுவதற்கான புறப்படுவார்கள்.
ஹஜ் என்பது அரஃபாவில் நிற்பது என்பது நபிமொழி.மதியம் நேரத்தில் அனைத்து ஹாஜிகளும் அரஃபாவில் ஒன்று கூடுவார்கள். மிகப்பெரிய மைதானமான அரஃபாவின் எல்லையிலிலுள்ள நமீரா மஸ்ஜிதில் நடைபெறும் தொழுகைக்கும் சொற்பொழிவிற்கும் சவூதி அரேபியாவின் முஃப்தி தலைமை தாங்குவார்.
லுஹர் தொழுகையும் அஸர் தொழுகையும் சேர்த்து தொழுதபிறகு முஃமின்கள் அரஃபா மைதானத்திலும் ஜபலுற்றஹ்மாவிலும் அழுதகண்களுடனும் வானை நோக்கி உயர்ந்த கைகளுடனும் பிரபஞ்சத்தை படைத்து பாதுகாத்து பரிபாலித்து வருபவனான வல்லமைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து ஹாஜிகள் கூட்டத்தோடு அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவிற்கு புறப்படுவார்கள். முஸ்தலிஃபாவில் இன்று இரவு தங்கியபிறகு நாளை ஃபஜ்ர் தொழுகை முடிந்ததும் மினாவை நோக்கிச்செல்வார்கள்.
நாளை காலையில்தான் ஜம்ராவில் கல்லெறிதல் நடைபெறும். ஜம்ராவில் எறிவதற்கான சிறுகற்களை முஸ்தலிஃபாவிலிருந்து சேகரிப்பார்கள். கல்லெறிதலுக்கிடையில் நெரிசலை கட்டுப்படுத்தவும், ஹாஜிகளின் பாதுகாப்பிற்காகவும் சவூதி ஹஜ் அமைச்சகம் முதவிஃபுகளுக்கு கட்டளைகளை பிறப்பித்துள்ளது.
நேற்று இரவில் மினாவிற்கு வந்த ஹாஜிகளை கடுமையான காலநிலை வரவேற்றது. இரவில் மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் மதியவேளையில் ஆரம்பித்த மழை கடுமையாகவும் விட்டு விட்டும் பெய்தது.
|