நாள்தோறும் வெளிவரும் பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற ஊடகங்களில் பொழுதுபோக்கு என்ற பெயரில் ஆபாசங்களும், வன்முறைகளும் அருவருக்கத்தக்க செய்திகளுமே வந்து கொண்டிருக்கின்றன. இதனை காணும் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் வயதானவர்கள் என அனைவரும் தங்கள் கடமைகளை மறந்து அதிலே கிடப்பதும் அதற்கேற்றவாறு தங்கள் வாழ்கையை மாற்றிக் கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது.
இதனால் குழந்தைகள் பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள், வரதட்சணை கொடுமைகள் மற்றும் குடும்ப வன்முறைகள் என இன்றைய சமுதாயம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையையும் படிப்படியாக இழந்து வருகின்றனர்.
இன்றைய தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்ற மியூசிக் சேனல்கள் மற்றும் மெகா சீரியல்களால் மக்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை பொழுதுபோக்கு என்ற பெயரில் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் ஏற்படுகின்ற விளைவுகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. மேலும் பல குடும்பங்களில் கணவன் மனைவி பிரச்சனைகள், தகாத உறவுகள், கல்வியில் பின்தங்குகின்ற நிலை மற்றும் மனநிலை மாற்றம் அடைதல் போன்ற விளைவுகள் தான் ஏற்படுகிறது.
ஏதாவது ஒரு மெகா சீரியலில் ஒருதடவை அமர்ந்துவிட்டால் பின்பு அதனை விட்டு எழுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும். அதுவும் குறிப்பிட்டு சொல்ல முடியாது எப்பொழுது அந்த சீரியல் முடியும் என்று. பல வருடங்களாகியும் முடியாமல் இன்னும் நீண்டுக் கொண்டிருக்கின்ற எத்தனையோ சீரியல்களை இதற்கு உதாரணம் கூறலாம். பொழுதுபோக்கு என்ற பெயரில் ஒளிபரப்பப்படும் இதுபோன்ற சீரியல்களால் சமுதாயத்திற்கு எந்த நல்ல விசயங்களும் இல்லை.
குறிப்பாக பெண்கள் சீரியல் ஒளிபரப்பப்படும் நேரத்தில் தங்கள் எல்லா கடமைகளையும் மறந்து விடுவார்கள். தங்கள் குழந்தைகள், கணவன், பெற்றோர்கள் இவர்களை விட இந்த கேடுகெட்ட சீரியல்கள் முக்கியமாகப்படும். அந்தளவுக்கு மெய்மறந்து விடுவார்கள். கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண்கள் கூட இதனால் தடம்புரண்டு விடுகிறார்கள். அவர்கள் தங்கள் கணவனின் பேச்சைக் கூட உதாசீனம் செய்ய துணிந்து விடுகிறார்கள். தங்களின் எதிர்காலத்தை தாங்களே கேள்விக்குரியாகின்றனர்.
அந்தளவுக்கு இந்த சீரியல்கள் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் இருக்கின்ற அமைதி, சந்தோசம் கேள்விக் குறியாகிறது. மேலும் இந்தக்குடும்பப் பெண்கள் இது போன்ற சீரியல்களில் வரும் பெண்களை தங்கள் முன்மாதிரிகளாக எடுத்துக் கொண்டு சீரழிகின்றனர். இதுவும் ஒருவகையான போதைப் பழக்கமே.
இதுபோன்ற போதை அல்லது மாயையிலிருந்து மக்கள் குறிப்பாக பெண்கள் விடுபட வேண்டும். அவர்கள் தங்கள் கணவனோடு குடும்பத்தினர்களோடு தங்கள் வாழ்க்கையை செலவழிக்க வேண்டும். வருங்கால் சமுதாயத்தினருக்கு நாம் தவறான வழிகாட்டியாக இருந்து விடக் கூடாது. அல்லாவும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த பாதையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நம் பெண்கள் முன் வர வேண்டும். அதுதான் இம்மை மறுமை இரண்டுக்கும் வெற்றி. நம் சமுதாய பெண்கள் இதுபோன்ற வழிகேட்டிலிருந்து விலகி நேர்வழி பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!
Mohamed RIZWAN Download As PDF