திங்கள்கிழமை, மார்ச் 22, 2010, 16:41[IST]
சங்கரன்கோவில்: காற்றாலை மின்சாரம், நீர் மின் திட்டம் மற்றும் மாற்று மரபுசாரா எரிசக்தி திட்டங்களை சரியாக பயன்படுத்தாததே தமிழகத்தில் மின் தட்டுப்பாடுக்கு காரணம் என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட 18வது மாநாடு மற்றும் பேரணி சங்கரன்கோவிலில் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுபாட்டு குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசுகையில்,
'தாமிரபரணி மட்டும் தான் நம் மாநிலத்தில் உருவாகி நமக்கு குடிநீர் வழங்கி 1 லட்சம் ஏக்கர் பாசன சாகுபடிக்கு பயன்பட்டு 75 கிமீ தொலைவு பாய்ந்து கடலில் கலக்கிறது.
நதிகளை இணைக்க ரூ.198 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. இது நல்ல திட்டம் வரவேற்கிறேன். பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கிறதே தவிர பிரச்சனைகளை தவிர்க்க வழி இல்லை.
தமிழ்நாட்டில் மின்தடைக்கு காரணமே இல்லை. 39 நதிகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டில் தமிழகத்தில் அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சீமை கருவேல மரத்தில் இருந்து கரி தயாரிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் முழுமையாக பயன்படுத்தவில்லை. இதனால் தான் தமிழகத்தில் ஒரு வருடமாக மின்தடை இருந்து வருகிறது' என்றார்.
|