Posted by Haja Mohideen
(Hajas) on 2/12/2010
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இலங்கையை சார்ந்த சகோதரியால் எழுதப்பட்டு குழுமத்தில் வெளிவந்த கடிதத்தை அப்படியே உங்களுக்கு பார்வேட் செய்கிறேன். அன்புடன் அனீஸ் முனவ்வர் அல்கோபார், சவூதி அரேபியா ---------- Forwarded message ----------
From: Lareena AH <lareenahaq@gmail. com> Date: 2010/2/11
அன்பார்ந்த சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு இயக்கங்களைப் பற்றியெல்லாம் தின்று தீர்த்துத் தண்ணீர் அருந்தியாயிற்று. ஆனாலும் தாகம் தீர்ந்தபாடாயில்லை. அடுத்து இனி யாரைத் தின்பது என்று தேடித்தேடிப் பார்த்ததில் புதிய "இரை" கிடைத்துவிட்டது. இனியென்ன, கொண்டாட்டம்தான்! மனிதன் மறதிக்கும் பலவீனத்துக்கும் இடையில் படைக்கப்பட்டுள்ளான் என்பதை நம்புகின்றோம். சகோதர முஸ்லிம் தவறிழைத்தால் நல்ல முறையில் சுட்டிக்காட்டித் திருத்த முனைகின்றோம். இது அல்லாஹ் கற்றத்தந்துள்ள நெறிமுறை.
ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புக்கள் ஒரே சமுதாயத்திலிருந்து தோன்றலாம் தப்பில்லை. அவரவரின் சக்திக்கு ஏற்ப அவரவரால் செய்யக்கூடிய பணிகளைச் செய்துவிட்டுத் தன்னுடைய பங்குக்குரிய கடமையைப் பூர்த்திசெய்யலாம். அவரவர் எண்ணத்திற்கும் பணிக்கும் தக்கபடி கூலிகொடுக்க அல்லாஹ் போதுமானவன். தவக்கல்த்து அலல்லாஹ்!
ஏற்கெனவே, சமுதாயம் சின்னாபின்னமாகி சீரழிந்துபோய் நடுத்தெருவில் கிடக்கின்றது, ஓர் அனாதைப் பிணம்போல. அதனை உயிர்ப்பிப்பதற்கு என்ன வழி என்று உண்மையான / ஆழமான அக்கறையோடும் சமூகக் கவலையோடும் முயற்சிப்பது எப்படிப் போனாலும் மனதால் எண்ணுபவர்கள், அதற்காகப் பிரார்த்திப்பவர்கள் உங்களில் எத்தனைபேர் உள்ளனர்? அந்தக் கணக்கு நிச்சயம் ரப்புல் ஆலமீனிடம் மிகத் தெளிவாக இருக்கும்.
குறித்த ஓர் அமைப்பு ஆரம்பத்தில் தமக்கென்று ஒருசில வரையறைகளைக் கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு களத்தில் இறங்கும். காலப்போக்கில் கள அனுபவம், சூழ்நிலை, அமைப்பின் வளர்ச்சிநிலை என்பவற்றுக்கமைய பழைய சட்டங்களைத் தளர்த்தலும் புதிய சட்டங்களைப் புகுத்தலும் மிக இயல்பான ஒன்று. நபி (ஸல்) அவர்கள் அர்கம் (றழி) அவர்களின் வீட்டில் ரகசிய தஃவா அணுகுமுறையைப் பின்னர் மாற்றி பகிரங்க தஃவா மேற்கொண்டதும் இதுபோன்றதுதான். அல்குர்ஆனில் சட்டங்கள் இறங்கிய படிமுறையும் இத்தகையதுதான். எடுத்த எடுப்பில் குற்றவியல் தண்டனைகளை அல்லாஹ் இறக்கிவிடவில்லை. அதற்குமுன் அகீதா தொடர்பான அம்சங்கள் நிலைபெற்று, இஸ்லாமிய ஆட்சியின் பலமான அத்திபாரம் போடப்பட்டபின்புதான் சமூக சட்டங்கள் படிப்படியாக இறங்கலாயின என்பதை அல்குர்ஆன் சட்டங்கள் இறங்கிய ஒழுங்குமுறை பற்றித் தேடிப் படிக்கும் யாரும் எளிதாக விளங்கிக் கொள்வார்கள்.இதுதான் யதார்த்தம்.
