இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தியாகப்பெருநாள் சிந்தனைகள் சொந்த நலனுக்காகவும் சுய லாபத்திற்காகவும் இவ்வுலகில் செய்யும் முயற்சிகள் யாவும் நிச்சயமாக தியாகமாகாது. தியாகமென்றால் அதற்கொரு லட்சியம் இருக்கவேண்டும். ஒரு உன்னதமான நோக்கம் வேண்டும். அதுவும் நம்மைப்படைத்தவனின் படைப்பின் நோக்கத்தை நிறைவுச்செய்வதற்காக செய்யும் தியாகம்தான் உன்னதமானது. மனிதகுல வரலாற்றிலேயே அத்தகையதொரு மகத்தான தியாகத்திற்கு சொந்தக்காரர்தான் அல்லாஹ்வின் தூதர் நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள். வல்ல நாயன் அல்லாஹ் தனது திருக்குர் ஆனில் தனது நண்பர் என்று கூறுமளவுக்கு தியாகத்திற்கு ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர்கள். அல்லாஹ் இட்ட கட்டளைகள் அத்தனையையும் அணுவளவும் பிசகாமல் நிறைவேற்றியவர். ஷைத்தானின் தூண்டுதலோ மனோ இச்சையோ அவர்களின் லட்சியத்தை தடுக்கவில்லை. அவர்கள்தான் மாபெரும் ஏகத்துவ புரட்சியாளர். அவர்கள்தான் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி. அவர்கள்தான் தியாகத்தின் தடாகம். அந்த சத்திய சீலரின் வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரும் படிப்பினைகள் இருக்கிறது. அல்லாஹ் தனது திருக்குர் ஆனில் குறிப்பிடுகிறான், இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கைகொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4) இப்ராஹீம் நபி(அலை...) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாகவே ஹஜ்ஜின் ஒவ்வொருக்கடமைகளும் அமைந்திருக்கின்றன. நாம் தினமும் தொழுகையின்போது அத்தஹியாத்தில் அவர்களுக்கு அல்லாஹ் அருள்ச்செய்ததை நினைவுக்கூறுகிறோம். இவ்வாறு இஸ்லாமிய வாழ்வின் பல்வேறு நிலைகளில் இப்ராஹீம்(அலை...) அவர்களை நினைவுகூறும் நாம் அத்தோடு நின்றுவிடாமல் அவர்களின் தியாகத்தையும் ஒரு முன்மாதிரியாகக்கொண்டு அதற்காக தயாராகவேண்டும். நபி இப்ராஹீம்(அலை...) அவர்கள் எதிர்கொண்ட நம்ரூத் போன்றக்கொடுங்கோலர்கள் இன்றும் மோடியின் வடிவிலும் ஓல்மர்ட்டின் வடிவிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் . காலங்களும் பெயர்களும் தான் மாறுகிறதைத்தவிர கொடூரர்களின் குணங்கள் மாறவில்லை. இவர்கள் நம் முஸ்லிம் உம்மத்தை அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் ஆட்படுத்திவருகிறார்கள். இவர்களிடகிருந்து நம் முஸ்லிம் உம்மத்தை பாதுகாத்திடவும், வலுப்படுத்தவும், இஸ்லாத்தை நிலை நாட்டிவிடவும் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் இன்றைக்கும் தேவைப்படுகிறது.
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.(9:111) பெருநாள் கொண்டாடினோம் சிறந்த ஆடைகளை அணிந்தோம், உயர் ரக உணவை உண்டோம் என்றில்லாமல் தியாகத்தின் தாடாகம் நபி இப்ராஹீம்(அலை..) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக்கொண்டு அந்த தாடாகத்திலிருந்து கிளம்பும் ஊற்றுக்களாக மாறுவோம்.
இன்ஷா அல்லாஹ்... 'தகப்பலல்லாஹ் மின்னா வ மின்கும்'
|