ஏர்வாடியில் அடிக்கல் நாட்டு விழா: ஏர்வாடி வளர்ச்சி மன்றத்தினர் அதிருப்தி
ஏர்வாடி:ஏர்வாடி டவுன் பஞ்.,சில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தாம்போதி பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நிதி திரட்டிய ஏர்வாடி வளர்ச்சி மன்றத்தினர் புறக்கணிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்துள்ளனர்.வளர்ந்து வரும் நகரங்களில் ஏர்வாடி ஒன்றாகும். ஏர்வாடி வளர்ச்சிக்கு ஏர்வாடி வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி ஏர்வாடி டவுன் பஞ்.,2வது வார்டு உப்பு வடக்கு தெருவிற்கும் 11 மற்றும் 12வது வார்டு 6வது தெருவிற்கும் இடையே தாம்போதி பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி தாம்போதி பாலம் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு தொகையான 3ல் ஒரு பங்கு கட்டுவதற்காக ஏர்வாடி வளர்ச்சி மன்ற தலைவர் அபுபக்கர், செயலாளர் அண்ணாவி உதுமான், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நிதி திரட்டினர்.
அதன்படி 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாம்போதி பாலம் கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.8 லட்சத்தை ஏர்வாடி வளர்ச்சி மன்றம் மூலம் அரசுக்கு செலுத்தினர். இந்நிலையில் அப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான அழைப்பிதழில் ஏர்வாடி வளர்ச்சி மன்றத்தின் நிர்வாகிகள் யாருடைய பெயரும் இடம் பெறவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த ஏர்வாடி வளர்ச்சி மன்றத்தினர் அழைப்பிதழை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். மேலும் நேற்று நடந்த நமக்கு நாமே திட்ட தாம்போதி பாலம் அடிக்கல் நாட்டு விழாவிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.காரணம் தாம்போதி பாலம் கட்டுவதற்காக அல்லும், பகலும் பொதுமக்களை சந்தித்து நிதி திரட்டி முக்கிய பங்கு வகித்த ஏர்வாடி வளர்ச்சி மன்றத்தினர் இவ்விழாவில் புறக்கணிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் டவுன் பஞ்., நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Tirunelveli#278998
|