சாதாரண உலக வழக்கிலும்கூட இடம், பொருள், ஏவல் என்பன அறியாமல் திட்டமிடப்பட்ட எந்தவொரு போராட்டமும் வெற்றிகண்டதாய் சரித்திரமில்லை. நல்ல உதாரணம், மாவீரன் நெப்போலியனின் ரஷ்யப் படையெடுப்பின் படுதோல்வி, அவ்வாறே, இலங்கையின் மத்திய மலைநாட்டின் கண்டி ராஜ்ஜியத்தின் மீது எடுத்த எடுப்பில் படையெடுத்த பிரித்தானியப் படையினரின் ஆரம்பகாலப் படுதோல்விகள். எனவே, எந்த ஓர் இலக்குநோக்கிய பயணமும் படிப்படியாக, அடிபட்டும் மிதிபட்டும் தளராமல் அனுபவத்தின் ஒளியில் தமது முன்னெடுப்புகளை காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு முன்னெடுப்பதன் மூலமே வெற்றிகாண முடியும். அப்படி தமது திட்டவரைபுகளை மாற்றிக்கொள்வதைப் பார்த்து,'இதோ பார், இவன் பழைய கொள்கையைக் காற்றில் விட்டுவிட்டான் ' என்று கூக்குரலிடுவது பாமரத்தனமானது.
பலஸ்தீன் போராட்டம் ஆரம்பத்தில் "பயங்கரவாதம்" , "தீவிரவாதம்" என்றெல்லாம் சாயம்பூசப்பட்டு, முழு உலகமும் அதன் நியாயமான குரல் வெளிக்கிளம்பாமல் குரல்வளையை நெறிப்பதில் போட்டிபோட்டது. ஆனால், இன்று உலகெங்கிலும் பரவலாகப் பொதுமக்களிடையே இஸ்ரேலிய எதிர்ப்பு முனைப்புப் பெற்றுள்ளது. நிவாரண உதவிகளைச் சுமந்துசெல்லும் சமாதானக் குழுக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிமல்லாதவர்களே! நான்கு புறமும் முற்றுகையிடப்பட்ட நிலையில், அந்த மக்களின் போராட்டம் இந்தளவுக்கு எப்படி வெற்றிபெற்றது? காரணம், பலஸ்தீனுக்குள்ளும் பல்வேறு குழுக்கள், ஆயுதக்குழுக்கள் என்பன இருந்தாலும் பலஸ்தீன் சமுதாயப் போராட்டம் என்ற ஒற்றைப் புள்ளியில் அவை தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒன்றிணைந்து நிற்பதுதான். இந்திய தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் இன்று காணப்படுவது போல, எப்போது பார்த்தாலும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல அடுத்த அமைப்பையும் அடுத்த இயக்கத்தையும் சதா குற்றஞ்சாட்டிக்கொண்டும், சந்திக்கிழுத்து மானபங்கப்படுத்திக்கொண்டும் இருந்திருந்தால் பலஸ்தீனர்களால் மிகக் கடுமையான போராட்ட சூழலிலும் இந்தளவு வெற்றியை, அவர்களின் போராட்டம் நியாயமானதுதான் என்று அமெரிக்காவுக்குள்ளேயே, பிரட்டனுக்குள்ளேயே, ஃபிரான்சுக்குள்ளேயே ஆதரவுக்குரல்கள் எழுவது சாத்தியமாகியிருக்காது சகோதரர்களே.
குற்றமில்லாத மனிதர்களையோ குறைகள் இல்லாத அமைப்பையோ யாரும் ஒருபோதும் காண்பது சாத்தியமில்லை என்ற யதார்த்தம் முதன்முதலில் புரிந்துகொள்ளப்படவேண்டும். இருக்கின்ற குடிசைக்குள் உங்கள் குடுமிப்பிடி சண்டை நடந்துகொண்டிருக்கும்போது, பொது எதிரி வந்து சூழ்ந்து உங்கள் குடிசையை முற்றாக எரித்துவிட்டுப் போகும்வரை நீங்கள் உணர்ந்துகொள்ளப் போவதில்லை. இத்தகைய நிலை மிகப் பரிதாபகரமானது என்பதை நீங்கள் உணரவேண்டும் சகோதரர்களே.
சரி, எந்த ஓர் இயக்கமும் அமைப்பும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், எதை முற்படுத்துவது எதைப் பிற்படுத்துவது என்பதில் தெளிவுதேவை என்றுதான் சொல்லவருகின்றேன். இதைக்கூட அல்குர்ஆனின் ஒளியில்தான் சொல்கிறேனே தவிர என்னுடைய மனோஇச்சைப்படியல்ல.
20:92 (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) 'ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடைசெய்தது யாது? என்று கேட்டார்.
20:93 'நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?)நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?'
20:94 (இதற்கு ஹாரூன்:) 'என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோபிடி(த்திழு)க்காதீர்கள். 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள். என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாகநான் அஞ்சினேன்' என்று கூறினார்.
சூறா தாஹாவிலுள்ள வசனங்கள் இவை. காளைக் கன்றைக் கடவுளாக்கி இணைவைப்பில் மூழ்கிவிட்ட மக்களிடம் தௌஹீதை எத்திவைப்பது தான் என்முதல் கடமை என்று ஹாரூன் (அலை) அவர்கள் "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று செயற்படவில்லை. அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத குற்றம் இணைவைப்பு என்பதை அவர் அறியாதவரல்ல. என்றபோதிலும், சமுதாயம் பிளவுபடுவதால் ஏற்படக்கூடிய தீமை இன்னும் மோசமானதாகிவிடும் என்று கண்டே நபி மூஸா (அலை) வரும்வரை சற்றுத் தாமதிக்கிறார். அறிவுபூர்வமாக சிந்திக்கும் மக்களுக்கு இந்த வசனங்களில் மிகச் சிறந்த முன்மாதிரி இருப்பதாகவே நான் காண்கின்றேன்.
எனவே, இன்று இந்திய தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய பொதுப்பிரச்சினை என்ன? அதைத் தீர்ப்பதற்கு முதலாவது செய்யவேண்டியதென்ன என்பதைச் சிந்திப்பதற்குத் தடையாக உங்கள் முன் நிற்பது எது? உங்கள் ஈகோவா? நீங்கள் சார்ந்துள்ள அமைப்பைத் தவிர மற்ற அமைப்பெல்லாம் அழிந்து போகவேண்டும் என்ற வெறியா? சீண்டிப் பார்த்து நெருப்பு மூட்டி அதில் குளிர்காய வேண்டுமென்ற வக்கிரபுத்தியா? யார் அடித்துக்கொண்டு எப்படிச் செத்தால் எனக்கென்ன, எனக்கு பார்த்து ரசிக்கப் பொழுதுபோக்கு இருந்தால் சரிதான் என்ற சின்னத்தனமான எண்ணமா? அல்லது சமூக சீர்திருத்தம் என்பதே இப்படி காரசாரமாக ஒருவரையொருவர் விமர்சித்து அண்ணாந்து பார்த்து எச்சில் துப்பிக் கொள்வதுதான் என்று நினைத்து எதிரியின் வேலைப் பளுவைக் குறைக்கும் அறியாமையா? இதில், நீங்கள் எந்தவகை (catogary)யைச் சேர்ந்தவர் சகோதரர்களே?
இருக்கின்ற இயக்கங்கள், அமைப்புகள் தம்மளவில் ஏதோ பணிகளைச் செய்துவருகின்றன. குறைபாடுகளுடனேனும் அவற்றை அங்கீகரித்து, அவற்றுக்குள் ஏதோ ஒருவழியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நமது சமுதாயத்தைப் பலப்படுத்துவதை விட்டுவிட்டு இப்படி ஆளாளுக்கு தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக்கொள்ளும் இத்தகைய "புண்ணிய"(?!!) காரியங்களால் பின்வரும் "புனித விளைவுகளே"(?!!) ஏற்பட முடியும்:
1.சமூகத்தில் மேன்மேலும் பிளவு
2.இயக்கங்கள், அமைப்புக்கள் மத்தியில் இன்னும் சிலகாலம் சென்றாவது ஒருங்கிணையக்கூடிய சாத்தியப்பாடுகள் முற்றாகத் தூரமாகி இன்னுமின்னும் மனக்கசப்பு மிகைத்தல்
3.மக்கள் மத்தியில், பார்த்துக்கொண்டு போனால், யாருமே லாயக்கற்றவர்களாக இருக்கிறார்களே! அப்படியானால், நமது விடிவுக்காக உழைக்க எவருமே இல்லை என்ற மனக்கலக்கம், விரக்தி ஏற்படுதலும் உளவியல்ரீதியாக இன்னும் இன்னும் பலவீனப்பட்டு காலப்போக்கில் அடிமைத்துவ மனப்பான்மை ஊன்றிவளர்தல்..
4.எதிரியின் வேலை இலகுவாகுதல்
5. இன்னும் குறைந்தது ஒரு நூற்றாண்டு காலத்துக்காவது இந்திய தமிழ் முஸ்லிம் சமுதாயம் எழவே முடியாத பின்னடைந்த சமூகமாக மாற நீங்களே வழியமைத்துக் கொடுப்பது.
இந்த நிமிஷம் நான் இலங்கையைச் சேர்ந்தவள் என்பதைப்பற்றிப் பெருமைப்படுகின்றேன், அல்ஹம்துலில்லாஹ். அங்கே நாம் 2வது சிறுபான்மையாக இருந்தாலும், பொதுப்பிரச்சினை என்ற வரும்போது (உதாரணம்: மாவனல்லை கலவரம், 90 ல் வடபுல முஸ்லிம் வெளியேற்றம், காத்தான்குடி பிரச்சினை, சுனாமி) இயக்க , கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் இனியும் செயல்படுவோம். இந்திய தமிழ் முஸ்லிம் சமூகம் இப்படி சிண்டுமுடி சண்டைபிடிப்பதைப் பார்த்து எனக்கு உண்மையிலேயே வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. இதைப்படித்துவிட்டு உண்மையிலேயே உங்களுக்கு ரோஷம் வந்தால் (அப்படி ஓர் உணர்வு உங்களுக்கு இருந்தால்) இனியாவது இந்த உள்வீட்டுச் சண்டைகளை ஓரம்கட்டிவைத்துவிட்டு ஒன்றிணைந்து பொதுப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வென்று காட்டுங்கள், பார்க்கலாம்!
"அனைத்தையும் சூழ்ந்தறிந்துகொண்டிருக்கும் யா ரப்புல் ஆலமீனே! நீதியான தீர்ப்பு வழங்கும் யா அல்லாஹ்!
யார் யாரெல்லாம் சமூக ஒற்றுமையை விரும்பி, தங்கள் உடலாலும் பொருளாலும் உயிராலும் மட்டுமன்றி எழுத்தாலும் எண்ணத்தாலும் ஒருசிறு துளியளவேனும் முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நீ கண்ணியத்தையும் சிறப்பையும் பாக்கியங்களையும் வழங்கி உன் அருளைப் பூரணமாகப் பொழிவாயாக!
அவ்வாறே, உள்ளங்களை நன்கறிந்தவனே யாரப்புல் ஆலமீனே!
யார் யாரெல்லாம் தமது சுயநலன்களுக்காகவும் மனோ இச்சைக்காகவும் தமது பொறுப்பற்ற செயல்பாடுகளாலும் சமுதாயத்தின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, சின்னபின்னமாக்கி, அதன்மூலம் எதிரிகளைப் பலசாலிகளாக்கி நமது பெண்களின் மானம் பறிக்கப்படவும், நமது பச்சிளம் பாலகர்கள் கொல்லப்படவும், நமது இளைஞர்களும் வயோதிகர்களும் சித்திரவதைகளுக்கு உட்படவும் நமது மக்களின் உடைமைகள் சூறையாடப்படவும் காரணமாக அமைகின்றார்களோ அவர்களையெல்லாம் நீ இம்மையிலும் மறுமையிலும் இழிவுபடுத்தி, மிகக் கடுமையான தண்டனையைக் கொண்டு பிடித்துக்கொள்வாயாக! அவர்களின் தீங்கைவிட்டு இந்த முஸ்லிம் சமுதாயத்தைக் காப்பாற்றுவாயாக! "
சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைத்து நம்மை நாமே சந்தி சிரிக்கவைக்குமுகமாகத் தேவையற்ற மடல்களை இக்குழுமத்துக்கு அனுப்புபவர்களும், அதை இன்னுமின்னும் ஆதரித்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் குளிர் காய்பவர்களும், இத்தகைய மடல்களை பிரசுரித்து முஸ்லிம் உம்மத்தை இன்னுமின்னும் பலவீனப்படுத்துவதில் மறைமுகமாகப் பங்களிப்புச் செய்யும் மாடரேட்டர்களும் அல்லாஹ்விடம் நாளை மறுமையில் பதில் சொல்லிக் கொள்வார்களாக!
வெதும்பிப் போன மனதுடன், இஸ்லாமிய சகோதரி, லறீனா அப்துல் ஹக். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |